வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (23/10/2017)

கடைசி தொடர்பு:12:38 (23/10/2017)

`இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்குக் காரணம் என்ன?' - ரகசியம் உடைக்கும் ராஸ் டெய்லர்!

இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி, இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், நியூஸிலாந்து சேசிங்கிற்கு உறுதுணையாக இருந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராஸ் டெய்லர், வெற்றிக்கான காரணம் பற்றி கூறியுள்ளார்.

Ross Taylor

இந்தியாவில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி, மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 280 ரன்கள் எடுத்தது. இதையடுத்துக் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 49 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் அடைந்தது. இந்த சேசிங்கில், நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் டாம் லாதம் மற்றும் ராஸ் டெய்லர் ஜோடி, 200 ரன்களைச் சேர்த்தது. லாதம், சதம் கடந்து கடைசி வரை களத்தில் இருக்க, டெய்லர், 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடியின் அதிரடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாரகள் திணறினர். இந்நிலையில் வெற்றிகுறித்து ராஸ் டெய்லர், 'இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நானும் லாதமும் 'ஸ்வீப்' ஷாட்டை தொடர்ச்சியாக விளையாடியது வெற்றிக்கு மிக முக்கியக் காரணம். குல்தீப் யாதவ் மற்றும் சாஹல், ஒவ்வொரு முறையும் பந்து வீச வரும்போதும் ஸ்வீப் ஷாட்டுகளை ஆடிக்கொண்டே இருந்தோம். இது, அவர்கள்மீது அதிக அழுத்தத்தைக் கொடுத்தது' என்று கூறினார்.