வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (23/10/2017)

கடைசி தொடர்பு:13:08 (23/10/2017)

பீலே... கனவு கண்டான்... கால்பந்தின் கடவுள் ஆனான்! #HBDPele

கார்கோவடோ மலையில் நின்றுகொண்டு, தன் இரண்டு கைகளையும் விரித்து அருள் புரிந்துகொண்டிருக்கும் இயேசுவின் சிலை (Christ the redeemer). ‘பிரேசில் தேசத்துக்கு அதுதான் அடையாளமாக' இருந்தது. அது நிறுவப்பட்ட 1931-ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம், அந்தச் சாம்பா தேசத்தின் அடையாளமாக விளங்கியது. ஆனால், ஒரு சிறுவனிடம் தன் அடையாளத்தை இழந்தது அந்தச் சிலை. பள்ளிக்குப் போய் வந்தாலும், ஏழ்மையைப் போக்க ஷூ பாலீஷ் போட்டுக்கொண்டு, பணக்காரர்கள் வீட்டு தரையைத் துடைத்துக்கொண்டு, `டீக்கடை'யில்கூட வேலை செய்துகொண்டிருந்த அந்தச் சிறுவன், அந்தச் சிலைக்கு சவாலாக, தேசத்தின் அடையாளமாக மாறினான்.

pele

1958-ம் ஆண்டு பிரேசிலின் டிரெஸ் கராகோஸ் கிராமம். ஒரு நண்பரின் கடையில் தோழர்கள் சூழ்ந்திருக்க, தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கிறார் டொண்டின்ஹோ. சுவீடனுடன் தன் நாடு மோதும் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. சில ஆண்டுகளுக்கு முன்னர்... டிவி இல்லை. ரேடியோவில் கமென்டரி கேட்டுக்கொண்டிருக்கிறது அந்தக் கும்பல். அதே உலகக்கோப்பை ஃபைனல். உருகுவே அணியிடம் 2 - 1 எனத் தோற்றிருந்தது பிரேசில். கண்ணீர் வழிந்தோட, மனமுடைந்து அமர்ந்திருந்தார் டொண்டின்ஹோ. மேற்கூரையின் ஓட்டை வழியாக தன் தந்தையின் கண்ணீரைப் பார்த்த 9 வயதுடைய அவரின் மகன், தன் தந்தையிடம் சத்தியம் செய்தான், “பிரேசிலுக்கு நான் உலகக்கோப்பையை வென்று தருவேன்" என்று. எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதே இடம். போட்டி தொடங்குவதற்கு முன்னரே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார் டொண்டின்ஹோ. டிவி-யில் உலகக்கோப்பையை வெல்லும் வெறியோடு மஞ்சள் உடை அணிந்து ஓடிய பிரேசில் வீரர்களில், அன்று சத்தியம் செய்த மகனும் ஒருவன். அனுபவம் வாய்ந்த வீரர்கள் நடுவே புயலாகச் சுழன்றடித்தான் அந்த 17 வயதுச் சிறுவன். இரண்டு கோல்கள் அடித்தான். பிரேசிலின் முதல் உலகக்கோப்பையை... மொத்த தேசமும் ஏந்த நினைக்கும் அந்தக் கோப்பையை, தன் கைகளில் ஏந்தி முத்தமிட்டான். ஆனந்தக்கண்ணீரில் மிதந்தார் டொண்டின்ஹோ. `இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்!' - அந்தச் சிறுவன் - எடிசன் எனப் பிறந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்கள் அடித்து, பிரேசிலின் அடையாளமாக ஓய்வுபெற்ற `கால்பந்துக் கடவுள்' பீலே!

world cup

கறுப்பு முத்து' பீலே, பிரேசிலுக்கு மட்டுமல்ல... கால்பந்து எனும் உலகளாவிய விளையாட்டுக்கும் அடையாளமாகத் திகழ்ந்தார். பிரேசில் நாட்டுக் கால்பந்தின் அடையாளமாக மாற பீலேவுக்குத் தேவைப்பட்டதோ வெறும் 15 நாள்கள்தான். ஜூன் 15, 1958 - அப்போது பீலே பிறந்து 17 வருடம் 239 நாள்கள் ஆகியிருந்தன. உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையோடு களம் கண்டார் `யங்' பீலே. ஜூன் 29, பிரேசில் அணிக்காக அந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் (6) அடித்தவராக அந்தப் பெருமைமிகுந்த கோப்பையை ஏந்தினார். ஆடியது நான்கு போட்டிகள்தான். முதல் உலகக்கோப்பைப் போட்டியிலேயே அசிஸ்ட்; இரண்டாவது போட்டியில் முதல் வேர்ல்டு கப் கோல்; மிரட்டல் அணியான பிரான்ஸுக்கு எதிராக அரை இறுதியில் ஹாட்ரிக்; ஃபைனலில் இரண்டு கோல்கள்; அந்த உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்தவர் வரிசையில் இரண்டாம் இடம்; இளம் வயதில் உலகக்கோப்பை ஹாட்ரிக் அடித்தவர்; இளம் வயதில் உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியவர்; தொடரின் சிறந்த இளம் வீரர்... இப்படி அந்தத் தொடர் முடியும் வரை கால்பந்தை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனின் சுவாசத்திலும் பீலேவின் பெயர் கலந்திருந்தது. உலகத்துக்கு, பிரேசில் பீலேவின் நாடாகிப்போனது!

இத்தனைக்கும் பிரேசிலிலிருந்து உலகக்கோப்பைக்காக சுவீடன் கிளம்பியபோது, மூட்டுவலியால் அவதிப்பட்டிருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் காயத்தால் ஆடவில்லை. `காயம் சரியானதும் களமிறக்கலாமா!' எனப் பயிற்சியாளருக்குச் சந்தேகம். மூத்தவீரர்கள் எல்லோரும் ஒன்றுகூடி “பீலே, அணியில் இருக்க வேண்டும்" என்று அந்த 17 வயதுச் சிறுவனுக்காகப் பரிந்துரை செய்யத் தொடங்கியது உலகக்கோப்பையின் மாபெரும் சகாப்தம். அந்த வயதிலேயே அவரது திறமை அணியின் ஆட்டத்தில் அப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.  அந்தத் தொடரில் 13 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தியிருந்தார் பிரான்ஸ் வீரர்  ஜஸ்ட் ஃபான்டெய்ன் (Just Fontaine). அரை இறுதியில் பீலேவின் தாண்டவத்தைப் பார்த்துவிட்டு, “அந்த 17 வயதுச் சிறுவனின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, பேசாமல் ஓய்வுபெற்றுவிடலாமா என எனக்குத் தோன்றியது" எனப் பின்னர் ஆச்சர்யப்பட்டார். இறுதிப்போட்டியில் பீலேவை எதிர்த்து விளையாடிய சுவீடன் கோல்கீப்பர் சிக்கே பார்லிங், “பிரேசிலின் ஐந்தாவது கோலை அவர் அடித்ததைப் பார்த்து, அந்தச் சிறுவனோடு அதைக் கொண்டாட வேண்டும் என எனக்கும் ஆசையாக இருந்தது" என்று அவர் திறமையை சிலாகித்தார். ரசிகர்களை மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களையும் ஆட்கொண்டது 17 வயது பீலேவின் ஆட்டம்.

கடவுள்

இன்று இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் விளையாடுபவர்களிடம் போய் “உங்களின் கனவு என்ன?" எனக் கேட்டால், “ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட், யுவண்டஸ்" போன்ற அணிகளில் விளையாட வேண்டும்'' என்பார்கள். கால்பந்தை உதைக்கத் தொடங்கிய காலம்தொட்டே கால்பந்து வீரர்களுக்கு அதுபோன்ற பெரிய அணிகளில் விளையாடுவதே வாழ்நாள் கனவாக இருக்கும். அந்த அணிகள் எல்லாம், பீலேவின் கையெழுத்துக்காகக் காத்துக்கிடந்தன. நினைத்துப்பார்க்க முடியாத சம்பளம், ஐரோப்பாவில் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் விருதுகள், சொர்க்கம் போன்ற சொகுசான ஆடம்பர வாழ்க்கை... இவை அனைத்தும் கிடைத்துவிடும் அந்த ஒற்றைக் கையெழுத்துக்கு. ஆனால், பிரேசிலைவிட்டுப் போக வேண்டுமே... அனைத்தையும் நிராகரித்தார் பீலே. தான் சிறுவயதிலிருந்து விளையாடிய சாண்டோஸ் அணியிலேயே தொடர்ந்தார். புகழுக்காகவும் பணத்துக்காகவும் பிரேசிலைத் தாண்டுவதில்லை என முடிவுசெய்தார். அன்று பிரேசிலின் அதிபராக இருந்த ஜேனியோ குவாட்ரோஸ், பீலேவை `தேசத்தின் அதிகாரபூர்வமான  சொத்து' என ஒரு வருடம் முன்புதான் அறிவித்திருந்தார். ஒரு தேசத்தின் அடையாளம் இன்னொரு கண்டத்துக்குப் போய்விடுமா என்ன? 

பிரேசில் அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டது, 1961-ம் ஆண்டில். 30 ஆண்டுகள் பிரேசிலின் அடையாளமாக இருந்த இயேசு சிலை, தன் பெருமையை 21 வயது இளைஞனிடம் இழக்கிறது. அவனுக்கு 17 வயது இருக்கும்போதே அதன் பெருமையைப் பிடுங்கிவிட்டான். உண்மையில் அந்த அடையாளத்தை பீலே பறித்ததில் ஆச்சர்யமில்லை. காரணம், `பீலே' என்ற வார்த்தை பைபிளிலேயே இருக்கிறது. ஹீப்ரு மொழியில் அதற்கு அர்த்தம் - மிராக்கிள்! கபோய்ரா தற்காப்புக்கலையும் பிரேசிலின் பாரம்பர்ய நடனமும் இணைந்த `ஜிங்கா' (Ginga) எனப்படும் பிரேசிலின் வாழ்வியலை கால்பந்துக்குள் புகுத்தி, அற்புதங்கள் நிகழ்த்தியவராயிற்றே. அவரை அடையாளமாகக்கொண்டிருப்பது பிரேசிலுக்கு மிகப்பெரிய பெருமை. அந்த இயேசு சிலை உள்பட!

இப்படிப் புகழ்ந்துதள்ளும் அளவுக்கு அவரிடம் அப்படி என்னதான் இருக்கு? அவர் அப்படி என்ன மிராக்கிள் செய்தார்? இந்த வீடியோவைப் பாருங்க, அப்புறம் continue பண்ணலாம்...

‘என்னடா... கேமிங் வீடியோவா இருக்கே' என நினைத்துவிட வேண்டாம். இது உண்மையில் நடந்த ஒரு போட்டி. பிரேசிலின் யுவண்டஸ் (பிரேசிலிலும் ஒரு யுவண்டஸ் அணி இருக்கிறது) அணியும் சாண்டோஸ் அணியும் மோதிய போட்டி அது. ரைட் விங்கிலிருந்து பெற்ற பாஸை, மூன்று டிஃபண்டர்களை `சிப்'களால் ஏமாற்றி, கோல்கீப்பரையும்கூட அதைப்போலவே ஏமாற்றி அற்புதமான `ஹெட்டர்' மூலம் கோல் அடித்திருப்பார் பீலே. இந்தப் போட்டியின் வீடியோ பதிவு ஏதும் இல்லாததால், பீலேவுக்காக computer simulation தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது அந்த கோலின் மாதிரி. எவரும் நினைத்துகூடப்பார்க்க முடியாத இந்த அசாத்திய கோலை அடித்தபோது பீலேவுக்கு வயது 18.

பிரேசில் கவிஞர் கார்லோஸ் ட்ரம்மோண்ட் ஒருமுறை கூறினார், “பீலேவைப்போல் 1,000 கோல்கள் அடிப்பது அற்புதமல்ல; அவரைப்போலவே ஒரேயொரு கோல் அடித்தாலும் அதுவே அற்புதம். அது அசாத்தியம்" என்று அவர் திறமையைப் புகழ்ந்தார். அந்தத் திறமைதான் 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கால்பந்து வீரர் விருதையும், ஒலிம்பிக் கமிட்டி வழங்கிய நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதையும் அவருக்குப் பரிசளித்தது.

கால்பந்து

வேகம், பலம், திறமை, க்ரியேடிவிட்டி, ஸ்டேமினா, உடல்வலிமை அனைத்தும்கொண்டிருந்த ஓர் அற்புத வீரர், பீலே. அவை அனைத்துமே `டாப் க்ளாஸி'ல் அமையப்பெற்ற ஒரு வீரனை, கால்பந்து உலகம் அப்போதுதான் கண்டிருந்தது. பாஸ் செய்யும்போது வெளிப்படும் அவரது anticipation, எதிரணி வீரர்களை ஒரு நொடி உறையவைத்துவிடும். இரண்டு கால்களாலும் புயல் வேகத்தில் பந்தை உதைப்பதில் வல்லவர். கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரமே இருந்தபோதிலும் `ஏரியல் பால்'களைக் கையாள்வதிலும் தலைசிறந்தவராகத் திகழ்ந்தார். `ஃப்ரீ கிக்', பெனால்டி ஷாட்களில் இவரது துள்ளியம் பிரமிக்கவைக்கக்கூடியது. ஆனால், பெனால்டி ஷாட்கள் எடுப்பதை பெரும்பாலும் தவிர்த்துவந்தார் பீலே. ``பெனால்டி மூலம் கோல் அடிப்பது கோழைத்தனம்" என்பார். அவரைப் பொறுத்தவரை மூன்று, நான்கு டிஃபண்டர்களைச் சின்னாபின்னமாக்கி, கோல்கீப்பரை அலறவைத்து கோலடிக்க வேண்டும். இன்று ரொனால்டின்ஹோ, மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றோர் களத்தில் செய்யும் சாகச மூவ்களை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே செய்துகாட்டிய வித்தைக்காரன். முன்களத்தில் எந்த இடத்திலும் விளையாடக்கூடியவர். எந்த இடத்தில் ஆடினாலும், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். நடுக்களத்தில் பிளேமேக்கராக ஆடிய காலங்களில் பல்வேறு மாயவித்தைகளை கால்பந்துக்கு அறிமுகம் செய்துவைத்தவர். அதனால்தான் அவரை `கால்பந்துப் பிதாமகன்' என அழைக்காமல், `கால்பந்துக் கடவுள்' என அழைக்கிறார்கள்.

அதேசமயம் எதற்காகவும் ஏன் கால்பந்துக்காகவும்கூட தன்மானத்தை இழக்காதவர் பீலே. சிறுவனாக இருந்த சமயம், வாஸ்கோடகாமா அணியின் புகழ்பெற்ற கோல்கீப்பர் `பைலே'வின் (Bile) பெயரை `பீலே' என இவர் தவறாக உச்சரிக்க, கலாய்ப்பதற்காக இவரை `பீலே' என்றே அழைக்கத் தொடங்கினார்கள் நண்பர்கள். கடைசியில் அதுவே அவரின் பெயராகவும் ஆனது.  சிறுவயதில் பீலே அதை வெறுத்திருக்கிறார். தன்னை அப்படிக் கூப்பிட்ட சகமாணவனை அடித்து இரண்டு நாள்கள் சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். இது சிறுவர்களின் சண்டை என நினைக்கலாம். ஆனால், அதுவே அவருக்குள் கடைசிவரை இருந்த ஆட்டிட்யூட்.

1966-ம் ஆண்டு உலகக்கோப்பையில், பீலேவைத் தடுக்க, பல அணிகளும் அவரை டார்கெட் செய்தன. பல்கேரியாவுடனான முதல் போட்டியில் காயம் ஏற்பட்டு வெளியேறியவர் அடுத்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடைசி லீக் போட்டி. வென்றால்தான் அடுத்த சுற்று. காயத்தோடு களம் கண்டவரை, ஆட்டத்தின்போது போர்ச்சுகல் வீரர்கள் கண்மூடித்தனமாகத் தாக்க, கோபத்தில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதே இல்லை என முடிவெடுத்தார் பீலே. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு `1970-ம் ஆண்டு மெக்ஸிகோ உலக்கோப்பை'யைக் கருத்தில்கொண்டு, நிர்வாகம் அழைத்ததால் அணிக்குத் திரும்பினார். தன் கோபத்தைக் களத்தில் காட்டினார். சிறந்த வீரருக்கான `கோல்டன் பால்' விருதோடு தன் தேசத்துக்கு மூன்றாவது உலகக்கோப்பையை வென்று தந்தார். அந்த ஃபைனலில் டிஃபண்டர் கார்லோஸ் அல்பார்டோ கோல் அடிக்க, பீலே கொடுத்த பாஸ் ஏலியன் லெவல்.

மெர்சலானது மெக்ஸிகோ!

15 வயதிலேயே சாண்டோஸ் க்ளப்பின் சீனியர் அணியில் இடம்பிடித்து, கால்பந்து உலகில் ஓர் அற்புத என்ட்ரி கொடுத்து, 19 வருடங்கள் பிரேசிலில் தன் கால்பந்து வித்தைகளைக் காட்டிவிட்டு ஓய்வுபெற்றார் பீலே. பிரேசில் அணிக்காக மொத்தம் 95 கோல்களும், சாண்டோஸ் அணிக்காக 1,091 கோல்களும் அடித்து, யாராலும் நினைத்துகூடப்பார்க்க முடியாத சாதனைகளை அநாயசமாகச் செய்து முடித்து ஓய்வுபெற்றிருந்தது அந்த கோல் மெஷின்! ஆனால், கால்பந்து உலகத்தால் பீலேவின் ஓய்வை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் காஸ்மோஸ் அணியிடமிருந்து வந்தது அழைப்பு. ரியல் மாட்ரிட் அணியையே உதாசீனப்படுத்தியவர். கால்பந்து பிரபலமே அடையாத அமெரிக்காவில், பெரிய அளவில் ரசிகர்கள் இல்லாத இடத்தில் விளையாடிவிடுவாரா? மீண்டும் ஆச்சர்யம். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பீலே. ஏன்? கால்பந்து வெறுமனே ஐரோப்பாவும் தென் அமெரிக்காவும் மட்டும் சுவாசிக்கும் விளையாட்டாக இருந்திடக் கூடாது என்பதில் அவர் தீர்க்கமாக இருந்தார். உலகெங்கும் கால்பந்து பிரபலமடைய வேண்டும். ஆப்பிரிக்க, ஆசியக் கண்டங்களிலும்கூட தெருக்களில் கால்பந்து உதைபட வேண்டும் என விரும்பினார். `கால்பந்துக் கடவுளே தங்கள் நாட்டில் விளையாடுகிறார்' என்றால் யார்தான் மைதானத்துக்கு வர மாட்டார்கள். அமெரிக்காவின் கால்பந்து அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தார் பீலே.

டொமினிக் குடியரசில் கால்பந்தை மேம்படுத்த, அங்கு சில நட்புறவிலான போட்டிகளில் பங்கேற்றார். அதுமட்டுமின்றி, தான் நேசித்த விளையாட்டைப் பிரபலப்படுத்த பல்வேறு இடங்களில் காட்சிப் போட்டிகளில் விளையாடினார். ஆனால், எந்த மண்ணிலும் காசுக்காக இவர் கால்பந்து விளையாடியதில்லை. அமெரிக்காவில் நிகழ்ந்த கால்பந்து மாற்றத்தை உலகம் கண்கூடாகப் பார்த்தது. ஒருகட்டத்தில் அந்த விளையாட்டைப் பார்க்க ரசிகர்களே இல்லை என்ற நிலையில் இருந்த நாட்டில், உலகக்கோப்பை எனும் மாபெரும் தொடர் நடைபெற்றது. அதுவும் வெற்றிகரமாக. சராசரியாக ஒரு போட்டியைக் காணச்சென்ற ரசிகர்களின் எண்ணிக்கையில், அமெரிக்காவில் நடந்த 1994-ம் ஆண்டு உலகக்கோப்பையை இன்னும் எந்தத் தொடரும் மிஞ்சவில்லை. இந்த மாபெரும் மாற்றம் ஏற்பட, `கால்பந்துக் கடவுள்' அந்த மண்ணில் கால் வைத்ததுவே காரணமாக அமைந்தது. கால்பந்துக்கு `The Beautiful Game' என்ற அழகான அங்கீகாரம் கிடைக்க மிகப்பெரிய காரணம், பீலேதான்.

பீலே

1982-ம் ஆண்டில் அமெரிக்கா உலகக்கோப்பை நடத்த எடுக்கும் முயற்சிகளை முன்வைப்பது பற்றிய ஒரு கூட்டம் வெள்ளை மாளிகையில் நடந்தது. பேசத் தொடங்குகிறார் அமெரிக்க அதிபர் ரீகன். “நான் ரொனால்டு ரீகன். அமெரிக்காவின் அதிபர். என்னுடன் வந்திருக்கும் இந்த ஜென்டில்மேனுக்கு அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். உலகமே கொண்டாடும் கால்பந்து வீரர் ஆயிற்றே இவர்" என்று பீலேவைக் கைகாட்டினார் அமெரிக்க அதிபர். அந்த மாமனிதனை அந்த இடத்தில் கொண்டிருந்தது அவருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கே பெருமையாக இருந்தது. ரீகன் மட்டுமல்ல, ஜெரால்டு ஃபோர்டு, ரிச்சர்ட் நிக்ஸன் எனப் பல்வேறு அமெரிக்க அதிபர்களும் கால்பந்துக் கடவுளுடன் உரையாட விரும்பி, உலகையே வசியப்படுத்திய அந்தக் கால்களை வெள்ளை மாளிகையின் சிவப்புக் கம்பளத்தில் நடக்கவைத்தனர்.

அமெரிக்க ஜனாதிபதிகளே வியந்த இந்த மாமனிதன், ஒருகாலத்தில் ஷூ பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார். இவரின் தந்தைகூட சுமாரான கால்பந்தாட்ட வீரர்தான். ஆனால், அவரது கால்பந்து மூன்று குழந்தைகளுக்குச் சோறிடத் தவறவே, தன் மகனை நன்கு படிக்கவைக்க விரும்பினார் அவரது தாய். பீலேவுக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் `எடிசன்'. கல்வியில் சிறந்து ஏழ்மையை வெல்ல வேண்டும் என்றுதான் அவனது தாய் விரும்பினார். ஆனால், எடிசனுக்குக் கால்பந்து தந்த மகிழ்ச்சியில், பசி தந்த வலி தெரியவில்லை. அவனும் பைலட் ஆகவேண்டும் என்ற கனவோடுதான் இருந்தான். தன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு விமானம் விழுந்து நொறுங்கி அதன் பைலட் இறக்கவே, விமானத்தின் இறக்கைகளோடு, அவனது கனவையும் அங்கேயே எரித்துவிட்டான். அவனது மூளையில் மிச்சமிருந்த ஒரே வார்த்தை `கால்பந்து'. விளையாட பந்து வேண்டும். ஆனால், காசு இல்லை. சாக்கு, ஆடைகள், பஞ்சு போன்றவற்றைக்கொண்டு கயிற்றாலும் கம்பியாலும் கட்டி பந்து செய்து விளையாடினான். மரங்களில் காய்த்துத் தொங்கிய மாம்பழங்களைப் பந்தாக நினைத்து, உதைத்து, தன்னைத்தானே மெறுகேற்றிக்கொண்டிருந்தான். அவன் அம்மா கண்டித்தபோதும், குடும்பநிலை கண்டு கலங்கியபோதும், அவன் தந்தை கண்ணீர் சிந்தியபோதும்கூட அவனுள் இருந்த நம்பிக்கை அப்படியே இருந்தது. மொசைக் தரைகளை சோப்புப் போட்டுக் கழுவியபோதும், புல்தரையில் கால்பந்தை உதைப்பதுபோல் கனவுகண்டான். அந்தக் கனவுகள்தான், இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில், `பீலே போல ஆக வேண்டும்' என்ற கனவுகளின் அஸ்திவாரம்.

அமெரிக்க ஆர்டிஸ்ட் ஆண்டி வரோல் ஒருமுறை கூறினார், “புகழ் என்பது, 15 நிமிடம் நிலைத்திருக்கக்கூடியது என்ற என் கணிப்பைப் பொய்யாக்கியவர்களுள் பீலே முதன்மையானவர். அவரது புகழ் 15 நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும்" என்றார். உண்மைதானே, கால்பந்து எனும் விளையாட்டு இருக்கும்வரை, அதன் கடவுளை அனைவரும் வழிபட்டுதானே ஆகவேண்டும்.

1970-ம் ஆண்டு மெக்ஸிகோவில் உலகக்கோப்பை நடந்துகொண்டிருந்தபோது, வர்ணனையாளர்கள் மால்கம் ஆலிசன், பேட் க்ரெராண்ட் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பிரசித்திபெற்ற உரையாடல் இது...

மால்கம் ஆலிசன்  : “How do you spell Pele?”
பேட் க்ரெராண்ட் : “Easy: G-O-D.”

கால்பந்தின் கடவுளுக்கு, இன்று பிறந்த நாள்.

வாழ்த்துகள்!


டிரெண்டிங் @ விகடன்