வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (27/10/2017)

கடைசி தொடர்பு:19:48 (27/10/2017)

கீழே கிடந்த பணத்தை ஆட்ட நாயகனுக்குப் பரிசளித்த சிறுவன்!

கீழே கிடந்த 100 ரூபாய் நோட்டை எடுத்தால், நாம் என்ன செய்வோம்? என்ன வேண்டுமானாலும் செய்வோம். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவனின் கையில் அப்படி 5 பவுண்டுகள் கிடைத்தது. அவன் என்ன செய்தான் தெரியுமா? தான் உயிராய் நேசிக்கும் கால்பந்து அணிக்குக் கொடுத்து, தன் அணி வரலாற்று வெற்றி பெற உதவிய வீரருக்கு அந்தப் பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டான். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் அந்தச் சிறுவனின் கடிதம் கால்பந்து ரசிகர்களை எமோஷனல் மோடுக்குக் கொண்டுசென்றுவிட்டது.

mooy

பிரீமியர் லீக் தொடரின் புதிய ஃபார்மெட் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 25 ஆண்டுகளில், முதன்முறையாக ஹட்டர்ஸ்ஃபீல்டு டவுன் ஃபுட்பால் கிளப், இந்தத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலில் ஆடிய 8 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்த அந்த அணி, சனிக்கிழமை, பலம் வாய்ந்த மான்செஸ்டர் யுனைடட் அணியை எதிர்கொண்டது. 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 20 புள்ளிகள் பெற்று கம்பீரமாக ஹட்டர்ஸ்ஃபீல்டு நகருக்கு வந்தது மொரீனியோவின் யுனைடட் கிளப். அதுவரை 8 போட்டிகளில் இரண்டே கோல்கள்தான் வாங்கியிருந்தது. அந்த அளவுக்கு டிஃபன்ஸ் ஸ்ட்ராங். அந்தப் போட்டிகளில் 21 கோல்கள் அடித்து மிரட்டியிருந்தது. அதனால் எளிதில் யுனைடட் வென்றுவிடும் என்றே 99.99 சதவிகிதம் பேர் நம்பியிருந்தனர்.

ஆனால், ஒரு ஆச்சர்யம் நடந்தது. 33 நிமிடங்களுக்குள் 2 கோல்கள் அடித்து மொத்த கால்பந்து உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஹட்டர்ஸ்ஃபீல்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஆரோன் மூய் சிறப்பாக விளையாடினார். அந்த அணியின் முதல் கோலையும் அவர்தான் அடித்தார். கடுமையாகப் போராடியும் ஒரு கோல் மட்டுமே திருப்பி அடிக்க முடிந்ததால், யுனைடட் அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. போட்டி நடந்த ஜான் ஸ்மித் மைதானம் அதிர்ந்தது. அந்த வெற்றியை ஏதோ நியூ இயர், கிறிஸ்துமஸ் போல் அந்த ஊரே கொண்டாடியது. காரணம்,  65 ஆண்டுகளில் அந்த மாபெரும் அணியை, இந்தக் கத்துக்குட்டி இப்போதுதான் வீழ்த்தியுள்ளது.

huddersfield town

இந்தப் போட்டியைத் தன் தந்தையோடு நேரில் சென்று பார்த்துள்ளான் சிறுவன் ஆடம் பானா. ஆட்டம் முடிந்து கிளம்பியபோது, கீழே கிடந்து ஒரு ஐந்து பவுண்டு நோட்டு ஒன்றை எடுத்துள்ளான். அதை ஹட்டர்ஸ்ஃபீல்ட் க்ளப் இயக்குநர் சீன் ஜோன்சுக்கு, ஒரு கடிதத்தோடு அனுப்பியிருக்கிறான். அந்தக் கடிதத்தின் வரிகள்: 

"டியர் ஜீன், மான்செஸ்டர் யுனைடட் அணிக்கெதிரான போட்டியை மைதானத்தில் இருந்து பார்த்தேன். அங்கு, 5 பவுண்டு நோட்டு ஒன்றை கீழே இருந்து எடுத்தேன். நம்முடையதாக இல்லாத பொருளை நாம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதால், அதை என் தந்தையிடம் கொடுத்துவிட்டேன். அந்தப் பணத்தை இதோ இந்தக் கடிதத்தோடு இணைத்துள்ளேன். இந்தப் போட்டியில் ஆரோன் மூய் மிகச்சிறப்பாக விளையாடினார். அதனால் அவர் இந்தப் பணத்தை வைத்துக்கொள்ளலாமா என்று பயிற்சியாளர் வேக்னர் அவர்களிடம் கேட்பீர்களா?"
இந்தக் கடிதம் பார்த்து நெகிழ்ந்துபோன சீன் ஜோன்ஸ், "Pure class from Adam" என்று அந்தக் கடிதத்தை ட்விட்டரில் பதிவிட, கால்பந்து ரசிகர்கள் அந்தச் சிறுவனைக் கொண்டாடித் தீர்த்தனர். இதைக் கேள்விப்பட்ட அணி வீரர் ஆரோன் மூய், "அந்தச் சிறுவனைப் பார்க்க விரும்புகிறேன்" என்று தன் ஆர்வத்தை ட்வீட் செய்துள்ளார். ஆடமின் தந்தை மோ கூறும் செய்தி, நம்மை இன்னும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது.

சிறுவன்

"அந்த நோட்டை ஆடம் எடுத்துவிட்டு, 'இது நம்முடையது இல்லை. அதனால் இதை நாம் கொடுத்துவிட வேண்டும்' என்று என்னிடம் கூறினான். அங்கிருந்த பலரிடமும் கேட்டோம். யாரும் தங்களுடையது இல்லை என மறுத்துவிட்டனர். அணியின் பிரஸ் ஊழியர் ஒருவர் அங்கு நின்றிருந்தார். அவர் பல அதிகாரிகளோடு பேசிக்கொண்டிருந்ததால், எங்களால் அவரிடம் பேச முடியவில்லை. அந்தச் சமயத்தில், அணிக்குக் கடிதம் எழுதுவதென்று ஆடம் முடிவெடுத்துவிட்டான். ஆனால், முதலில் அவன், அந்தப் பணத்தை கிறிஸ்டியானோ ரொனால்டோவை வாங்குவதற்காக, அணி நிர்வாகத்தின் சேமிப்புக்குத் தரவேண்டும் என்று கூறினான். பின்பு தன் முடிவை மாற்றிக்கொண்டு மூய்-க்கு கொடுக்கச் சொல்லி கடிதம் எழுதினான்" என்றார் ஆடமின் தந்தை. இந்த வாரம் நடக்கும் போட்டியின்போது ஆடமை கௌரவப்படுத்த அணி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

ஆம், டாப் கிளப்களால் கூட வாங்க முடியாத, உலகின் தலைசிறந்த வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தன் சின்னஞ்சிறு கிளப் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளான் அந்தச் சிறுவன். இந்தக் குழந்தைத்தனம் கால்பந்து ரசிகர்களுக்கே உரித்தானது. இந்த விளையாட்டு, அவர்களை கனவுக்குள் மிதக்க வைக்கும். Because, Football is a beautiful game! அந்த அற்புத விளையாட்டின் அழகான ரசிகன் ஒருவன், இன்று உலகையே நெகிழ வைத்துள்ளான். அவனுக்கு அந்த அணியும் மரியாதை செலுத்துகிறது.

இதுதான் கால்பந்தின் அழகு!


டிரெண்டிங் @ விகடன்