“ப்ரஷரா...அப்டினா?” - ஹாட்ரிக் டைட்டிலுக்கு பர்தீப் ரெடி #ProKabaddi #LePanga

பர்தீப் நர்வால் - பாட்னா பைரேட்ஸ் அணியின் அடையாளம் என்பது போய், இன்று ப்ரோ கபடிக்கே இவர்தான் அடையாளம். ஒரே ரெய்டில் 8 பாயின்ட், ஒரே போட்டியில் 34 பாயின்ட், ஒரு தொடரில் 300-க்கும் மேற்பட்ட புள்ளிகள் என்று சாதனை மேல் சாதனைகளைக் குவித்துக்கொண்டிருக்கிறார். டைம் பாஸுக்காகக் கபடி பார்க்கத் தொடங்கியவர்களும் இன்று பர்தீப் ரசிகர்களாகிவிட்டனர். அந்தளவுக்கு நேர்த்தியாக இருக்கிறது அவரது ஆட்டம்.

பர்தீப் நர்வால்

20 வயதுதான். ஆனால், அவ்வளவு திறமை. கேப்டன் வேறு. டூ ஆர் டை ரெய்டு என்றாலும் சரி, பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளும் பிரஸ் மீட் என்றாலும் சரி, பர்தீப் முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை. எந்தப் பிரஷரும் இல்லாமல் அணியை அசால்டாக ஃபைனலுக்கு அழைத்துவந்துள்ளார் பர்தீப். சில சமயங்களில் தனி ஆளாக... பெரும்பாலான போட்டிகளில், பாட்னா அணியின் புள்ளிகளில், 50 சதவிகிதம் இவர் எடுத்ததே. இதுவரை இவர் விளையாடிய 4 ப்ரோ கபடி சீசன்களிலும் ஃபைனலில் விளையாடியிருக்கிறார். 

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஃபைனல், பர்தீப்புக்கு நான்காவது பைனல். எந்தச் சலனமுமின்றி பிரஸ் மீட் முடித்துவிட்டு காரில் ஏறி ஹோட்டலுக்குச் செல்லத் தயாரானார் பர்தீப். அந்தப் பரபரப்பில் சில ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி எடுக்க முயல, நாம் பேட்டிக்குத் துண்டு போட்டோம். 

களத்தில் அவ்வளவு ஆக்ரோஷம் காட்டும் பர்தீப் கொஞ்சமும் கர்வமில்லாமல் பேசினார். ஆட்டத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும், குணத்தில் இன்னும் அந்த டீனேஜர்தான். பதில்கள், அவரது ரெய்டுகள் போல் அதிரடியாய் இல்லாமல், மெதுவாக வந்தது.

கபடிமீது எப்போது காதல் வந்தது?

எங்கள் மாநிலத்தில் கபடிதான் பிரசித்திபெற்ற விளையாட்டு. ஹரியானாவில் உள்ள என் சொந்த ஊர் சோனிபேட்டில் கபடியை நேசிப்பவர்கள் மிகவும் அதிகம். வீட்டுக்கு வீடு ஒரு கபடி வீரர் இருப்பார்கள். என் மாமாவும் நேஷனல் கபடி பிளேயர். அவரைப் பார்த்து, எனக்கும் கபடி மீது ஈர்ப்பு வந்தது. 7 வயதிலிருந்து கபடி விளையாடிக்கொண்டிருக்கிறேன். என் மாமாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

பர்தீப்

டுப்கி எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

ஹரியானாவில் அங்ரேஸ் என்றொரு கபடி வீரர் இருந்தார். அவர் டுப்கியில் (டிஃபண்டர்கள் பிடிக்க வரும்போது குனிந்து உடம்பை வளைத்துத் தப்பிப்பது) ஸ்பெஷலிஸ்ட் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், நான் அவரைப் பார்த்ததில்லை. அவர் எப்படி டுப்கி செய்வார் என்பதை எங்கள் ஊரார் சொல்வதைக் கேட்டு, நானாகவே அதைப்போல் செய்து பழகினேன். பழகப்பழக, அதன் வித்தைகளை நன்றாகக் கற்றுக்கொண்டேன். இப்பொழுது அது நன்றாக பிரபலமடைந்துள்ளது. அதை இன்னும் மெருகேற்றுவதில் தீவிரமாக இருக்கிறேன்.

மஞ்சித் முதல் சேரலாதன் வரை பல கேப்டன்களின் தலைமையில் விளையாடியுள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படி?

நான் பல கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளேன். அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுள்ளேன். என் ஆட்டத்தை மேம்படுத்த பல வகைகளில் உதவியுள்ளனர். எப்படி ரெய்டு போக வேண்டும், ரெய்டில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், டுப்கியை எப்படித் துல்லியமாகப் பயன்படுத்துவது, எப்படித் துரிதமாக புள்ளிகள் சேர்ப்பது, எப்படி முக்கிய டிஃபண்டர்களைச் சமாளிப்பது, களத்தில் இறங்கியதும் எந்த வீரரைக் குறிவைத்து புள்ளிகள் எடுப்பது போன்ற பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளனர். 

நீங்கள்தான் இப்போது ப்ரோ கபடியின் ஐகான். இந்த இளம் வயதில் எப்படி இவ்வளவு பிரஷரை சமாளிக்கிறீர்கள்?

பிரஷரா... இல்லவே இல்லை. எனக்கு எப்பொழுதும் பிரஷர் என்பது இருந்ததே இல்லை. களத்தில் இறங்கியபின், ‘எப்படி பாயின்ட் எடுக்கலாம்?’, ’எப்படி மேட்சை ஜெயிக்கலாம்?’ என்று மட்டுமே யோசிப்பேன். அதைத் தவிர என் மனதில் எந்தச் சிந்தனையும் இருக்காது. அதனால் இதுவரை நான் பிரஷர் என்பதை ஃபீல் செய்ததே இல்லை.

pardeep

குஜராத் அணியுடனான ஃபைனலை வெல்ல, என்ன ஸ்பெஷல் பிளான்?

எந்த ஸ்பெஷல் பிளானும் இல்லை. 4 சீசன்களில், 4-வது ஃபைனல் இது. வழக்கமான ஆட்டம்தான். இந்தப் போட்டிக்கென்று எந்தத் திட்டமும் இல்லை. என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடினாலே போதும்.

ப்ரோ கபடி முடிந்ததும் என்ன செய்யப் போகிறீர்கள்?

இந்த சீசன் முடிந்த பிறகு என் பயிற்சியாளர் நரேஷோடு மீண்டும் பயிற்சியைத் தொடர்வேன். சிறுவயதில், என் மாமாவிடமிருந்து சில விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அதன்பிறகு நரேஷ் சாரோடு சேர்ந்துதான் கபடியின் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்துகொண்டேன். எனது முன்னேற்றத்தில் அவரது பங்களிப்பு அதிகம்.

ஒரு மிகப்பெரிய தொடரில் விளையாடுகிறோம் என்ற பிரஷர் கொஞ்சமும் இல்லை. மிகவும் கூல். ஏற்கெனவே 3 ஃபைனல்களைப் பார்த்துவிட்டதால் ரிலாக்ஸாக இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த இரண்டு ப்ரோ கபடி சீசன்களிலும் பாட்னா பைரேட்ஸ்தான் சாம்பியன். இப்போது குஜராத்தை வீழ்த்தினால், இது அவர்களுக்கு ஹாட்ரிக் பட்டம். பர்தீப்புக்கும் இது ஹாட்ரிக். இந்தச் சாதனையைப் படைப்பதற்காகக் காத்திருக்கிறார் இந்த யங் ஸ்டார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!