வெளியிடப்பட்ட நேரம்: 21:27 (25/10/2017)

கடைசி தொடர்பு:08:01 (26/10/2017)

இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்று தொடரை சமன் செய்தது இந்தியா!

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

இந்திய கிரிக்கெட் அணி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில்  விளையாடவுள்ளது. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள், புனே மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்குத் தொடங்கியது. பகல் - இரவு ஆட்டமான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியவுடன் முதல் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சற்று ரன் குவிக்கவே நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில், 230 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் புவ்னேஷ்வர் குமார், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் ஷர்மா 7 ரன்களில் வெளியேற தவான் 68 ரன்கள் எடுத்து, சேசிங்கிற்கு அடித்தளம் அமைத்தார். இதையடுத்து, இறங்கிய தினேஷ் கார்த்திக், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 46 ஓவர்களில் அடைந்தது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக புவ்னேஷ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, வரும் 29-ம் தேதி கான்பூரில் நடக்கவுள்ளது.