வெளியிடப்பட்ட நேரம்: 05:55 (23/10/2017)

கடைசி தொடர்பு:07:36 (23/10/2017)

’சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர்’- தோல்விக்குப் பின் கோலி பேட்டி

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

நியூஸிலாந்து அணி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி, நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி, கேப்டன் கோலியின் சதத்தின் உதவியுடன் 280 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய  நியூஸிலாந்து அணி, ராஸ் டைய்லர் மற்றும் லாதம் உதவியுடன் இலக்கை எட்டிப்பிடித்தது. சதம் அடித்த டாம் லாதம் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, “இந்த மைதானத்தில் 275 -க்குக் கூடுதலாக எந்த இலக்கும் நல்ல இலக்குதான். ஆனால், நியூஸிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. டெய்லர் மற்றும் லாதம் சிறப்பாக விளையாடினர். அவர்கள் இந்தியாவின் சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டனர். ட்ரெண்ட் சிறப்பாகப் பந்து வீசினார். இந்த வெற்றிக்குத்  தகுதியானவர்கள் அவர்கள்” என்றார்.

முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றதால், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி, வரும் புதன்கிழமை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.