விராட் கோலியை வாழ்த்த மைதானத்துக்குள் புகுந்த ரசிகர்!

விராட் கோலியை வாழ்த்துவதற்காக மைதானத்துக்குள் புகுந்த ரசிகரை, போலீஸார் கைதுசெய்தனர். 


இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி ரோகித் ஷர்மா மற்றும் கேப்டன் விராட் கோலியின் சதங்களின் உதவியால், 337 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 147 ரன்களும் விராட் கோலி 113 ரன்களும் எடுத்தனர். 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 32-வது சதத்தைப் பதிவுசெய்த விராட் கோலியை வாழ்த்துவதற்காக ரசிகர் ஒருவர், பாதுகாப்புகளை மீறி மைதானத்துக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மைக்கேல் சாட்னர் வீசிய 44-வது ஓவரில், ஒரு ரன் எடுத்து சதமடித்த விராட் கோலியை நோக்கி ஓடிய அந்த ரசிகரை லெக் அம்பயர் தடுத்து நிறுத்தினார். விராட் கோலி பெயருடன்கூடிய ஜெர்ஸியை அணிந்தபடி மைதானத்துக்குள் சென்ற அந்த ரசிகரால் போட்டி சிறிதுநேரம் தடைபட்டது. இதையடுத்து, மைதானக் காவலர்கள் அவரை வெளியில் அழைத்துச்சென்றனர். பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் சென்ற அந்த ரசிகரை, போலீஸார் கைதுசெய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!