வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (20/10/2017)

கடைசி தொடர்பு:12:39 (20/10/2017)

‘சிங்கிள்னா என்னா?’ - சிக்ஸர்களால் பேசிய சேவாக்! #HBDViru

299 ரன்களில் களத்தில் இருக்கிறார் அவர். அதுவரை எந்தவொரு இந்திய வீரரும் செய்திடாத சாதனை. 1 ரன் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த முதல் இந்தியன் என்ற சரித்திரம் காத்திருக்கிறது. டிவியில் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். நான் - ஸ்ட்ரைக்கர் எண்டில் நிற்பது சச்சின்.  99, 199 ரன்களில் பந்தை எதிர்கொள்வது எவ்வளவு பிரஷர் என்பது அவருக்குத் தெரியும். பலமுறை அவர் 90களில் அவுட்டாகி சதத்தைத் தவறவிட்டிருக்கிறார். அவருக்கு எதிரே நின்று ஆடிக்கொண்டிருந்த அந்தக் கண்களில் எந்தவித பயமும் இல்லை. மாறாக, அந்தக் கண்கள் சிக்ஸர் அடிக்க ஏதுவான இடத்தை  தேடிக்கொண்டிருந்தன.

அனுபவ சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக்கின் கையில் பந்து. வழக்கமாக சதத்தைத் தடுக்க, 'சர்க்கிளு'க்குள் ஃபீல்டர்களை நிரப்புவது கேப்டன்கள் வழக்கம். ஆனால், அது பிரயோஜனமற்றது என்று பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக் அறிந்திருந்தார். ஸ்கொயர்-லெக், டீப் மிட்விக்கெட், லாங் ஆன் என ஒருநாள் போட்டியைப் போல் ஃபீல்டர்களை நிற்க வைத்திருந்தார். அதைப் பார்த்த ரசிகர்களுக்கு இன்னும் டென்ஷன். சச்சினுக்கும் அதே பதற்றம். "சிக்ஸர் அடிக்க முற்பட்டால் உன்னை அடித்துவிடுவேன்" -  எச்சரித்துவிட்டு வருகிறார் சச்சின்.

"சிக்ஸர் அடிக்க முயன்று எட்ஜ் ஆனால்...?" அத்தனை இந்தியர்களுக்கும் அந்தப் பயம்தான். ஆகுமா என்ன?  களத்தில் நிற்பது யார்?  உலகையே அலறவிடும் பாகிஸ்தான் பந்துவீச்சை 2 நாள்கள் சொந்த மண்ணிலேயே பொம்மையாக நினைத்து ஆட்டங்காட்டியவர். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென புது இலக்கணம் கொடுத்தவர். "நீங்கள் எவ்வளவு சிறப்பான, அனுபவமுள்ள பவுலராக இருந்தாலும், அவர் உங்களை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்" என்று பிரட் லீ எனும் பந்துவீச்சு அரக்கனால் புகழப்பட்டவர். களத்தில் நிற்பது வீரேந்திர சேவாக்! சிங்கிளா எடுப்பார் மனிதன்? மிடில் ஸ்டம்ப் லெந்த்தில் வந்த பந்தை இறங்கி வந்து Half Volley-ஆக மிட் விக்கெட் திசையில் அடிக்க, அந்தப் பந்து எல்லையைத் தாண்டி ஸ்டேண்டை அடைந்தபோது முல்தான் நகரமே அவர் தைரியத்தின் முன் மண்டியிட்டது.

சேவாக்

ஒரு பந்துவீச்சாளருக்கு நம்பிக்கை கொடுப்பது பிட்ச்சின் தன்மையும், ஆட்டத்தின் போக்கும் மட்டுமல்ல. அவர்களுக்குப் பிரதான நம்பிக்கையே எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனின் 'பாடி லேங்குவேஜ்'தான். பேட்ஸ்மேனின் கண்கள், அவர் தோள்பட்டை, அவரது கால்கள், இந்த மூன்றுமே, பேட்மேனின் 'மைண்ட் செட்டை' பவுலருக்குச் சொல்லிவிடும். பெளலரின் நம்பிக்கையை அது கூட்டிவிடும். ஆனால், இந்த மனிதனின் விஷயத்தில் மட்டும் அது என்றுமே ரிவர்ஸ். "ஓ நீதான் பவுலரா...சரி சரி போடு" என்ற தொனியில் அசால்டாக, கெத்தாக நிற்கும் சேவாக்கைப் பார்த்தால் எப்பேர்ப்பட்ட பவுலரின் பாசிடிவ் ஆடிட்யூடும் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். பிரெட் லீ, சேவாக்கைப் பற்றிக் கூறிய அந்த ஒற்றை வரி போதும் சேவாக்கின் ஆடிட்யூட் பற்றி அறிய.

டெக்னிக்கில் குறை, ஃபுட்வொர்க்கில் குறை என்று அவரது பேட்டிங்கை குறை சொல்லியவர்களுக்கு, "கிரிக்கெட்டை இப்படியும் ஆடலாம்" என்று பதிலளித்தார் சேவாக். அன்றெல்லாம் சச்சின் அவுட் ஆனால் தொலைக்காட்சிகள் அணைந்துவிடும். ஒருகட்டத்தில் சேவாக் அவுட் ஆனதும்கூட அவை அணைக்கப்பட்டன. ஆம், டெஸ்ட் போட்டிகளின் தன்மையால் அதை வெறுத்த ரசிகர்களைக்கூட, "சேவாக் ஆடுற வரைக்கும் மட்டும் பார்க்கலாம்" என்று வெள்ளை உடை ஆட்டத்தைப் பார்க்க வைத்தார் வீரு. உலகக்கோப்பைப் போட்டிகளின் ஃபினிஷிங்கைப் பார்க்க, வேலையை விட்டுவிட்டு TV-யின் முன்னாள் அமர்ந்தவர்களை, முதல் பந்தை மட்டும் பார்ப்பதற்காகவே ஏங்க வைத்தவர் வீரு! 36 வயதில், சி.எஸ்.கே அணிக்கெதிராக 58 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தபோது, இன்னொரு முறை இந்திய ஜெர்சியை இவர் அணிந்திட மாட்டாரா என்று ஏங்க வைத்தார். மொத்தத்தில் இவர் ரசிகர்களுக்கான கிரிக்கெட்டர்! 

சேவாக்

சேவாக்கின் அப்பா மிகுந்த கண்டிப்பானவர். எப்போதுமே அப்பாவிடம் சேவாக்குக்கு ஒருவித பயம் கலந்த மரியாதை இருக்கும். கூட்டுக் குடும்ப பின்னணியில் இருந்துவந்தவர். அதனால்,  மற்றவரை அனுசரித்துப் போவது என்பது அவரிடம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். எடுத்துகாட்டாக, அவா் பேட்டிங் செய்யும்போது எதிரணியினரின் சீண்டல்களாக இருக்கட்டும், மைதானத்தில் இருக்கும் வேற்று அணி ரசிகர்களின் கேலி கூச்சல்களாக இருக்கட்டும், எதையும் பொருட்படுத்தாமல் அவர் சரவெடியாய் ரன் குவிப்பைத் தொடர்ந்து  கொண்டிருப்பார்.

சிறுவயது முதலே சேவாக்குக்கு கிரிக்கெட்டின் மீது தீராத காதல். வீட்டில் இருக்கும்போது 'பிராக்டிஸ்' பண்ணுகிறேன் என்ற பெயரில் வீட்டில் இருக்கும் பொருள்களை உடைத்து, அப்பாவின் கண்களில் படாமல் 'கண்ணாம்பூச்சி' ஆட்டம் ஆடுவாராம். தந்தை கிருஷ்ணன் ஒரு தானிய விற்பனையாளர். மகனின் பயிற்சிக்காக வருமானத்தின் ஒரு பகுதியை தனியாக எடுத்து வைத்துவிடுவாராம். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை 90-களின் மத்தியில் நடைபெற்ற துலிப் டிராபி ஆட்டத்தில் சேவாக்கின் ஆட்டம் தூள் பறந்தது. தோ்வுக் குழுவினரையே "யாருய்யா இந்த 'சுருள் முடி'ப் பையன்" என புருவம் உயர்த்தவைத்தது. ஆம்...சேவாக்குக்கு முடி அப்போது சுருள் சுருளாக நிறைய இருந்தது. அதனால்தான், ஆரம்ப காலத்தில் 'சச்சினின் ஜெராக்ஸ்' என்று அழைக்கப்பட்டார். பிறகு, ரஞ்சி டிராபியிலும் அதிரடியைத் தொடர, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார் வீரு.

சேவாக்


இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இந்திய தேசிய அணியில் இடம் பிடித்தார். வந்த நேரத்தில் இந்திய அணியில் ஒரு வறட்சி நிலவியது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் அந்நேரத்தில் பிரமாண்ட பிம்பமாக உயா்ந்து நின்றன. இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில், அந்த அணியின் அனுபவ பந்துவீச்சாளர்களை அவர் பந்தாட, தெறித்து ஓடியது இலங்கை. அதன்பிறகு சேவாக் இந்திய அணியில் ஐக்கியமாகிவிட்டார். ஒரு அதிரடி ஆட்டக்காரர் இல்லாமல் இந்திய அணி தவித்து வந்த நேரத்தில் தன் துடிப்பான  ஆட்டத்தின்  மூலம் இந்திய அணியை மீட்டெடுத்தார் . அவர் தலையில் துணியை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டத்தைப் பார்த்து ஒரு கணம் புல்லரித்தான் ரசிகன். டெஸ்ட் போட்டியிலும்  ரன் வேட்டையைத் தொடர ஆரம்பித்தார். இவர் டெஸ்டில் ஆடினால்  எதிரணி கேப்டனை கிறுகிறுக்க வைத்துவிடுவார். சேவாக்குக்கு ஏதுவாக ஃபீல்டிங் அமைப்பதா, இல்லை டெஸ்ட் போட்டியின் அமைப்புக்கு ஏதுவாக ஃபீல்ட் செட் செய்வதா என எதிரணி கேப்டனை மண்டை காய வைப்பார்  இந்த ராட்சஷன். எப்படி 'சச்சின் - கங்குலி' ஓப்பனிங் ஜோடி இந்தியாவின் கோல்டன் பார்ட்னர்ஷிப்பாக வர்ணிக்கபட்டதோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் திகழ்ந்தது 'சேவாக் - கம்பீர்' கூட்டணி. டெஸ்ட் அரங்கில் இந்தியா முதலிடம் பிடிக்க மிக முக்கியக் காரணமாக இருந்தது இந்த இணை.

 

 

கம்பீரோடு மட்டுமா? சச்சினுடன் இணைந்து ஒருநாள் போட்டிகளிலும் அட்ராசிட்டி செய்தார் இந்த டெல்லிக்காரர். மிடில் ஆர்டரில் இவர் சற்றுத் தடுமாற, தான் ஆடிவந்த ஓப்பனிங் ஸ்லாட்டில் சேவாக்கை இறக்கினார் அப்போதைய கேப்டன் கங்குலி. மிகப்பெரிய முடிவு. உலகின் உச்சபட்ச பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்த வெற்றிக் கூட்டணியை உடைத்து, ஒரு இளைஞனை அந்த இடத்தில் அமர வைக்கிறார். கேள்விகள் எழாமல் இல்லை. அந்தக் கேள்விகளுக்கான பதிலை கங்குலி சொல்லவில்லை. சேவாக்தான் பதிலளித்தார். மைக் பிடித்து அல்ல. பேட் பிடித்து.

2003 உலகக்கோப்பை ஃபைனல். ஆஸி பேட்டிங் முடிந்தபோதே ஆட்டம் கைவிட்டுப் போயிருந்தது. இருந்தாலும், இந்திய ரசிகர்களின் மனதில் சச்சின் என்ற நம்பிக்கை நாயகன் குடியிருந்தார். 4 ரன்களில் மெக்ராத்தின் கைகளில் அந்த நம்பிக்கையை அவர் காவு கொடுக்க, இடிந்து போனான் இந்திய ரசிகன். ஓவருக்கு 7 ரன்கள் வேண்டும். கேப்டன் கங்குலி அவுட். அடுத்து 4 பந்துகளில் கைஃப் அவுட். களம்புகுவது 'தி வால்'. அடித்து ஆடுவது யார்? மெக்ராத், லீ, பிராட் ஹாக், ஆண்டி பிக்கெல் என அனைவரையும் பந்தாடுகிறார். சச்சின் என்ற பெயர் வாடிப்போன ரசிகனின் மனதில் சேவாக் எனும் நம்பிக்கை துளிர்விட்டது. "இன்னைக்கு இவர் நம்மள ஜெயிக்க வைப்பாண்டா" - இது கோடி மனங்களின் நம்பிக்கை. ஒரு துருதிருஷ்ட ரன் அவுட். மொத்த நம்பிக்கையும், உலகக்கோப்பைக் கனவும் உடைந்துபோனது. ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நம்பிக்கையை மீண்டும் எழுப்பினார் சேவாக். வங்கதேசத்தை கிழித்தெறிந்து 175 ரன்கள் குவித்து, இந்தியாவின் இரண்டாவது உலகக்கோப்பை வெற்றியை 'இனிஷியலைஸ்' செய்தார். 

சேவாக்

இந்திய கிரிக்கெட்டின் சரித்திர தருணங்களில் இடம்பிடித்தவர். பலரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை அசால்டாகச் செய்தவர். டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 284 ரன்கள், ஓப்பனராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 7,500-க்கு மேற்பட்ட ரன்கள் அடித்தவர், நூற்றுக்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் முச்சதம் அடித்த அசாதரணன், இரண்டு டெஸ்ட் முச்சதம், ஒருநாள் டபுள் செஞ்சுரி என இவர் செய்தவை எல்லாம் வேற லெவல் ரெக்கார்ட்ஸ். இவர் எதிரணி வீரர்களிடம் மல்லுக்கட்டியதில்லை. ஆனால், தன் அதிரடி ஆட்டத்தால் மண்டியிட வைத்துள்ளார்.

"தொடர்ந்து 5 ஓவர்கள் மெய்டனாக ஆடும் பேட்ஸ்மேன்களுக்குப் பந்துவீசுவது என்பது சவால் இல்லை. சேவாக் போன்ற பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுவதே ஒரு பவுலருக்கு உண்மையான சவால்" என்று கபில் தேவ் என்னும் ஜாம்பவனால் புகழப்பட்டவர். அனைத்து பெளலருக்கும் தன் அதிரடியால் ஆட்டம் காட்டியவர், இப்போது ட்விட்டரில் அடித்துத் துவைத்துக்கொண்டிருக்கிறார். “எப்படி இந்த மனுஷன் யோசிக்கிறான்" என்று நினைக்கும் அளவுக்கு அங்கும் தனக்கென்று ஒரு யுனிக் ஸ்டைலை வகுத்துக்கொண்டார் வீரு. இன்று அவருக்கு 39-வது பிறந்தநாள். கிரிக்கெட் மைதானமோ, சமூக வலைதளமோ, தான் இருக்கும் தளத்தில் ரவுண்ட் கட்டி அடித்துக்கொண்டே இருப்பார் வீரூ. 39 என்பதெல்லாம் வெறும் நம்பர்தான்.

ஹேப்பி பர்த்டே வீரு!


டிரெண்டிங் @ விகடன்