வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (18/10/2017)

கடைசி தொடர்பு:17:35 (18/10/2017)

வங்கதேசத்தைப் பந்தாடிய தென்னாப்பிரிக்கா... இரட்டை சத வாய்ப்பைத் தவறவிட்ட டிவில்லியர்ஸ்!

வங்க தேச கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம்செய்து, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடிவருகிறது. இந்நிலையில், இன்று நடந்துவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி, 353 ரன்கள் எடுத்துள்ளது.

டிவில்லியர்ஸ்

இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரேயொரு ஒருநாள் போட்டி முடிவடைந்துள்ளது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற வங்க தேச அணி, பௌலிங் செய்ய தீர்மானித்தது. 

முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் அம்லா மற்றும் டிகாக், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் முறையே, 85 மற்றும் 46 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் டூப்ளிஸிஸ், ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பின்னர் வந்த டிவில்லியர்ஸ், வங்க தேச அணி பௌலர்களின் பந்துகளை மைதானத்தின் நாலா புறமும் சிதறடித்தார். அவர் ஆடிய வேகத்துக்கு, நிச்சயமாக இரட்டை சதம் அடித்துவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 176 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். தென்னாப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்துள்ளது. 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்க தேச அணி அடுத்து இறங்கப்போகிறது.