வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (15/10/2017)

கடைசி தொடர்பு:08:40 (16/10/2017)

ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி #INDvPAK

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

வங்கதேசத் தலைநகர் தாகாவில் நடந்த இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணி சார்பில் சிங்லென்சனா, ராமன்தீப் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் கோலடித்து இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தனர். போட்டியில் இறுதிக் கட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் அலி ஷான் ஒரு கோலடிக்க, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது. சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாகப் பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் ஏ பிரிவில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 5-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்திய மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை 7-0 என்ற கணக்கில் வென்றது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, ஜப்பான் அணியுடனான முதல் போட்டியை 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் 7-0 என்ற கணக்கில் வென்ற பாகிஸ்தான், ஏ பிரிவில் இருந்து இந்திய அணியுடன் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது.