முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து! #IndvsNZ

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி, இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

Tom Latham

இந்தியாவில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி, இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன் விராட் கோலி வென்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். அவர் 125 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இது, கோலியின் 200-வது போட்டியும் ஆகும். மேலும், அவர் அடிக்கும் 31-வது சதமும் இதுவாகும். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்தின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் காலின் மன்ரோ நிதானமான ஆட்டத்தைக் கையாண்டு, சேசிங்கிற்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர். கப்டில் மற்றும் மன்றோ முறையே 32 மற்றும் 28 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன், 9 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால், அதன்பின் இறங்கிய ராஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரை சதங்களைக் கடந்த பின்னரும் தொடர்ச்சியாக ரன் குவித்தனர். லேதம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். ராஸ் டெய்லர் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 49-வது ஓவரிலேயே நியூஸிலாந்து எட்டிப்பிடித்து, மூன்று போட்டிகள்கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!