வெளியிடப்பட்ட நேரம்: 01:17 (18/10/2017)

கடைசி தொடர்பு:11:29 (18/10/2017)

ஶ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை தொடரும்..! கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஶ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை தொடரும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது இவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி நீதிமன்றம் ஸ்ரீசாந்தை கைதுசெய்தது. இதனால் பி.சி.சி.ஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஸ்ரீசாந்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. 

இருப்பினும் பி.சி.சி.ஐ ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பி.சி.சி.ஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பி.சி.சி.ஐ-யால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் உயர்நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறி, ஸ்ரீசாந்த் அயுட்கால தடை நீக்க உத்தரவை ரத்துசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், ஶ்ரீசாந்த் மீதான ஆயுட்காலத் தடை நீடிக்கிறது.