வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (20/10/2017)

கடைசி தொடர்பு:11:32 (20/10/2017)

இந்தியாவின் முதல் ரெஸ்லிங் வீராங்கனை கவிதாவின் பெர்சனல் பக்கங்கள்!

கவிதா

ந்திய விளையாட்டுத் துறைக்குப் பெருமையைச் சேர்த்துள்ளார் கவிதா தேவி தலால். இதுவரை இந்தியப் பெண்கள் கால் பதிக்காத WWE என்ற உலக ரெஸ்லிங் பொழுதுபோக்குப் போட்டியில் முதல் இந்தியப் பெண்ணாகக் களமிறங்கி அசத்தவுள்ளார்.

ஏற்கெனவே, இவர் சல்வார் கமீஸ் அணிந்து கலந்துகொண்ட ‘மே யங் கிளாஸிக்’ ரெஸ்லிங் போட்டியில், நியூசிலாந்து ரெஸ்லிங் வீராங்கனையான டகோடா கைய் என்பவருடன் மோதி, கடும் சவால் அளித்தார். அந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், கவிதா தேவியின் ஆட்டம், பாராட்டுகளைக் குவித்தது. தற்போது, நேரடியாக உலக ரெஸ்லிங் பொழுதுபோக்குப் போட்டியில் முதல் இந்திய வீராங்கனையாகக் கலந்துகொள்ள ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த அசாதாரணமான சாதனைக்காக கவிதா தேவி கடந்து வந்த பாதை... 

ரெஸ்லிங்இந்தியாவில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் இரண்டாவது மாநிலமான ஹரியானாவில் பிறந்தவர், கவிதா தேவி தலால். பெண்கள் பத்தாம் வகுப்பு வரை படிக்கவே அனுமதிக்காத மல்வி (Malvi) என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். ஆனால், இளங்கலை பட்டப் படிப்புவரை படித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்தது, அவரின் சகோதரரான சந்தீப் தலால். 

கவிதா சிறுவயதிலிருந்தே தன்னை ஒரு வீராங்கனையாகவே கருதினார். அவரின் முதல் ஆர்வம், பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. 2016-ம் ஆண்டு, தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்றார். சிறுவயதில் ரெஸ்லிங் போட்டிகளை டிவியில் மட்டுமே பார்த்தவர். அப்படிப் பார்த்ததில்தான் அந்த விளையாட்டுமீது ஆர்வம் ஏற்பட்டது. 

கல்லூரிப் படிப்பை முடித்ததும், இந்தியா - பூடான் மற்றும் இந்தியா - நேபாளம் எல்லைப் பகுதிகளைக் காக்கும், சாஷாத்ரா சீமா பால் (Sashastra Seema Bal) என்ற எல்லை ராணுவத்தில் கான்ஸ்டெபிளாக சேர்ந்தார். துணை காவல் மேலாளராகப் பதவி உயர்வு கிடைத்த நிலைக்கு உயர்ந்தார். ரெஸ்லிங் விளையாட்டு ஆர்வத்தால், 2010-ம் ஆண்டில் தனது பணியை ராஜினாமா செய்து, பயிற்சியில் இறங்கினார். 

2016-ம் ஆண்டிலிருந்து ’தி கிரேட் காளி’யின் பயிற்சி மையத்தில், தொழில்முறை ரெஸ்லிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ’புல் புல்’ என்ற ரெஸ்லிங் வீராங்கனையுடன் சல்வார் கமீஸ் அணிந்து, ரெஸ்லிங் செய்தது சமூகவலைதளத்தில் வைரலானது. தொடர்ந்து, இந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வந்தது. அந்த நிகழ்ச்சியின் தன்மை பிடிக்கவில்லை என்று நிராகரித்துவிட்டார். 

எல்லை ராணுவத்தில் பணியாற்றியபோது, வாலிபால் வீரரான கெளரவ் தொமர் (Gaurav Tomar) என்பவரை காதலித்துத் திருமணம் செய்தார் கவிதா. தற்போது அபிஜித் என்ற ஐந்து வயது மகன் இருக்கிறான். கவிதா ரெஸ்லிங் பயிற்சியில் இருக்கும்போது, குடும்பப் பொறுப்புகளைப் பார்த்துக்கொள்வதுடன், மருமகளுக்கு ஊக்கமளித்து வருகிறார் கவிதாவின் மாமியார். 

உலக ரெஸ்லிங் பொழுதுபோக்குப் போட்டியில் பங்கேற்க ஒப்பந்தமானதும், “WWE போட்டியில் முதல் இந்திய வீராங்கனையாகக் கலந்துகொள்வதில் பெருமைகொள்கிறேன். ’மே யங் கிளாசிக்’ போட்டியில் உலகின் சிறந்த வீராங்கனைகளுடன் போட்டியிட்டதில் நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இந்தியாவின் முதல் பெண் ரெஸ்லிங் சாம்பியன் பட்டத்தை வாங்குவது என் நீண்ட கால கனவு. அதனை நிறைவேற்ற முழு முயற்சியுடன் பயிற்சி செய்துவருகிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கவிதா தேவி

அடுத்த ஆண்டு ஜனவரியில், அமெரிக்காவுக்குச் சென்று ரெஸ்லிங் பயிற்சி மேற்கொள்கிறார் கவிதா. ஆல் த பெஸ்ட் வீர மகளே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்