வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (21/10/2017)

கடைசி தொடர்பு:12:24 (21/10/2017)

’இனி ஸ்ரீசாந்த் எங்கும் விளையாட முடியாது’: பி.சி.சி.ஐ அதிரடி!

’இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஶ்ரீசாந்த், எந்த நாட்டுக்காகவும் இனி விளையாட முடியாது’ என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

ஸ்ரீசாந்த்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர், ஸ்ரீசாந்த். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின்போது, இவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்தை கைதுசெய்தது. இதனால், பி.சி.சி.ஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், 'ஸ்ரீசாந்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை' என அவரை நீதிமன்றம் விடுதலைசெய்தது. 

இருப்பினும் பி.சி.சி.ஐ., ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை. இதுகுறித்து, கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில், ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பி.சி.சி.ஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பி.சி.சி.ஐ-யால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் உயர் நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறி, ஸ்ரீசாந்த் ஆயுட்கால தடை நீக்க உத்தரவை ரத்துசெய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், ஶ்ரீசாந்த் மீதான ஆயுட்காலத் தடை நீடிக்கிறது. 

அதன் பின்னர், ’சர்வதேச கிரிக்கெட் வாரியம் எனக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அதனால், இனி வேறொரு நாட்டுக்காக விளையாடுவேன்’ என அறிவித்திருந்தார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சி.கே.கண்ணா கூறுகையில், ‘ஒரு நாட்டில் தடைசெய்யப்பட்ட வீரர், வேறு எந்த நாட்டிலும் விளையாட முடியாது. இது ஐ.சி.சி விதியிலும் உள்ளது. அதனால், ஸ்ரீசாந்த் எங்கும் விளையாட முடியாது’ எனக் கூறினார்.