வெளியிடப்பட்ட நேரம்: 23:11 (28/10/2017)

கடைசி தொடர்பு:23:27 (28/10/2017)

ப்ரோ கபடி : பர்தீப் நர்வால் உதவியுடன் தொடர்து மூன்றாவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது பாட்னா!

ப்ரோ கபடி தொடரின் 5 -வது சீசனில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்று பாட்னா அணி கலக்கல்.

ப்ரோ கபடி இந்தியாவில் நடக்கும் பிரபலமான கபடி தொடர். இதன் ஐந்தாவது சீசன் தொடர் கடந்த மூன்று மாதத்துக்கு முன்னர் தொடங்கியது. இந்த முறை புதிதாக சேர்க்கபட்ட அணிகளுடன் தொடர் தொடங்கியது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் இன்று சென்னை மைதானத்தில் வைத்து நடைபெற்றது. 

இறுதி ஆட்டத்தில் குஜராத் மற்றும் பாட்னா அணிகள் மோதின. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிக போட்டிகளில் வென்று அசைக்க முடியாத அணியாக விளங்கியது. பாட்னா அணியின் இளம் கேப்டன், பர்தீப் நர்வாலின் அபார ஆட்டத்தினால் பாட்னா அணி தொடர்ந்து முன்னேறியது. முந்தைய சுற்றில் ஒரே ரெய்டில் 8 புள்ளிகள் எடுத்து சாதனை படைத்தார் பர்தீப் நர்வால். இந்த சீசனில் மட்டும் 300 க்கும் அதிகமான புள்ளிகள் எடுத்து உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். இந்த இரு அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டத்தை பலரும் எதிர்பார்த்தனர்.

சென்னையில் பர்தீப் நர்வால் -க்கு ஆதரவு சற்று அதிகமாகவே காணப்பட்டது. போட்டி துவங்கியதும் குஜராத் அணியின் கை தான் முதலில் ஓங்கியது. துவக்கம் முதல் அதிரடியாக விளையாடிய அந்த அணி, 15-8 என முன்னிலை பெற்றது. அதன் பின்னர் பர்தீப் நர்வாலின் அசத்தல் ரெய்டு மூலம் 5 புள்ளிகள் பாட்னா அணிக்கு கிடைத்தது. இதனால் புள்ளிகள் சம நிலைக்கு வந்தது. 

இரு அணிகளும் புள்ளிகளுக்காக கடுமையாக முயற்ச்சித்ததால் முதல் பாதியில் சரியான போட்டி நிலவியது. முதல் பாதியின் முடிவில் பாட்னா அணி 21- 18 என முன்னிலையில் இருந்தது. கோப்பையாருக்கு என்பதை முடிவு செய்யும் இரண்டாம் பாதி துவங்கியது. 

இதில் பாட்னா அணி சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியது. இந்த முறை டேக்கில் புள்ளிகளையும் அதிகம் எடுத்தது. இதனால் பாட்னா அணி சிறப்பான முன்னிலையுடன் கோப்பையை நெருங்கியது. இரண்டாம் பாதியில் பர்தீப் நர்வால் மீண்டும் ஒரு முறை ஒரே ரெய்டில் 5 புள்ளிகள் எடுக்க பாட்னா அணி நல்ல முன்னிலையுடன் விளையாடியது. இறுதியில் பாட்னா அணி 55-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது. 

இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்தது பாட்னா அணி. பர்தீப் நர்வால் இந்த போட்டியில் மட்டும் 19 புள்ளிகள் எடுத்தார்.