வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (19/10/2017)

கடைசி தொடர்பு:13:43 (19/10/2017)

சகோதரரின் தியாகத்தால் ஜூடோ போட்டியில் சாம்பியனான மும்பை இளைஞன்!

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஷரிக். ஹாக்கியில் தேசிய அளவில் ஜொலித்தவர். இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் இருந்தார். அந்தத் தருணத்தில் தன் தம்பி ஜூடோவில் ஜொலிப்பதைப் பார்த்து, தம்பியின் கனவை நிறைவேற்றுவதற்காக ஹாக்கியில் இருந்து விலகி, ஓர் அலுவலகத்தில் சாதாரண வேலையில் சேர்ந்தார். எட்டு ஆண்டுகளாக தன் சம்பளம் முழுவதையும் தம்பியின் ஜூடோ பயிற்சிக்கு வழங்கி இருக்கிறார் ஷரிக்.

ஜூடோ

ஷரிக் செய்த உதவி வீண் போகவில்லை. 18 வயதே நிரம்பிய ஷரிக்கின் தம்பி தாபீஷ் ரஸா ஷேக் மும்பை பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த ஜூடோ போட்டியில், 90 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.

இந்தப் போட்டியில் தானே, ராஜ்காட் மற்றும் மும்பையைச் சேர்ந்த 16 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இறுதிப்போட்டியில் 30 விநாடிகளில் அனைத்துப் புள்ளிகளையும் பெற்று போட்டியாளர்களுக்கு கிலியையும், நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார் தாபீஷ். இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஜூடோ போட்டியில் மும்பை பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 

தாபீஷின் வெற்றிக்கு அவரது குடும்பமே உழைத்திருக்கிறது. அவரது அப்பா மதரஸா பள்ளி ஆசிரியர் என்றாலும் மூன்று மகன்களையும், ஒரு மகளையும் பள்ளியில் படிக்க வைக்கவே கஷ்டப்பட்டிருக்கிறார். ஜூடோ பயிற்சியில் சேர இளைய மகன் கண்ட கனவுக்கு குடும்பச்சூழல் உதவவில்லை. இந்தநிலையில், மூத்த மகன் ஷரிக் ஹாக்கி அணியில் இடம்பிடிக்க தீவிரப் பயிற்சி மேற்கொண்டிருந்திருக்கிறார். தம்பியின் கனவை நனவாக்கும் நோக்கில், ஹாக்கி பயிற்சியில் இருந்து விலகி, சாதாரண அலுவலக உதவியாளர் பணியில் சேர்ந்திருக்கிறார் ஷரிக்.

ஜூடோ சாம்பியன் அண்ணன் ஷரீக்

“ஆரம்பத்தில் இருந்தே ஜூடோ விளையாட்டில் தம்பி சிறந்த முறையில் கவனம் செலுத்தி வந்தான். அதனால் அவனுக்காக என்னுடைய ஹாக்கி கனவை ஓரம் வைத்துவிட்டு அவனுடைய பயிற்சிக்காக கடந்த எட்டு வருடங்களாக உதவி வருகிறேன். எதிர்காலத்தில் ஜூடோ விளையாட்டில் இந்திய அளவில் சிறந்த வீரராக வருவான் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது" என்கிறார் ஷரிக்.

பயிற்சிக்கு உதவியதோடு அவ்வப்போது ஆலோசனை வழங்கி, தம்பிக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்திருக்கிறார் ஷரிக். "அண்ணன் என் பயிற்சிக்கு ஊக்கம் கொடுத்ததோடு விளையாட்டின் முக்கியத்துவத்தையும் புரியவைத்து  என்னை மேம்படுத்தி இருக்கிறார். அவரின் கடினமான உழைப்பில் கிடைத்த பணமே என்னை இந்தளவுக்கு உயர்த்தி இருக்கிறது" என்கிறார் தாபீஷ். 

ஜூடோ சாம்பியன்

"நான் ஜூடோ பயிற்சி பெறும்போது என்னுடைய தந்தை, 'படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்' என்று ஆலோசனை சொல்வார். என்னுடைய தாய், 'விளையாட்டில் இருந்து வெளியே வந்து விடாதே, கடுமையாக உழைத்து போராடு' என்று உற்சாகப்படுத்துவார். இவர்களின் உற்சாகமும், வழிகாட்டுதலும் இல்லாமல் என்னால் இவ்வளவுகாலம் ஜூடோ விளையாட்டில் தாக்குப்பிடித்திருக்க முடியாது. என்னுடைய வெற்றிக்கு என்னுடைய பயிற்சியாளரின் பங்களிப்பும் அதிகம்.

ஜூடோ சாம்பியன் பயிற்சியாளர்

என் தந்தைபோல வழிகாட்டி, என்னுடைய விளையாட்டு வாழ்க்கையை வடிவமைத்திருக்கிறார் பயிற்சியாளர் பிரமோத் மாண்டன். இவர், நான் துவண்டபோதெல்லாம் ஆதரவையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி நம்பிக்கையோடு செயல்பட வைத்தார். கடந்த போட்டியில் 30 விநாடிகளிலேயே முழு புள்ளியைப் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறேன். அடுத்தடுத்தப் போட்டியில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் முழு பயிற்சியில் ஈடுபட்டுவருகிறேன். இனி பெறும் வெற்றிகளை எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு காணிக்கையாக்கத் தயாராக இருக்கிறேன்" என்கிறார் தாபீஷ்.

வருங்கால இந்திய ஜூடோ வீரருக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்போம்.