வெளியிடப்பட்ட நேரம்: 09:21 (19/10/2017)

கடைசி தொடர்பு:10:11 (19/10/2017)

இமாம் உல் ஹக் அசத்தல் சதம்... தொடரை வென்ற பாகிஸ்தான்!

இமாம் உல் ஹக்கின் அசத்தல் சதம் மற்றும் ஹசன் அலியின் 5 விக்கெட்டுகள் உதவியுடன், இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது. 

Photo: ICC  

அபுதாபியில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஹசன் அலியின் அசத்தல் பந்துவீச்சில் நிலைகுலைந்தது. 5 போட்டிகள்கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் வென்றதால், தொடரில் நிலைத்திருக்க இந்த போட்டியில் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால்,  இலங்கை அணி 48.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக, உபுல் தரங்கா 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இலங்கைப் பந்துவீச்சாளர்கள் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. இலங்கைப் பந்துவீச்சை எளிதாக சமாளித்த பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் தரப்பில், முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் உறவினரான இமாம் உல் ஹக், தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அவர், 125 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சலீம் இலாஹிக்குப் பின்னர் அறிமுகப் போட்டியில் சதமடிக்கும் 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை இமாம் பெற்றார். முதல் 2 போட்டிகளில் சதமடித்த பாபர் ஆஸம், 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின்மூலம் 5 ஒருநாள் போட்டிகள்கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில், பாகிஸ்தான் அணி பெறும் தொடர்ச்சியான 7-வது வெற்றி இதுவாகும். அதேபோல, இலங்கை அணி சந்திக்கும் தொடர்ச்சியான 10-வது தோல்வி இது.