வெளியிடப்பட்ட நேரம்: 20:29 (21/10/2017)

கடைசி தொடர்பு:20:29 (21/10/2017)

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர்; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி

10 -வது ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்தத் தொடரில் முதல் சுற்றில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. தற்போது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மற்ற இரு அணிகளும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் விளையாடும். 

இந்நிலையில் இன்று சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. ஏற்கெனவே முதல் சுற்றில் இந்தியா பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் இரு அணிகளும் களத்தில் சந்தித்தன. 

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணி, கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியது. முதலில் இந்திய வீரர்களைக் கட்டுப்படுத்திய பாகிஸ்தான், கடைசிக் கட்டத்தில் கோட்டை விட்டது. இதனால் இறுதி நேரத்தில் இந்திய அணிக்கு அதிக கோல்கள் கிடைத்தன. இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தனை வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் இரண்டு வெற்றி ஒரு ட்ரா என மொத்தம் 7 புள்ளிகளுடன் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 

இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் மலேசியா தென் கொரியா அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதியில் இந்திய அணியுடன் மோதும். இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.