Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஒரே ரெய்டில் எட்டு பாயின்ட்... ப்ரோ கபடியின் ‘மெர்சல் அரசன்’ பர்தீப் நர்வால்! #ProKabaddi

Chennai: 

மும்பையின் சர்தார் வல்லபாய் படேல் உள் விளையாட்டு அரங்கம் திடீரென அலறியது. ரசிகர்களின் கோஷம் ஓரிரு நிமிடம் அடங்கவேயில்லை. இதுவரைக் கண்டிராத ஒரு அதிசயத்தைக் கண்டதுபோன்ற ஆச்சர்யம். அந்த வியப்பின் உச்சத்தை, தங்கள் கோஷத்தால் வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர். ஏன் இவ்வளவு வியப்பு? 'அப்படி என்ன நடந்துவிட்டது?' 8 விரல்களை மேல் நோக்கி நீட்டிக்கொண்டு "பாட்னா பைரேட்ஸ் 8 பாயின்ட்ஸ்" என அறிவித்தார் நடுவர். ஒரே ரெய்டில் எட்டு புள்ளிகளா? சான்ஸே இல்லை. நடப்பதை யாராலும் நம்ப முடியவில்லை. நடுவரிடமிருந்து விலகி ப்ளேயர்களை நோக்கி நகர்ந்த கேமராக்கள், அந்த மனிதனை ஃபோகஸ் செய்தபோது, ஆச்சர்யத்தால் கனவுலகம் சென்றவர்கள் நினைவுக்கு வந்தனர். கபடியில் ஆகச் சிறந்த ரெய்டர் ஒரே ரெய்டில் 4 பாயின்ட் எடுப்பதே சிரமம். ஆனால், ஒரே ரெய்டில் 8 பாயின்ட் எடுக்க முடியும்... மொத்த அணியையும் ஆல் அவுட் செய்ய முடியும்... ஒரு நொடி மாயத்தால் எதிரணியை சுருட்டி வீச முடியும் என நிரூபித்தான் வீரன் ஒருவன்... அவன் பெயர் பர்தீப் நர்வால்.

பர்தீப் நார்வால்

ரீப்ளே ஒளிபரப்பாகிறது.  44 - 25 என ஹரியானா ஸ்டீலர்ஸை விட 19 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறது பாட்னா. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் வெளியேறிவிட வேண்டும். அதனால் ரிஸ்க் எடுக்க முடியாது. இதுபோன்ற தருணங்களில் இந்த 19 புள்ளி முன்னிலையை கூலாக டிஃபண்ட் செய்வது, இந்திய கேப்டன் அனுப் குமார் ஸ்டைல். ஆனால், பாட்னா கேப்டன் பர்தீப், வேற மாதிரி ப்ளேயர். எப்பொழுதும் 'அட்டாக் மோட்' தான். ஆட்டத்தின் 33-வது நிமிடம். ரெய்டுக்குச் செல்கிறார். கேப்டன் சுரேந்தர் நாட்டா, மோஹித் சில்லர் போன்ற சூப்பர் டிஃபண்டர்கள் இருக்கும் அணி ஹரியானா. இந்த சீசனில் மட்டும் 80 'டேக்கிள் பாயின்ட்ஸ்' எடுத்து மிரட்டியிருக்கிறார் சுரேந்தர். அவர் உள்பட ஆறு வீரர்கள் களத்தில்...

அதைப்பற்றியெல்லாம் பர்தீப் கவலைப்படவில்லை. ஹரியானாவின் வலது கார்னரைக் குறிவைத்து, வழக்கம்போல் 'அசால்டாக' களமிறங்கினார். ஏழு நொடிகள்தான் ஆகியிருந்தது. சட்டென்று நடுவில் நின்றிருந்த தடுப்பாட்டக்காரர் ராகேஷ் குமாரை நோக்கி புயலாகப் பாய்ந்தார். ராகேஷும், நீரஜ் குமாரும் பின்வாங்க, அட்டாக் செய்தது இடது கார்னரில் நின்றிருந்த சுரேந்தர் நாட்டா, விகாஸ் கண்டோலா கூட்டணி. கைகோத்திருந்த இருவருக்கும் இடையே நல்ல இடைவெளி. அதனால் உடம்பைத் திருப்பி, இடதுபுறம் நெளிந்து, இருவரையும் தொட்டு விலகினார். வேறொரு வீரராக இருந்திருந்தால் நிதானம் இழந்திருப்பார். அதனால் அவரது காலை 'லாக்' செய்ய விரைந்தனர் நீரஜ், ராகேஷ் இருவரும். ஆனால், பர்தீப்பின் அபார பேலன்ஸும் ,வேகமும் அவர்களை ஏமாற்றியது. ராகேஷின் பிடியிலிருந்து வேகமாக அவர் விலக, அவரைப் பிடிக்க, வலது புறமிருந்து விரைந்தது பிரசாந்த் குமார் ராய், விகாஸ் (விகாஸ் கண்டோலா அல்ல. இன்னொரு விகாஸ்) கூட்டணி. தனது மார்பை அவர்கள் குறிவைப்பதை உணர்ந்த பர்தீப், சட்டென்று கீழே குனிந்தார். அவர்கள் இருவரும் கூட காலி. அந்தச் சமயம் நீரஜ் அவரைப் பிடிக்கப் போக, இடதுபுறம் வளைந்து திரும்பி, கோட்டைத் தொட்டது அந்தப் புயல். இவை அனைத்தும் நடந்தது வெறும் நான்கு நொடிகளில்!

 

 

நான்கே நொடிகளில் மொத்த டீமையும் வாரிக்கொண்டுச் சென்றது அந்தப் புயல். ஆறு வீரர்கள் அவுட். ஆல் அவுட்டுக்கு இரண்டு. மொத்தம் எட்டு புள்ளிகள். வர்ணனையாளர்கள், ரசிகர்கள்... ஏன், ஹரியானா வீரர்கள் கூட விக்கித்து நின்றனர். அதோடு நிற்கவில்லை. ஆட்டம் முழுதும் வீசியது அந்தப் புயல். நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 34 'ரெய்ட் பாய்ன்ட்ஸ்'. ப்ரோ கபடி வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரெய்ட் புள்ளிகள்.  அதுமட்டுமின்றி ப்ரோ கபடி வரலாற்றில் ஒரே சீசனில் 300 புள்ளிகளைத் தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இப்படி இந்த இளம் வீரரைச் சுற்றி புகழ் வெளிச்சம் வீசிக்கொண்டே இருக்கிறது.

கபடி

அனுப் குமார், மஞ்சித் சில்லர், அஜய் தாக்கூர் என்று சீனியர் வீரர்களின் அனுபவ ஆட்டத்தால் வெற்றி கண்டிருந்த ப்ரோ கபடித் தொடரின் இன்றைய செல்லப்பிள்ளை - பர்தீப் நார்வால்.  ஆட்டத்தில் அவ்வளவு ஸ்டைல். இவரை, கபடியின் டி வில்லியர்ஸ் என்றுகூடச் சொல்லலாம். தன்னைப் பிடிக்க வரும் வீரர்களிடமிருந்து தப்பிக்க, 'டுப்கி' மூவைப் பயன்படுத்தி தப்பிப்பதில் கில்லாடி. டைமிங், வேகம் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். அதைத் துல்லியமாகச் செய்து பார்ப்பவர்களைப் பரவசப்படுத்திவிடுவார். ஹரியானாவைச் சேர்ந்தவரான இவர், இரண்டாவது ப்ரோ கபடி சீசனில் பெங்களூரு புல்ஸ் அணிக்காக முதன்முறையாக இந்த அரங்கினுள் நுழைந்தார். மூன்றாவது சீசனில் இவரை பாட்னா அணி வாங்க, தொடங்கியது பர்தீப்பின் ஆட்டம். அந்த சீசனில் 121 புள்ளிகள், அடுத்த சீசனில் 133 என புள்ளிகளை வாரிக் குவித்தார். மஞ்சித் சில்லர், சந்தீப் நார்வால் போன்ற அனுபவ தடுப்பாட்டக்காரர்களுக்கே சிம்மசொப்பனமாய் இன்று மாறியிருக்கீறார். அதுவும் 20 வயதில்! 

 

 

இன்று ப்ரோ கபடி என்றாலே பர்தீப் தான். இவரது ரசிகர் படை நாடெங்கும் பரந்துக் கிடக்கிறது. உதாரணமாக நம் ஊரில் நடந்த இந்தச் சம்பவம்... கடந்த மாதம், முதன்முதலாக ப்ரோ கபடித் தொடர் சென்னையில் நடந்தது. தமிழ் தலைவாஸ் அணி உரிமையாளர் சச்சின் வந்திருக்கிறார். கிரிக்கெட் அரங்கம்போல் நேரு உள்விளையாட்டு அரங்கமே அவர் பெயரை முழங்குகிறது. எல்லாம் ஓய்ந்து விட்டது. தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன்ஸ் அணிகள் போட்டிக்காகத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூரின் பெயரைச் சொல்லி கத்துகிறார்கள் ரசிகர்கள். அது ஓய்ந்த சில நொடிகளில், "பர்தீப்..பர்தீப்..பர்தீப்.." என்ற முழக்கம்.  அன்று இரண்டாவது போட்டி பாட்னாவுக்கு. முதல் போட்டி தொடங்கிய சமயம், பர்தீப் அங்கு இல்லவே இல்லை. ஆனால், சென்னை ரசிகர்களின் ஆதரவுக் குரல் இரண்டாவது போட்டி முடியும் வரை அந்த 20 வயது நாயகனுக்கு ஒலித்துக்கொண்டே இருந்தது. சென்னை மட்டுமல்ல, மொத்த தேசத்துக்கும் இன்று கபடி ஐகான் - பர்தீப்தான்.

கபடி

உலக அரங்கில் கபடியில் இந்தியாவை அடிக்க ஆளில்லை. அனுப், மஞ்சித், ராகுல் சவுத்ரி போன்ற சீனியர்கள் இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் இதே ஃபார்மோடு ஆடலாம். அதன்பிறகு? இந்திய ரசிகர்களின் இந்த மிகப்பெரிய கேள்விக்கான பதில் - பர்தீப் நார்வால். குறைந்தபட்சம் இன்னும் பத்து ஆண்டுகள், கபடி உலகில் கொடிகட்டிப் பறக்கப் போகிறான் இந்த இளைஞன். இனி, இந்திய கபடியின் அடையாளம் இவன்தான்.

மோதிப்பாரு - இவன் தாருமாறு!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement