Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெஸ்ட் ஹாட்ரிக்... டி20 சாம்பியன் ஹீரோ... இந்தியா மறந்த ஸ்விங் பதான்! #HBDIrfan

‘பாகிஸ்தானில் கடைசியாக இந்தியா எப்போது கிரிக்கெட் ஆடியது?' என யாரிடமாவது கேட்டால், கொஞ்சம் யோசித்து இரண்டு நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருப்பார்கள். ஒன்று, சேவாக்கின் 300 ரன் குவிப்பு. இன்னொன்று, இர்ஃபான் பதான் எனும் இளம் பந்து வீச்சாளரின் டெஸ்ட் ஹாட்ரிக். 

இந்திய அணி 2003-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்றபோது முன்னணிப் பந்து வீச்சாளர் ஜாகிர்கானுக்குக் காயம் ஏற்பட்டதும் மாற்று வீரராகக் களமிறங்கியவர் இர்ஃபான் பதான். இந்தியாவின் இளம் வேகப்பந்துவீச்சாளர். முதல் தொடரின் 4-வது போட்டியில் கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாஹ், ரிக்கிபாண்டிங் என ஆஸி. பேட்டிங் சாம்ராஜ்யத்தை அடியோடு அசைத்து இந்திய அணியின் இளம் புயலானார்.

பதான்

கிரிக்கெட் ஆட பாகிஸ்தானுக்குச் சென்ற அணியில் இடம்பிடித்த இர்ஃபானுக்கு வந்த விமர்சனம் `என்ன இது... ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்களை எல்லாம் அணியில் அழைத்துச் செல்கிறீர்கள்' என்பதுதான். பாவம், அந்த விமர்சனத்தை முன்வைத்தவர்கள். 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரை பாகிஸ்தான் வாழ்நாள் முழுக்கவும் மறக்கமுடியாதபடி செய்தார் இர்ஃபான். சல்மான் மற்றும் யுனிஸ்கான் இருவரும் அடுத்தடுத்த பந்தில் வெளியேற, அனுபவ வீரர் முகமது யூசுப் களமிறங்குகிறார். `ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்' என விமர்சனம் செய்யப்பட்ட பதானின் கையில் பந்து. அனுபவம் வாய்ந்த யூசுப்... கண் இமைக்கும் நொடியில் ஸ்டெம்புகள் சிதறி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இர்ஃபான் பதான் மறக்க முடியாத இந்தியன் ஆல்ரவுண்டர். `இர்ஃபான்' என்ற பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருவது, தாவிக் குதித்து தன் கையிலிருந்து பந்துகளை ஸ்டெம்புக்கு நேராக ரீலிஸ் செய்யும் அந்த ஸ்டெயில்தான். ஜாகீர்கானுக்குப் பிறகு பெளலிங் ஸ்டெயிலுக்காக அதிகம் விரும்பப்பட்டவர்  இர்ஃபான் பதான். இவ்வளவு ஸ்டெயிலாக பந்து வீசும் இர்ஃபான், ஆரம்பக் காலத்தில் வீசிய பந்துகள் எதுவும் பேட்ஸ்மென் நிற்கும் கீரிஸ் வரைகூட செல்லாதாம். தினமும் ஆறு மணி நேரம் கடும் வெயிலில் பயிற்சி பெற்று, தன் பெளலிங்கைச் சரிசெய்தாராம் இர்ஃபான்.

27 அக்டோபர், 1984 அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் வறுமைமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் இர்ஃபான். அதிரடி மன்னன் யூசுப் பதான், இவரின் உடன்பிறந்த மூத்த சகோதரர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இருவரையும் `இஸ்லாமிக் ஸ்காலர்' ஆக்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவாக இருந்தது. ஆனால், பதான் பிரதர்ஸின் கனவு, கிரிக்கெட்டை நோக்கியே இருந்தது. பயிற்சியாளர் எவருமின்றி இருவருமே தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டனர்.

பதான்

`ஒருநாள் போட்டியில் (59) 100 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இந்திய வீரர்' என்ற பெருமையும் இர்ஃபானையே சேரும். 2009-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக நடந்த பரபரப்பான டி20 போட்டியில் இர்ஃபான் (33), யூசுப் (22) இருவரும் அடித்து விளாசி வெற்றி பெறச் செய்ததை, எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியாது! 

2007-ம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. கம்பீர், 75 ரன் அடித்தார். ஶ்ரீசாந்த் கடைசி கேட்சைப் பிடித்து அசத்தினார். உண்மையான நாயகனான இர்ஃபான்தான், கேப்டன் மாலிக்கை எட்டு ரன்னில் வெளியேற்றினார். அதிரடி மன்னன் அஃப்ரிடியை டக் அவுட்டாக்கியவர், கடைசியில் யாசிர் அராஃபத் விக்கெட்டை வீழ்த்தி ட்விஸ்ட் தந்தார். 16 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்தியா கோப்பை வெல்ல முக்கியப் பங்கு வகித்த இர்ஃபான்,  ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

பதான்

பெளலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சில போட்டிகளில் முன்வரிசையில் இறங்கி அடித்து ஆடி கெத்தும் காட்டினார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரண்டருக்குச் சரியான ஆள் எனப் பெயர் எடுத்த இர்ஃபான், 2012-ம் ஆண்டுக்குப் பிறகு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறிவருகிறார். பாகிஸ்தானைச் சொந்த மண்ணில் மிரட்டிய இர்ஃபானை என்றுமே மறக்க முடியாது. ஐ.பி.எல்-களில் தலையைக் காட்டினாலும் இன்னமும் நீல நிற ஜெர்ஸியில் ஒரு ஸ்விங் பந்தில் ஸ்டெம்புகள் சிதற பேட்ஸ்மேன் நடையைக் கட்டுவதை எதிர்பார்க்கிறோம் இர்ஃபான்.

ஹேப்பி பர்த்டே இர்ஃபான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement