கான்பூரில் கலக்கிய ரோகித் ஷர்மா, விராட் கோலி: இந்திய அணி 337 ரன்கள் குவிப்பு!

நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. 

Photo Credit: ICC


கான்பூரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், ஃபீல்டிங் தேர்வுசெய்தார். இதையடுத்து, தவான், ரோகித் ஷர்மா இணை இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கியது. அணியின் ஸ்கோர் 29 ரன்களாக இருந்தபோது 14 ரன்கள் எடுத்திருந்த தவான், ஆட்டமிழந்தார். தவானுக்குப் பின்னர் ரோகித் ஷர்மாவுடன் கைகோத்த கேப்டன் விராட் கோலி, நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எளிதில் சமாளித்து ரன்கள் குவித்தார். ஹிட் மேன் ரோகித் ஷர்மா, தனது ஃபேவரைட் ஷாட்டுகளைப் பறக்கவிட, மறுபுறம் தனது வழக்கமான ஸ்டைலில் பந்துகளைச் சிதறடித்துக்கொண்டிருந்தார் விராட் கோலி. நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது. 

ரோகித் ஷர்மா 138 பந்துகளில் 147 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமான 9,000 ரன்களைக் கடந்த கோலியும் சதமடித்து ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் 32-வது சதத்தைப் பதிவுசெய்த அவர், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய தோனி, 25 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து தரப்பில், டிம் சவுத்தி மற்றும் மைக்கேல் சாட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!