வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (26/10/2017)

கடைசி தொடர்பு:16:38 (26/10/2017)

கோப்பை வெல்ல 10 பாயின்ட் தியரி..! கோலி படைக்கு வாழ்த்துகள் #IndVsNz

கிரிக்கெட்டை நன்கு கவனித்து வரும் கடைக்கோடி ரசிகன் முதல், கிரிக்கெட்டையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் நிபுணர்கள் வரை அனைவரிடத்திலும் இருக்கும் ஒரே கேள்வி, "தற்போதுள்ள அணியை வைத்து, 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை, கோலி தலைமையிலான இந்திய அணியால் வென்றுவிட முடியுமா?" 

இரண்டு வருடங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையின், அரையிறுதியில், தொடரை நடத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்று, நாடு திரும்பியது தோனி தலைமையிலான இந்திய அணி . அதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளிலும் (முத்தரப்பு தொடர்) இந்தியா, ஃபைனலுக்குத் தகுதி பெறவில்லை. நல்ல ஓப்பனர்கள், அனுபவ மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என பேட்டிங் ஆர்டர் தெம்பாக இருந்தாலும், ஆஸ்திரேலிய அணியை கட்டுக்குள் வைக்க முடியாத அளவுக்கு இந்திய அணியின் பௌலிங் மிக மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் முதற்கொண்டு அடித்து வெளுக்க, 330 ரன்களுக்கு மேல் கொடுத்துவிட்ட காரணத்தினால் நம்மால் கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை.

கோலி

இதற்கு நேர்மாறாக, தற்போதுள்ள அணியில், நல்ல பௌலர்கள் இருக்கிறார்கள், ஆனால் கோலியின் அணியில், அவரை நம்பித்தான் மிடில் ஆர்டர் மொத்தமாக சுழன்று கொண்டிருக்கிறது. அண்மையில், இலங்கை அணிக்கு எதிராக கொத்து கொத்தாக இரண்டு முறை அகிலா தனஞ்செயாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும், தோனி, புவனேஷ்வர் குமார், ரோஹித் போன்றவர்கள் காப்பாற்றி விட்டனர். இந்த மிடில் ஆர்டர் பரிதாபங்களைப் போக்கவும், ஒவ்வொரு வீரருக்கும் இணையான மற்றொரு வீரரைத் தயார் செய்வதும் மிகவும் அவசியம். சில விஷயங்களை 'தியரியாக' பார்க்கும்போது அட்டகாசமாக இருக்கும். ஆனால், அதையெல்லாம் எளிதில் செயல்படுத்திவிட முடியாது. அப்படி இங்கு சில தியரிகளைப் பார்ப்போம்...

தியரி 1

இப்போது, இந்தியாவில் ஷிகர் தவான், ரோஹித், விராட் கோலி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் நிறைய ரன்களைக் குவித்து வருகின்றனர். ஆனால், மூவருமே ஸிவ்ங் பௌலிங்கிற்கு எதிராக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து விடுவர். மூவரும் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து ஆட்டமிழந்தால் அவ்ளோதான். எல்லா போட்டிகளிலும் சென்னையில் பாண்டியா - டோனி அடித்த மாதிரி, ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டுவிட மாட்டார்கள்.  மேலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு, உலகக்கோப்பை முடியும் வரை இந்தியா வெகு சொற்பமான ஆட்டங்களையே இந்தியாவில் ஆடவுள்ளது. வெளிநாடுகளில் உபயோகிக்கப்படும் பந்துகளும் சீதோஷண நிலையும் நன்றாக பந்தை ஸ்விங் செய்ய உதவும். இவர்கள் மூவரில் ரோஹித், இன் ஸ்விங் பந்தில் அடிக்கடி அவுட்டாகிறார். கோலி இன்னமும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியில் வீசப்படும் பந்துகளை துரத்தி அவுட் ஆகிறார். தவான்  பௌன்சர்களுக்கும், அவுட் ஸ்விங்கிற்கும் இறையாகிறார். இம்மூவரும் அடுத்தடுத்து சோபிக்காமல் வெளியேறிய சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் என்ன நடந்தது என்று நினைவிருக்கலாம். அதனால், இங்குள்ள பிட்ச்களை இன்னும் ஸ்பின்னுக்குச் சாதகமாக உருவாக்காமல், இங்கிலாந்து பிட்ச்களைப்போல் உருவாக்குவது, இவர்களுக்கு மட்டுமல்லாமல், பௌலர்களுக்கும் நல்ல அனுபவமாக அமையும்.

பாண்டியா

தியரி 2

ஹர்திக் பாண்டியா எனும் தங்கச் சுரங்கம் நமக்கு கிடைத்துள்ளது. அவரை பாதுகாக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. இளையவராக இருந்தாலும், அவரிடமிருந்து ஒட்டுமொத்த உழைப்பை எப்போதுமே உரிந்துவிடக் கூடாது. 4,5,6,7 என அங்குமிங்கும் அலைக்கழிக்காமல், இதுதான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று எவ்வளவு சீக்கிரம் வரையறுக்கிறோமோ அவ்வளவு நல்லது. இல்லையென்றால், இரண்டொரு தருணங்களில் பாண்டியா சோபிக்காமல் போனாலும், மீடியாவும் ரசிகர்களும் வறுத்தெடுத்து விடுவார்கள். அடுத்தடுத்து வரும், தென்னாப்பரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் அவரின் தன்னம்பிக்கையை உடைக்க எதிரணியினர் முனைவார்கள். ஏனென்றால், இன்றைய தேதியில், பாண்டியா, பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் மிகவும் அரிது. அவர்களைச் சுற்றியே அணியின் வெற்றிகள் நிர்ணயிக்கப்படும். 

தியரி 3

கேதார் ஜாதவ் அட்டகாசமாக பந்து வீசுகிறார். ஒரு பார்ட் டைம் பௌலரை விட திறமையாக பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் , அவ்வப்போது விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார். ஆனால், பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பத்தில், கேப்டன் கோலியுடன் சேர்ந்து அடித்த ஒரு சதத்தைத் தவிர குறிப்பிடும் படியாக அவர் ஏதும் சாதிக்கவில்லை. 4,5,6 என பேட்டிங் வரிசையில் அல்லாடிக்கொண்டிருக்கிறார். மேலும், இறங்கிய உடனேயே அடித்து ஆட வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆடுவதால் விக்கெட்டைப் பறிகொடுத்துவிடுகிறார். ஜாதவிடம் அணியின் நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதைத் தெளிவாக புரியவைக்க வேண்டும். பந்துவீச்சு நன்றாக வருகிறது என்றால், அவரிடமிருந்து எல்லா போட்டிகளிலும் 6-7 ஓவர்களை வீசவைத்து, 7-வது வீரராக இறக்கி அடித்து ஆடச் சொல்லலாம். இங்கிலாந்தின், மொயீன் அலி கூட ஜாதவைப் போலவே நிலைத்த இடத்தை நோக்கி பயணப்பட்டபோது, அணியின் நிர்வாகம் அவரின் திறமையை கணித்து அவருக்கென்று ஒரு 'ரோலை' உருவாக்கியது. இப்படிச் செய்தால், அணிக்கும் வீரருக்கும் 'வின் வின்' சிச்சுவேஷனாக இது அமையும். 

ஜாதவ்

தியரி 4

300 போட்டிகளுக்கு மேல் ஆடி, தற்போதுள்ள அணியில் சீனியராக இருக்கும் தோனியின் சேவையை, எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவு பெற வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளில் அணியைக் கரைசேர்த்த அனுபவம் இருப்பதால், 20-2 என்று அணி தள்ளாடும்போதெல்லாம், தோனியை அனுப்பி நிலைமையைச் சீராக்க வேண்டும். கடந்த பத்து ஆட்டங்களில் தோனி ஆடாத இடங்களே இல்லை என்றாகிவிட்டது. சூழல், வேகம் இரண்டையுமே தாக்குப்பிடிக்கும் தன்மை தோணியிடம் இருப்பதால், 4,5 நிலையைத் தவிர பின்னோக்கி அனுப்பிக் கொண்டே இருந்தால், அது அணிக்கு பலன் தராது. மேலும், தோனி முன்புபோல எடுத்தவுடனேயே அடித்து ஆட முடியாமல் தவிப்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த காரணத்தினாலேயே பெங்களூரு போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவுக்கு வெற்றி தேடித் தர முடியாமல் போனது. ஸோ, தோனியை குறைந்தபட்சம் ஐந்தாவது வீரராகப் ப்ரமோட் செய்வது அணிக்கு நல்லது.

தியரி 5

மனிஷ் பாண்டே திறமையானவர்தான். ஏனோ அவரால் உள்ளூர் போட்டிகளைப் போல, சர்வதேச அரங்கில் ஜொலிக்க முடிவதில்லை. பாண்டேவின் ப்ளஸ் பாயிண்ட்டே அவரின் தனித்துவமான பேட்டிங் ஷாட்டுகள் தான். ஆனால், அவரிடம் பொறுமையும் இல்லை. அதிர்ஷ்டமும் இல்லை. பாண்டேவை, 'பேக் அப்' ஆப்ஷனாக வைத்துக்கொண்டு, அவருக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அணியில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லையென்றாலோ, ஓய்வு தேவைப்பட்டாலோ, பாண்டே உடனடியாக அந்த தருணத்தில் வேறொருவர் இல்லாத குறையை நீக்க வேண்டும். இப்போதைக்கு பாண்டேவை உடனடித் தீர்வாக வைக்காமல், எதிர்கால ஆப்ஷனாக வைத்துக்கொள்வது நல்லது. 


தியரி 6

இங்குதான், ரஹானேவை உபயோகிப்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு. ரஹானே கடந்த ஆறு மாதங்களில், தனக்கு கிடைத்த வாய்ப்பில் எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டார் . ஒருநாள் போட்டிகளிலும் தன்னால் நன்றாக செயல்பட முடியும் என நிரூபித்துவிட்டதால், இரண்டு தொடர்களுக்கு, ரஹானேவை நான்காம் இடத்தில் இறக்கிவிடலாம். ஆனால், தோனி ஒருமுறை, ரஹானேவை ஆடவைத்தால் அது ஓப்பனாராக மட்டுமே ஆட வைக்க முடியும் என்று ரஹானேவின் பலத்தை சுருக்கிவிட, கோலியும் அதையே ஃபாலோ செய்கிறார்.  ரஹானே வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக எதிர்க்கொள்ளக்கூடியவர். எனவே, விரைவில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், நிலைத்து நின்று அணியைக் காப்பாற்றிவிடுவார்.

ரோஹித்

இதே ரஹானேவைக் கொண்டு, வேறொரு வித்தையும் செய்யலாம். அதாவது, தற்போது, தவானைத்தவிர, இடதுகை வீரர்கள் அணியில் இல்லை (குல்தீப் யாதவ் பௌலர் என்பதால் சேர்க்கவில்லை). மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மான் இருப்பது அவசியம். அப்போதுதான் பந்து வீச்சாளர்கள் அவர்களின் வியூகத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இருக்கும். இல்லையென்றால், ஒரே மாதிரி போட்டு டாமினேட் செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே, தவானை மிடில் ஆர்டரில் இறக்கி, சோதனை முயற்சியாக ரஹானே-ரோஹித்தை ஓப்பனிங்  இறக்கலாம். தவான் மிடில் ஆர்டரில் வருவது இயலாது என்று யோசிக்கலாம். அணிக்காக சச்சின்,கங்குலி கூட இதை செய்தவர்கள்தான். மேலும், இதே முயற்சியை ரோஹித்தைக் கொண்டும் செய்யலாம். ரோஹித், தவான் இருவருமே சுழற்பந்துவீச்சாளர்களை பதம் பார்ப்பதில் கில்லிகள். மேலும், ஒருநாள் போட்டிகளில், பந்து ஸ்விங் ஆகும் தன்மையை இழந்துவிட்டால், இருவரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. 

தியரி 7

மேலே குறிப்பட்டதைப் போல, மிடில் ஆர்டரில் ஒரு இடது கை ஆட்டக்காரர் இருத்தல் அவசியம். இதில், சர்வதேச அரங்கில் 5,000 ரன்களுக்கு மேல் குவித்த ரெய்னா தற்போது அணியில் இடம்பெறாமல் இருக்கிறார். ஆனால், அணியின் நிர்வாகம் நடத்தும் ஃபிட்னெஸ் டெஸ்டில் அட்டகாசமாக முன்னேறியிருக்கிறார். மேலும், ஜாதவைப் போல பந்தும் வீசுவார். இந்தியாவின் தலைசிறந்த ஃபீல்டர் என்று, ஜான்ட்டி ரோட்ஸ் முதற்கொண்டு பலராலும் பாராட்டப்படுபவர். அப்படிப்பட்ட வீரரை வெகு காலம் ஓரங்கட்டுவது நல்லதில்லை. 

கார்த்திக்

தியரி 8

என்னதான் தினேஷ் கார்த்திக், விக்கட் கீப்பிங் செய்யாமல், பூரண பேட்ஸ்மானாக மட்டுமே ஆடினாலும், அவருக்குள் இருக்கும் 'கீப்பிங்' தன்மை அவரை விட்டுப் போகாது. அணியின் நிர்வாகம் தற்போது, இளம் வீரரான ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை. அதனால்தான் தினேஷ் கார்த்திக், தற்போது மிடில் ஆர்டர் வீரராக களமிறப்படுகிறார். ஆனால், "தோனிக்கு மாற்றாக கீப்பிங் செய்வாரா?" என்றால் அதைப்பற்றி நிர்வாகம் ஒன்றுமே சொல்லவில்லை. 2004-ல் சர்வதேச அரங்கில் நுழைந்தாலும், 13 வருடங்களில் 80 ஒருநாள்  போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இன்னமும் 15 முதல் 20 ஆட்டங்களில் தொடர்ந்து நன்றாக ஆடினால் மட்டுமே, உலககோப்பைக்கு ஃபிளைட் ஏற முடியும். இதே இடத்துக்கு கே.எல் ராகுலும் பொருந்தக்கூடியவரே. அவராலும் விக்கட் கீப்பிங் செய்ய முடியும். பேட்டிங்கும் பக்கா. எனவே, மிடில் ஆர்டரில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்ய, யாரை களமிறக்குவது, யாரை பேக்-அப் வீரராகப் பயன்படுத்துவது என்று சரியான முடிவை நிர்வாகம் விரைந்து எடுக்கவேண்டும்.

தியரி 9

ஸ்விங் செய்ய புவனேஷ்வர் குமார், இறுதி ஓவர்களில் யார்க்கர் வீச பும்ரா என கோலிக்கு பக்கபலமாக விளங்கும் இவ்விரு வீரர்களுக்கும்  இப்போதைக்கு மாற்று இல்லை. இவர்களுக்கு ஓய்வளித்துவிட்டு முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரைக் களமிறக்கிய போட்டியில்  ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் அடித்தது. இருவருக்குமே ஓய்வளிக்காமல் அவ்வப்போது ஒருவரை மாற்றி ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதை முக்கியமான போட்டிகளில் சோதிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அணியில் எல்லோரும் வெற்றிக்கு வித்திடுவார்கள் என்ற நம்பிக்கை வரும். வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதில் காயத்தில் சிக்குவர். அதனால், புவி, பும்ரா இருவரையும் 2019 உலகக்கோப்பைவரை ஃபிட்டாக வைத்திருப்பது அவசியம்.

புவி

தியரி 10 

அஸ்வின் - ஜடேஜா கூட்டணிக்கு இப்போதைக்கு லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் வேலையில்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஜடேஜாவாவது அவ்வப்போது ஃபீல்டிங்கில் கவனம் ஈர்க்கிறார். ஆனால், அஷ்வினை தேர்ந்தெடுக்காததற்கு நிர்வாகம் இன்னும் பதில் சொல்லவில்லை. இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிகம் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை. அவர்களுக்குப் பதிலாக வந்த சாஹல், குல்தீப் யாதவ் இருவரும் இலங்கை, ஆஸ்திரேலிய தொடர்களில் நன்றாகப் பந்துவீசினர். ஆனால், இரண்டு தொடர்களை வைத்து அவர்களை மதிப்பிடுவது தவறு. நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருவருமே சோபிக்கத் தவறினர். உலகக்கோப்பை போன்ற தொடர்களுக்கு அனுபவம் முக்கியம். அவர்கள் இருவரும் தொடர்ந்து ஜொலித்தால், அணிக்கு ப்ளஸ். ஒருவேளை தவறினால்? அப்போது கைகொடுக்க இந்த அனுபவ கூட்டணி வேண்டுமல்லவா? பும்ரா-புவி கூட்டணியில் அவ்வப்போது உமேஷ் - ஷமி உள்ளே வருவது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அஸ்வின் - ஜடேஜாவும் முக்கியம். இவர்களின் அனுபவம் கண்டிப்பாகக் கைகொடுக்கும். 

இந்தப் பத்து தியரிகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்துவது அவசியம். உலகக்கோப்பைக்கு முன்பான தொடர்களை வெற்றிக்காக மட்டும் அணுகாமல், முடிந்தவரை இந்தச் சோதனைகளைச் செய்து பார்ப்பது நல்லது. கோலியின் கையில் கிட்டத்தட்ட 30 ஆட்டங்களும், 6-7 தொடர்களும் உள்ளன. இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடைபெறுவதால் அதற்கேற்றவாறு அணியை கட்டமைக்க வேண்டும். ஐசிசி-யின் தொடர்கள் என்றாலே அதில் பேட்டிங் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமே யாரை எங்கே ஆடச்சொல்வது என்பதுதான், குறிப்பாக மிடில் ஆர்டரில்... தங்களிடம் இருக்கும் வீரர்களைக் கொண்டு, கோலி என்னவெல்லாம் செய்யப்போகிறார் ? ரஹானே, ஜாதவ், மனீஷ், கார்த்திக், அஷ்வின், ஜடேஜா போன்ற வீரர்களின் ரோல்கள் என்ன?இதற்கெல்லாம் விரைவில் விடை தேடினால், உலக்கோப்பையை முத்தமிடும் மூன்றாவது இந்தியக் கேப்டன் என கோலியின் பெயரை வரலாறு பேசும்!


டிரெண்டிங் @ விகடன்