வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (15/10/2017)

கடைசி தொடர்பு:14:30 (15/10/2017)

ஆசிய அளவிலான சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற கோவை இளைஞர்!

ஆசிய அளவிலான சைக்கிள் போட்டியில், கோவையைச் சேர்ந்த அஸ்வின் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

கோவை
 

ஆசிய நாடுகளுக்கு இடையே நடக்கும், ட்ராக் ஆசிய கோப்பை சைக்கிள் போட்டி, டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 10-க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 150 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.

கோவை
 

இதில், இந்தியாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கோவையைச் சேர்ந்த அஸ்வின் என்ற மாணவரும் ஒருவர். இந்திய அணியில், தமிழகத்தின் சார்பாக இருக்கும் ஒரே நபர் அஸ்வின்தான். அஸ்வின் கோவை, எஸ்.என்.ஆர் கலைக்கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் நடந்த போட்டியில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார் அஸ்வின். மேலும், இந்தப் போட்டியில் 7 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என்று 21 பதக்கங்கள் பெற்று, பதக்கப் பட்டியலிலும் இந்தியாவே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனிடையே, அஸ்வின் நேற்று கோவை திரும்பினார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சி எடுத்துவரும் அஸ்வினின் அடுத்த டார்கெட் காமன்வெல்த் போட்டிகள் தானாம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பதக்கம் பெறுவதற்காக, இப்போதே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அஸ்வின். ஆனால், தற்போதுவரை மாநில அரசு இவருக்கு எந்த உதவியையும் செய்யவில்லை.