வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (24/10/2017)

கடைசி தொடர்பு:20:25 (24/10/2017)

தமிழ்ப் பேசி குழப்பிய பதானி... முன்னாடி, பின்னாடிக்கு அர்த்தம் அறிந்த சச்சின்!

தமிழ் மொழி தெரிந்தவர்கள்கூட இன்று சரியான உச்சரிப்பில் தமிழ்ப் பேசுவது கிடையாது. ஆனால், தமிழே தெரியாத பல பிரபலங்கள் தமிழில் பேசினால், ஆர்வத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்து மகிழ்வது தமிழ் ரசிகர்களுக்கே உரியது. அதிலும் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமிழில் பேசினால், சொல்லவும் வேண்டுமோ!

சச்சின்

பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் `Democracy's XI: The Great Indian Cricket Story' என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில், கிரிக்கெட் மீதான ஆர்வம், தன் ஆதர்ச நாயகர்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், கிரேக் சேப்பல் மீதான ஈர்ப்பு, 1971-களில் இருந்த இந்திய அணியினர் மீதான பிரமிப்பு குறித்து விரிவாக எழுதியுள்ளார்.  இந்தப் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைப்பெற்றது. இந்திய கிரிக்கெட் எப்படியெல்லாம் மாறியது, பல்வேறு மதத்தினர் உள்ள நம் நாட்டில் கிரிக்கெட் எப்படியெல்லாம் மத ஒற்றுமையை ஏற்படுத்தியது எனக் கிரிக்கெட் தொடர்பான ஆழ்ந்த அர்த்தமுள்ள கேள்விகளுக்கான பதில்கள் இந்தப் புத்தகத்தில் பொதிந்துள்ளன.

புத்தக வெளியீட்டு விழாவில் பங்குபெற்ற சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் இருவரும் தங்களின் புத்தக அனுபவம் குறித்துப் பேசினர். சச்சின் ஓரிரு வார்த்தைகள் தமிழில் பேசியுள்ளார். ``மும்பையில் நடந்த ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக மும்பை விளையாடிய போட்டியில், பந்து ஒரு கட்டத்தில் ரிவர் ஸ்விங் ஆகத் தொடங்கியது. நான் பெளலரின் லென்த்தை குழப்புவதற்காக கிரீஸிலிருந்து இரண்டு ஸ்டெப் முன்னோக்கிச் சென்று நின்றேன்.  இதை பாயின்ட் திசையில் இருந்த ஹேமங் பதானி கவனித்தார். உடனே அவர் பெளலரிடம் `முன்னாடி முன்னாடி’ என்று கூறினார். நான் 15 ஆண்டுகளாக இந்திய அணியில் சென்னை வீரர்களிடம் பழகியிருந்ததால், அவர் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால் பதானி பெளலரிடம் சொன்னதற்கு மாறாக, முன்னாடியும் பின்னாடியும் மாறிமாறி நின்றுகொண்டிருந்தேன்.'' என்று களத்தில் தான் கேட்ட தமிழ் வார்த்தைகளின் பின்னணியை விளக்கினார்.

சச்சின்

சச்சினின் இந்த தமிழ் உச்சரிப்பைக் கேட்ட பார்வையாளர்கள் ஆச்சர்யமடைந்தனர். ரசிகர்கள் மட்டுமல்ல ஹேமங் பதானியும், சச்சின் பேசிய இந்த வீடியோவை ட்விட்டரில் பெருமையுடன் வெளியிட்டுள்ளார். `களத்தில் தமிழ்ப் பேசி சச்சினைக் குழப்பிவிட முடியும் என நீங்கள் நினைத்தால், அது தவறு’ என ஒரு வீடியோ ட்வீட் பதிவிட்டுள்ளார் பதானி.

 

எங்கு, யார், எது குறித்துப் பேசினாலும், அதிலுள்ள நல்ல பல கருத்துகளைத் தமிழ் மொழி தத்தெடுத்துக்கொள்ளும், நற்கருத்துகளை விதைத்தோர் கொண்டாடப்படுவர் என்பதற்கு, இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம். தமிழ் மொழியை ஒரு தமிழன் உச்சரிப்பதைவிட, தமிழ் மணம் இல்லாத ஒரு பிரபலம் பேசும்போதுதான் அந்த மொழிக்கே உரிய அழகையும் அற்புதத்தையும் நம்மால் உணர முடிகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்