வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (15/10/2017)

கடைசி தொடர்பு:10:27 (16/10/2017)

புறக்கணிக்கும் தேர்வாளர்கள்: ரஞ்சி தொடரில் இரட்டை சதமடித்து அசத்திய ஜடேஜா!

ஜம்மு- காஷ்மீர் அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சௌராஷ்ட்ரா அணி வீரர் ஜடேஜா இரட்டை சதமடித்து அசத்தினார். 

முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர், ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர் மற்றும் விரைவில் தொடங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஜடேஜாவுடன், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினும் சேர்க்கப்படவில்லை. இதனால், அவர்கள் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அஷ்வின் தமிழக அணிக்காகவும், ஜடேஜா சௌராஷ்ட்ரா அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். 

குஜராஜ் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்துவரும் ஜம்மு- காஷ்மீர் அணிக்கெதிரான போட்டியில் 313 பந்துகளில் 201 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. இதில் 23 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். முதலில் பேட் செய்த சௌராஷ்ட்ரா அணி, ஜடேஜாவின் இரட்டை சதம் மற்றும் ஷெல்டன் ஜாக்சனின் 181 ரன்கள் உதவியுடன், 7 விக்கெட் இழப்புக்கு 624 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அணி தேர்வில் இருந்து கடந்த 2 மாதங்களாகத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், ஜடேஜா இரட்டை சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.