வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (14/10/2017)

கடைசி தொடர்பு:09:30 (14/10/2017)

கம்பீர் - நிராகரிக்கப்படக் கூடாத கிரிக்கெட்டர்! #HBDGauti

`கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்’ என்ற பெயரைக் கேட்டவுடன், என்னவெல்லாம் நினைவுக்கு வரும்? தமிழக வீரர்; இந்திய அணியின் முன்னாள் கேப்டன்; தோனியின் தலைமையில் உலகக்கோப்பை வென்ற அணியைத் தேர்வுசெய்ததில் முக்கியப் பங்காற்றியவர்; முதல் பதினைந்து ஓவர்களில் அடித்து ஆடும் வித்தையை அறிமுகப்படுத்தியவர்... இன்னும் பல. இவையெல்லாம் இருந்தாலும் `ஸ்ரீகாந்த்' என்றதும் பட்டென நினைவில் ஃப்ளாஷ் ஆகக்கூடிய விஷயம் ஒன்று உண்டு. அது, 1983-ம் வருடம் ஜூன் 25-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் அசுரபலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்த 38 ரன்கள்தான்.

என்னதான் டெஸ்ட் கிரிக்கெட் என்பது கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் என்றாலும், ஓர் உலகக்கோப்பையை வெல்வதற்கு நிகராக எதுவுமே இல்லை. அன்று இந்தியா அடித்த 183 ரன்களில், ஸ்ரீகாந்தின் 38-தான் அதிகபட்சம். 43 ரன்களில் இந்தியா வெற்றிபெற்று, அதுவரை கிரிக்கெட் உலகில் கோலோச்சிக்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

கம்பீர்

1983-ம் ஆண்டு முதல், அடுத்த இருபது வருடங்களில் அதாவது ஐந்து உலகக்கோப்பைகளில் ஒருமுறை மட்டுமே இந்தியா ஃபைனலுக்கு முன்னேறியது. 2007 உலகக் கோப்பையில் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தலைமையின் கீழ் அணி பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டதுதான் மிச்சம். இந்தியா முதல் சுற்றுடன் நாடு திரும்ப, கொந்தளித்தனர் ரசிகர்கள். அதே ஆண்டு ஐசிசி முதன்முறையாக டி-20 உலகக்கோப்பையை அறிவிக்க, சீனியர்ஸ் சச்சின், டிராவிட், கங்குலி எல்லோரும் விலகிக்கொள்ள, சேவாக்குடன்  தொடக்க ஆட்டக்காரராகக் களம்கண்டார் கவுதம் கம்பீர். அதற்கு முன்னரும் அவர் இந்தியாவுக்காக பலமுறை தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார்.  அவையெல்லாம் சச்சின் ஓய்வில் இருந்ததால் கம்பீருக்குக் கிடைத்த வாய்ப்புகள். 

ரஞ்சி முதல் இந்தியா வரை

வாசிம் ஜாஃபர், ஸ்ரீதரன் ஸ்ரீராம், ஸ்ரீதரன் சரத், அமோல் மசூம்தார் போன்ற ரஞ்சி ஜாம்பவான்களைப்போல கம்பீரும் சர்வதேச அரங்கில் ஜொலிக்காமல்போய்விடுவாரோ என்ற அச்சம் மேலோங்கியது. காரணம், டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அணியின் டீஃபால்ட் ஆப்ஷன்களாக இருந்தனர். அதிலும், தொடர்ந்து 16 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா வந்த ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை போராடி வென்றபிறகு, இந்த பேட்டிங் தூண்களைத் தாண்டித் துளைக்கவேண்டுமென்றால் தொடர்ந்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயமிருந்தது.  ஆனால், அதற்கு ஒரு வழியும் இருந்தது.

டெஸ்ட் போட்டிகளில் தரமான ஒரு தொடக்க ஆட்டக்காரர் இல்லாமல் இந்தியா வெகுகாலமாகத் திண்டாடியது.  நீண்ட காலம் விளையாடிய டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் யார் எனப் பார்த்தால், நம்முடைய தேடல், சுனில் கவாஸ்கரில் முடியும். ஏனென்றால், நிரந்தரமாக நிலைத்து ஆடக்கூடியத் தொடக்க ஆட்டக்காரரைக் கண்டெடுக்க முடியாமல் இந்தியா திக்கித் திணறியது. இதனாலேயே, டிராவிட் கிட்டத்தட்ட ஒரு தொடக்க வீரரைப்போல பல ஆட்டங்களில் இந்தியாவை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.

கம்பீர்

ரஞ்சி ஆட்டங்களில் ஒவ்வொரு சீஸனிலும் சதங்களைக் குவித்துவிட்டு, சின்ன வாய்ப்புக்காகக் காத்திருந்தார் கம்பீர். அவருக்கு முன்னர், சடகோபன் ரமேஷ், ஷிவ் சுந்தர் தாஸ், ஆகாஷ் சோப்ரா, ஜாஃபர், தினேஷ் கார்த்திக்... என ஒவ்வொரு சீஸனுக்கும் ஒவ்வொரு வீரரை வைத்து ஒப்பேற்றிக்கொண்டிருந்தது இந்தியா. சேவாக்கின் அடித்து ஆடும் திறனைப் பார்த்த கங்குலி, ‛டெஸ்ட் ஆட்டங்களில் மிடில் ஆர்டரில் ஆடியதுபோதும், ஓப்பனிங் இறங்குங்கள்’ என்று கேட்க, ஒரு பக்கம் சேவாக் பௌண்டரிகளாக விளாச, எதிர் திசையில் தொடருக்கு ஒரு வீரர் என ஆள்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள்.

2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற நிலையில் இழந்திருந்தபோது, கம்பீர் தன்னுடைய ரஞ்சி ரெக்கார்டுகள் மூலம் டெஸ்ட்டில் இடம்பிடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த அந்த ஆடுகளத்தில், இரு அணிகளிலும் சொல்லிக்கொள்ளும்படியாக யாரும் ரன் அடிக்கவில்லை. கிடைத்த போட்டியில் எதுவும் செய்ய முடியாமல்போனாலும், அதன் பிறகு மெதுவாக தன்னுடைய இருப்பை ஒரு நாள் ஆட்டங்களில் நிரூபிக்க ஆரம்பித்தார். அவ்வப்போது மிடில் ஆர்டரில் தலைகாட்டி பெரிதாக சோபிக்காமல்போனாலும், ஏதோ தன் பங்குக்கு அவ்வப்போது கம்பீர் அரை சதங்கள் அடித்தார். ஆனாலும், அவை 2007 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடத்தைப் பெற்றுத்தர உதவியாக இல்லை.

இயல்பிலேயே ஆக்ரோஷ குணத்தைக்கொண்ட கம்பீருக்கு, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும்போது இன்னமும் வெறியேறும். பாகிஸ்தானின் அஃப்ரிடி முதல் அக்மல் வரை யாராவது ஒருவர் கம்பீரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டே இருப்பார்கள். இந்தியா முதல்முறை பாகிஸ்தானை `பெளல் அவுட்’ முறையில் வெற்றிகொண்டு, அடுத்தடுத்து போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அடித்து நொறுக்கி இறுதிக்கு முன்னேறினால், மீண்டும் பாகிஸ்தான். சேவாக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விலக, யூசுஃப் பதான் தன் முதல் ஆட்டத்தை இந்தியாவுக்காக ஆடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய, தனி ஆளாகப் போராடி அணியின் எண்ணிக்கையில் பாதி அடித்து (75) இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். இருபது ஓவர் உலகக்கோப்பையின் வெற்றிக்கு வித்திட்ட கம்பீர், அப்போது முதல் இந்தியாவுக்காக மூன்றுவிதமான போட்டிகளிலும் முன்னிலை ஆட்டக்காரராகத் திகழ ஆரம்பித்தார்.

கம்பீர்

அதே ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியில் கம்பீருக்கு இடம் கிடைக்காவிடினும், தோனியின் தலைமையில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்ற அணியில் இடம்பிடித்தார். இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக தலா ஒரு சதம் அடிக்க, சச்சினுக்குப் பிறகு சேவாக்குடன் ஆட்டம்போட தரமான ஒரு வீரர் இருக்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் வீரர்

2009-ம் ஆண்டின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள், இரட்டை சதம் அடித்தது, நியூஸிலாந்துக்கு எதிராக 11 மணி நேரம் களத்தில் இருந்து அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியது என கம்பீர், இந்தியாவின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக உருமாறியிருந்தார்.

``சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர் என்றால் அது கம்பீர்தான்” என்று சேவாக் முன்மொழிந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் உபயோகப்படுத்தப்படும் பந்து, நீண்டநேரம் ஸ்விங் ஆகும். அதை மழுங்கடித்து, பந்து அதன் வீரியத்தை இழக்கும் வரையில் தொடக்க வீரர்கள் பொறுமையாக ஆடினால் மட்டுமே, மிடில் ஆர்டரில் வரும் வீரர்கள் அடித்து ஆடி ரன்களைச் சேர்க்க முடியும். சடகோபன் ரமேஷுக்குப் பிறகு, இடதுகை தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாதபோது கம்பீரின் வருகை மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. ஒருபக்கம் சேவாக் அடித்து ஆட, மறுபக்கம் கம்பீர் பொறுமையாக விக்கட்டை இழக்காமல் அதே நேரத்தில், சிறுகச் சிறுக எண்ணிக்கையை உயர்த்தினார்.

தென்னாப்பிரிக்காவில் தொடரை சமன் செய்தும், நியூஸிலாந்தில் வென்றும், இந்தியாவில் தொடர்ந்து யார் வந்தாலும் துவம்சம் செய்தும் முதல்முறையாக டெஸ்ட் தரவரிசையில் இந்திய முதல் இடத்தைப் பிடிக்க, கம்பீரின் அநாயசமான ஆட்டத்திறன் உதவிபுரிந்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல 2011-ம் ஆண்டின் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் கம்பீர் அடித்த 97 ரன்கள், இந்திய கிரிக்கெட்டின் பொக்கிஷம்.  

கம்பீர்

28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமுறை நிச்சயம் உலகக்கோப்பையை வென்றுவிடுவார்கள் என்று ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்க, முதல் ஓவரில் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்புகிறார். இந்திய மக்கள் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை சேவாக், சச்சின், யுவராஜ், தோனி எனப் பிரித்துப் பிரித்து வைத்திருந்தாலும், கொஞ்சம்கூட தடுமாறாமல் முதல் ஓவரிலேயே உள்ளே வந்தாலும், உலகக்கோப்பையில் இந்தியா ஒரு கையை வைத்துவிட்டது என நம்பிக்கை அளிக்க தொடங்கிய தருணம், கம்பீர் பொறுமையாக அடித்து ஆரம்பித்த நேரம்தான்.

ஸ்பின் பௌலர்கள் யாராக இருப்பினும், கம்பீரின் நேர்த்திக்கு பந்து வீசுவது கடினம். கொஞ்சம் ஏறி வந்து, பந்து ஸ்பின் ஆகும் முன்னரே கவர் - எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்கும் அந்த ஒரு ஷாட் இன்னமும் வேறு எவராலும் பிரதி எடுக்க முடியாதிருப்பது கம்பிரின் சிறப்பு. மூன்று ரன்களில் சதத்தை இழந்தாலும், வெற்றிக்குப் பிறகு `இந்த வெற்றியை இந்தியாவின் ராணுவ வீரர்களுக்குச் சமர்பிக்கிறேன்' எனக் கூறிய முதல் வீரர். நம் எல்லோருடைய மனதிலும் தோனி, குலசேகராவின் பந்தில் லாங் ஆன் திசையில் அடித்த சிக்ஸர்தான் ஞாபகம் வரும். ஆனால், அதன் பின்னால் கம்பிரின் வியர்வைத் துளிகள் வழிய வழிய பெற்ற 97 ரன்களும் என்றென்றும் நினைவுக்கூரத்தக்கது.

2015-ம் ஆண்டின் உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு, தோனி, ``சேவாக் - கம்பீர் - சச்சின் என மூவரில் இருவர்தான் விளையாட முடியும். ஒருவர் மற்றவருக்கு இடமளிக்க வேண்டும். ஏனெனில், மூவரும் களத்தில் கொஞ்சம் மெதுவாக ஃபீல்டிங் செய்பவர்கள்'' என கருத்துக்கூற, அங்கு ஆரம்பமாகியது பிரச்னை. உலகக்கோப்பை வென்ற கையோடு இங்கிலாந்தில் 0-4 என்று தோற்ற தொடரில், ஒரு கேட்சைத் தவறவிட்டு தலையில் அடிபட்டு நாடு திரும்பிய கம்பீர், அதே வருடத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரிலும் சோபிக்கவில்லை. தொடர்ந்து வாக்குவாதங்கள், அறிக்கைப் போர்கள். இவை எதுவும் அவருக்கு வலுசேர்க்கவில்லை.

கம்பீர்

அதற்கடுத்த வருடங்களில், தமிழ்நாட்டின் முரளி விஜய் தொடக்க வீரராகக் களம் காண, கம்பீரால் மீண்டும்  நிலையான ஓர் இடத்தை அடைய முடியாமல்போய்விட்டது.

ஐபிஎல் தொடரில் தன்னுடைய சொந்த அணி தன்னைக் கழட்டிவிட்ட பிறகு, சுமாராக இருந்த கொல்கத்தாவை தன்னுடைய திட்டமிட்ட தலைமையினால் அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளை வாங்க உதவினார். அதில் ஒரு தொடரில், தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் ரன் ஏதும் குவிக்காதபோதும், மீண்டும் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து தன்னை நிரூபித்தார். ஐபிஎல் தொடரில் 35 அரை சதங்களுக்குமேல் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் முதல் வீரர் கம்பீர்.

தன்னுடைய 36-வது வயதில் அடியெடுத்து வைத்தாலும், இன்னமும் இந்திய அணிக்காக விளையாடுவதில் முனைப்புடன் செயல்பட்டு, இந்த ரஞ்சி சீஸனை செஞ்சுரியோடு தொடங்கியிருக்கும் கம்பீருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!