வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (29/10/2017)

கடைசி தொடர்பு:10:07 (30/10/2017)

வங்கதேசத்தைப் புரட்டி எடுத்த டேவிட் மில்லர்: 35 பந்துகளில் சதமடித்து சாதனை!

வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், 35 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்தார். 

Photo Credit:ICC


தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி, பாட்செஃப்ஸ்ட்ரோம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென்றதால், தொடரை சமன் செய்ய, இன்றைய போட்டியில் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் வங்கதேச அணி களமிறங்கியது. டாஸ் வென்று பீஃல்டிங் தேர்வுசெய்த வங்கதேச அணிக்கு, டேவிட் மில்லர் ரூபத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய வங்கதேச அணி, தென்னாப்பிரிக்க அணியின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தியது. 9.5 ஓவர்களின் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களே தென்னாப்பிரிக்க அணி குவித்திருந்தது. கேப்டன் டுமினி 4 ரன்களிலும்  டிவிலியர்ஸ் 20 ரன்களிலும் நடையைக் கட்டினர். 

அந்த நிலையில் களமிறங்கிய டேவிட் மில்லர், வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தார். ஒருபுறம் அம்லா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய மில்லர், 35 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 45 பந்துகளில் சதமடித்திருந்த ரிச்சர்ட் லீவேவின் சாதனையை அவர் முறியடித்தார். இதில், 9 இமாலய சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். அம்லா 51 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.