வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (24/10/2017)

கடைசி தொடர்பு:10:45 (24/10/2017)

கவர் ட்ரைவ் கில்லி... ஃப்ளிக் ஷாட் புலி... கோலியின் பேட்டிங் ப்ளூ ப்ரின்ட்! #VikatanExclusive

"இந்திய அணியை 20 ஆண்டுகாலம் சுமந்திருந்தார். இது நாங்கள் அவரைச் சுமக்க வேண்டிய தருணம்" - 2011 உலகக்கோப்பையை வென்றதும், சச்சினைத் தன் தோள்களில் மைதானம் முழுதும் சுமந்து சென்ற விராட் கோலி கூறிய வார்த்தைகள். லிட்டில் மாஸ்டரை அன்று சுமந்த தோள்கள்தான், இன்று அவர் சுமந்த இந்தியக் கிரிக்கெட்டையும் சுமந்துகொண்டிருக்கிறது. டி-20யில் நம்பர் 1, ஒருநாள் போட்டியில் நம்பர் 2, டெஸ்டில் ஆறாம் இடம்... அனைத்து ஃபார்மட்களிலும் டாப் 10-ல் இருக்கும் மூன்று வீரர்களுள் முதன்மையானவர் விராட். போட்டிகளின்போது இவரோடு சேர்ந்தே களம் காண்கின்றன சாதனைகள். இந்த வாரமும் தன் சாதனைப் பட்டியலை நீட்டித்துவிட்டார். ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாமிடம். 28 வயதில், இவரது கிரிக்கெட் பயணம் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது. எப்படி? ஹவ் இஸ் இட் பாசிபிள்?

விராட் கோலி

ஞாயிறன்று, வான்கடே மைதானத்தில் கோலி ஆடிய ஆட்டம் மெச்சூர்டானது. சௌதியின் ஷார்ட் பாலை ஆன் சைடில் புல் செய்துவிட்டு, அந்த சிங்கிளை அவர் நிறைவு செய்தபோது 31-வது சதத்தை நிறைவு செய்திருந்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பான்டிங்கை பின்னுக்குத் தள்ளி, ஒருநாள் போட்டிகளில் சதமடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். முதலிடத்தில் இருப்பது சச்சின். ஒன் டே கிரிக்கெட்டில் 49 சதங்கள். அந்தச் சாதனையை உடைக்க, சச்சின் ஓய்வு பெற்ற வான்கடேவிலேயே அடித்தளம் போட்டுவிட்டார். ஆனால் பான்டிங்கும், சச்சினும் கோலியைப் போல் விரைவாக இத்தனை சதங்களை அடித்துவிடவில்லை. 30 சதங்கள் அடிக்க பான்டிங்குக்கு 375 போட்டிகளும், சச்சினுக்கு 49 சதங்கள் எடுக்க 463 போட்டிகளும் தேவைப்பட்டது. ஆனால் தனது 200 போட்டியிலேயே அந்த மைல்கல்லை எட்டியுள்ளார் விராட். சராசரியாக, குறைந்தபட்சம் ஒவ்வொரு ஏழு போட்டிக்கும் ஒரு சதம் என்ற விகிதத்தில் கோலி செஞ்சுரிகளாக அடித்து நொறுக்குகிறார். அம்மாடி...!

ஸ்டேடியம் தாண்டும் சிக்ஸர்கள் அடிப்பதில்லை. ரிவர்ஸ் ஸ்வீப், பேடில் ஷாட், ஸ்விட்ச் ஹிட் போன்ற மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள் ஆடுவதில்லை. எல்லாப் பந்துகளையும் பவுண்டரியாக விரட்ட முயற்சி செய்வதில்லை. ஆனால், கோலியின் ஆட்டம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அவரது கவர் ட்ரைவ்களைப் பார்க்கும்போது, சச்சினின் ட்ரேட் மார்க் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ்களைப் பார்த்த ஃபீல் கிடைக்கும். ஃபுல் லென்த் பந்துகளை அநாயசமாக ஃப்ளிக் செய்து அதை சிக்ஸராக்கும்போது புல்லரித்துப்போகும். இன்சைட் அவுட் ஷாட் அடிக்கும் அந்த டைமிங்கைப் பார்த்து அந்த ஆட்டத்தில் தன்னையே இழந்துவிடும் நம் விழிகள். எல்லாம் கிளாசிக்கல் ஷாட்கள். ஆனால் ஒவ்வொன்றும் ஓர் ஓவியம் அளவுக்கு நேர்த்தியானவை. அந்த அளவுக்குத் தன் ஆட்டத்திறனை கோலி வளர்த்துக்கொள்ளக் காரணம், அவரது பலம், பலவீனங்களை நன்கு அறிந்திருப்பதே.

கோலி

கோலியின் கவர் ட்ரைவ்கள், கிரிக்கெட் ஜாம்பவான்களே வியக்கும் ஒன்று. கோலி அடித்த ரன்களில் சுமார் 20 சதவிகிதம், கவர் ட்ரைவ்கள் மூலமாக வந்துள்ளது என்கிறார்கள் நம்பர் ஜீனியஸ்கள். ஆனால், கோலி போன்ற ஒரு வீரர் அதை ஆடுவது மிகவும் சிரமம். வலது கை பேட்ஸ்மேனான அவர், Bottom hand-ஆக இருக்கும் வலது கையை grip-ல் பிடிக்கும்போது மிகவும் திடமாகப் பிடிப்பவர். அப்படிப் பிடிக்கும் வீரர்கள், லெக் சைடில் மிகவும் ஸ்ட்ராங்காக இருப்பார்கள். கோலி லெக் சைடில் கில்லியாக இருப்பதற்கு அதுதான் காரணம். ஆனால் அப்படி bottom hand திடமாக இருக்கும் வீரர்களால் கவர் ட்ரைவ் சரியாக ஆட முடியாது. அது மிகவும் கடினம். ஆனால் கோலி எப்படி அவ்வளவு நேர்த்தியாக அந்த ஷாட்டை அடிக்கிறார்? கோலியின் இன்னொரு பலம் ஃப்ளெக்சிபிளான அவரது மணிக்கட்டு. சொல்லப்போனால், கோலியின் மிகப்பெரிய பலமே அதுதான். கவர் ட்ரைவ்கள் அடிக்கும்போது தனது மணிக்கட்டை மிகச்சிறப்பாகப் பயன்படுத்துகிறார். மணிக்கட்டை 180 டிகிரி சுழற்றுவதன்மூலம், பாட்டம் ஹேண்டினால் ஏற்படும் தடையைத் தாண்டி பிகாசோவின் ஓவியம்போல் அழகாய் அமைந்துவிடுகிறது அந்த ஷாட்!

அந்த ஷாட்களை பெர்ஃபெக்டாக்க சின்னச்சின்ன யுக்திகளையெல்லாம் மாற்றுகிறார் விராட். கவர் ட்ரைவ்களை விட கோலி அதிகம் ஆடும் ஷாட் - லெக் சைடு ஃப்ளிக். ஃபீல்டர்களுக்கு நடுவே 'கேப்'பில் பவுண்டரி அடிக்கவும், தனது மணிக்கட்டையே பெரிதும் பயன்படுத்துகிறார். தனது மணிக்கட்டின் பலத்தை உணர்ந்துள்ளதால், மற்ற வீரர்களைப் போல் முன்கூட்டியே பந்தை அடிக்க முற்படாமல், காத்திருந்து, பந்து பேட்டில் படும்போது, ஃபீல்டர்களின் பொசிஷனுக்கு ஏற்ப கேப் பார்த்து, அதற்குத் தகுந்தாற்போல் தனது wrist-யைப் பயன்படுத்துகிறார் விராட். அதனால்தான் அவரால் சீராக ரன் குவிக்க முடிகிறது. "க்ரீஸில் நிற்கும்போது, கால்கள் கவர் ஃபீல்டரை நோக்கி இல்லாமல், பாயின்ட் ஃபீல்டரின் திசையில் வைத்திருப்பதால், முன்னே சென்று அடிக்க எனக்கு அது மிக ஏதுவாக உள்ளது" என்றுதான் செய்த சின்னச்சின்ன அட்ஜ்ஸ்ட்மென்ட்கள் தனக்கு எப்படி உதவுகிறது என்று கூறுகிறார் கோலி.

விராட்

வெறும் பவுண்டரிகளில் மட்டும் கவனம் செலுத்துவது அவரது ஸ்டைல் கிடையாது. முடிந்தவரை சிங்கிள், டபுள் எடுப்பதில் கவனமாக இருக்கிறார். மிடில் ஓவர்களிலும் முடிந்தளவு ஓவருக்கு 5 முதல் 6 ரன்கள் வரும்பட்சத்தில், எதிரணி கேப்டனுக்கு அது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது விராட்டின் கேம் ப்ளான். சைக்கலாஜிக்கலாக எதிரணியை டீல் செய்வதும் அவரது பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறது. பவுலரின் பாடி லாங்குவேஜைக் கொண்டு அவரது கான்ஃபிடன்ஸ் லெவலை அறிந்துகொள்வதில் அவர் கில்லாடி. "பவுலர்களின் கான்ஃபிடன்ஸ் லெவல் குறைவாக இருந்தால், எனக்கென நான்கு பொசிஷன்கள் வகுத்துக்கொள்வேன். பாயின்ட், கவர், ஸ்ட்ரெய்ட் மற்றும் மிட் விக்கெட் முதல் ஸ்கொயர் வரையிலான திசை. இந்த நான்கு ஷாட் ஆப்ஷன்களில் ஒன்றை பந்துக்கு ஏற்றார்போல் ஆடிவிடுவேன். அதிக ஆப்ஷன்கள் இருந்தால் நம்மையும் அது குழப்பிவிடும் என்பதால், 4 ஆப்ஷன்களுக்கு மேல் வைத்துக்கொள்வதில்லை" என்கிறார் விராட்.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கென எப்போதும் எமனாக இருக்கும் ஷார்ட் பால்களையும் சாமர்த்தியமாக எதிர்கொள்கிறார் கோலி. மற்ற வீரர்களைப் போல் அதை ஸ்கொயர் லெக் திசையிலோ, ஃபைன் லெக் திசையிலோ எல்லைக்கு அனுப்ப நினைப்பதில்லை. ஷார்ட் பால்களுக்கு இரையாகிவிடக் கூடாது என்று அவற்றை க்ரவுண்டோடு அடிப்பதையே விரும்புகிறார். 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் ஜான்சனின் ஷார்ட் பாலில் விக்கெட்டை இழந்திருப்பார் கோலி. இந்த இடத்திலும் 2003 பைனலில் சச்சின் அவுட் ஆனது கண் முன் வந்து போயிருக்கும். ஆனால் அதன்பிறகு அவற்றை மிகவும் கவனமாகக் கையாள்கிறார். உதாரணமாக இவர் சதமடித்த பந்தை, விக்கெட் வீழ்த்த வேண்டுமென ஷார்ட் பாலாகத்தான் வீசினார் சௌதி. ஆனால், மிகவும் கவனமாக எதிர்கொண்டார். இவற்றையெல்லாம் தாண்டி கோலியின் இன்னொரு சக்சஸ் சீக்ரெட், அவரது ஃபிட்னஸ். பிசினஸ்மேனாக ஜிம் நடத்துபவர் எப்படியான fitnes freak ஆக இருக்க வேண்டும்? அணித்தேர்விலும் கூட ஃபார்மை விட ஃபிட்னசுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால்தான் அவரால் சிங்கிள், டபுள்களில் கூட எதிரணி பவுலரை பதம் பார்க்க முடிகிறது.

புல் ஷாட்

இப்படிச் சரியான யுக்தியைக் கையாள்வதும், அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டும் நேர்த்தியாக இருப்பதாலும்தான் கோலியால் எளிதாக ரன்வேட்டை நடத்த முடிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கிட்டத்தட்ட கிரிக்கெட் விளையாடும் எல்லா நாடுகளிலும் ரன்மழை பொழிந்துவிட்டார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை என எல்லா ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடித்துவிட்டார். சௌத் ஆப்பிரிக்கா மட்டும் பாக்கி. அங்கும் ஜனவரியில் தன் கொடியைப் பறக்கவிட்டுவிடுவார். குறிப்பாக, 2016-ம் ஆண்டை கோலியால் என்றுமே மறந்திட முடியாது. டெஸ்டில் 75.93 என்ற சராசரியோடு 3 இரட்டைச் சதங்கள், ஒருநாள் போட்டியில் சராசரியாக 92.37 ரன்கள் (3 சதங்கள்), சர்வதேச டி-20ல் சராசரியாக 106.83 ரன்கள் (7 அரைசதங்கள்) என ரன்மெஷினாகத் திகழ்ந்தார். போதாதற்கு IPL தொடரில் 4 சதம், 7 அரைசதம் உட்பட 973 ரன்கள் குவித்து உலகையே உலுக்கினார். அதனால் அந்தக் 'கனவு' ஆண்டை என்றுமே அவரால் மறக்க முடியாது. கோலியின் இந்தத் தாண்டவத்துக்குக் காரணம் இருக்கிறது. அதை அறிந்துகொள்ள 3 ஆண்டுகள் பின்னாலும், இங்கிலாந்து வரையும் செல்ல வேண்டும்.

2014 இங்கிலாந்து பயணத்தை கோலியால் என்றும் மறந்திட முடியாது. சர்வதேச அரங்கில் அவர் அறிமுகமானபோது கூட அவ்வளவு மோசமாக அவர் செயல்படவில்லை. 5 டெஸ்ட் போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4 ஒருநாள் போட்டிகளில் 54 ரன்கள். ஒரேயொரு டி-20யில் மட்டும் ஆறுதலாக 66 ரன்கள் எடுத்திருந்தார். அந்தத் தொடர் அவரை அவ்வளவு சோதித்தது. இங்கிலாந்து ஆடுகளங்களின் ஸ்விங் ஆகும் தன்மைக்கும், ஆண்டர்சன், ப்ராட் போன்றோரின் அபார பந்துவீச்சுக்கும் கோலியால் பதில்சொல்ல முடியவில்லை. டெஸ்ட் போட்டியின் 10 இன்னிங்ஸ்களில் 9 முறை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இரையானார். ஆஃப் ஸ்டம்ப் திசையில் பிட்சாகி, அவுட் ஸ்விங்காகி, வெளியே சென்ற பந்துகளை ஆட முடியாமல் தன் விக்கெட்டைத் தாரைவார்த்துக் கொண்டே இருந்தார். அவரது மோசமான ஃபுட் மூவ்மென்டையும், தவறான ஷாட் செலக்‌ஷனையும் குறிவைத்து அப்படியே அவரை ஒவ்வொரு முறையும் பெவிலியனுக்கு அனுப்பினர் இங்கிலாந்து பௌலர்கள்.

flick

அந்த 10 இன்னிங்ஸ்களில் இரண்டு முறை மோசமான ஃபுட் வொர்க்கால் LBW ஆனார். 3 முறை கீப்பரிடம் எட்ஜாகி வெளியேறினார். 4 முறை முதல் ஸ்லிப்புக்கும், 1 முறை செகண்ட் ஸ்லிப்புக்கும் கேட்சிங் பயிற்சி கொடுத்தார். ஒருநாள் தொடரிலேனும் மீண்டு வருவார் என்று பார்த்தால், ஸ்லிப்பிலிருந்து மீண்டு மிட் ஆன், மிட் ஆஃப் ஃபீல்டர்களிடம் கேட்ச் ஆனார். கோலியின் பேட்டிங் முற்றிலுமாக முடிந்துவிட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. ஒட்டுமொத்த மீடியாவும் கோலியின் பேட்டிங்கை குறிவைத்தது. அதுவே கோலியின் மிகமோசமான தொடர் என்பது உண்மை. ஆனால், கோலியின் 'Flawless' வெர்ஷன் வெளிப்பட அந்தத் தொடர்தான் மிகமுக்கியக் காரணமாக அமைந்தது. நார்மல் மோடில் இருந்தவரை, டெமாலிஷன் மோடுக்கு மாற்றியது அந்தத் தொடர்.

பந்து அவுட் ஸ்விங் ஆனபோது பேட்டின் முன்பகுதி முழுதும் பவுலருக்குத் தெரியும் வகையில் ஆடித்தான் அவுட் ஆனார் விராத். மிடில் ஸ்டிக் லைன் எடுத்து விளையாடியதால் அவரால், அந்தப் பந்துகளுக்குச் சரியாக Front foot மூவ்மென்ட் கொடுக்க முடியாமல் போனது. க்ரீசிலும் மிகவும் டீப்பாக இறங்கி நின்றிருந்தார்."இங்கிலாந்து தொடர் சொதப்பலுக்குப் பிறகு இதையெல்லாம் பிரமிக்கவைக்கும் வகையில் மாற்றினார் விராட். முன்பெல்லாம் அதிகம் கட் ஷாட் ஆடாத அவர், சமீப காலமாக ஸ்கொயர் கட் ஷாட்களை மிகச்சிறப்பாக ஆடத் தொடங்கியுள்ளார். மேலும் பந்தை ஃப்ரன்ட் ஃபுட்டில் ஆடாமல், பேட்டின் முன்பகுதியை முழுமையாகக் காட்டாமல் லேட் கட் ஷாட்களை வெகுநேர்த்தியாக அடிக்கத் தொடங்கியுள்ளார்" என்று விராட்டின் சமீபகால சக்செஸ் பற்றிக் கூறுகிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா. லேட் கட் ஷாட்கள் அடிக்கும்போது உடலை பேட்டுக்கு மிக அருகில் வைத்திருக்க வேண்டும். கண்ணும் பேட்டும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போதுதான் ஷாட் நேர்த்தியாக இருக்கும். இதில் கோலியின் பெர்ஃபெக்ஷன் லெவல் 100!

 

 

கோலியின் சக்சஸ்க்குக் காரணம் இதுதான். தன் பலம் எது என்பதை நன்றாக உணர்ந்து, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால், கோலியை வேர்ல்டு க்ளாஸ் பேட்ஸ்மேன் ஆக்கியது, அவர் தன் தவறிலிருந்து கற்ற பாடங்களே. "களத்தில் ஆக்ரோஷம் கொள்கிறார். இளம் வயதில் இது சரிவராது" என்று சொல்லியபோது, அதையும் சரியாகக் கையாண்டு இன்று இந்திய அணியின் கேப்டனாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறார். ஒருவன் தன் தவறை ஏற்றுக்கொள்ளும்போதுதான் அவன் முழுமையான மனிதனாகிறான். தன் பேட்டிங்கின் தவறுகளை முழுமையாக உணர்ந்து அவற்றை எந்த மறுபரிசீலனையும் இன்றி மாற்றிக்கொண்டார். இதோ அனைத்துப் பந்துவீச்சாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக உருவெடுத்து, சாதனைகளுக்கெல்லாம் சவால் விட்டு நிற்கிறார் கோலி - கிங் கோலி!


டிரெண்டிங் @ விகடன்