வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (20/10/2017)

கடைசி தொடர்பு:13:10 (20/10/2017)

டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன்: காலிறுதியில் இந்தியாவின் பிரணாய்!

டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடரில், இந்தியாவின் முன்னணி வீரர்களுள் ஒருவரான பிரணாய், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பிரணாய்

டென்மார்க் நாட்டின் ஒடென்சே நகரில், ‘டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், பெண்கள் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால், ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரணாய் ஆகியோர் சிறப்பாக விளையாடிவருகின்றனர். 

இதில், ஆண்கள் ஒற்றையரில் காலிறுதிக்காக நடந்த இன்றைய போட்டியில், இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மலேசிய வீரர் சாங் வெய் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரணாய், 21-17, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய வீரரை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

ஒரு மணி நேரம் நீடித்த இப்போட்டியில், இந்திய வீரர் பிரணாய் தொடர்ந்து ஆட்டத்தைத் தன்வசத்திலேயே வைத்திருந்தார். தனது வெற்றிகுறித்து பிரணாய் கூறுகையில், “இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதை மிகப் பெரிதாகக் கருதுகிறேன். மலேசிய வீரர் என்னைவிட வயதில் மூத்தவராக இருந்தாலும், அவரது ஆட்டத்திறனைக் கண்டு வியந்தேன். காலிறுதி முன்னேறியதுடன் நிற்காமல், தொடர்ந்து விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றார்.