வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (30/10/2017)

கடைசி தொடர்பு:14:11 (30/10/2017)

இந்தியாவை சாம்பியன் ஆக்கிய அந்த 5 தருணங்கள்! #INDvNZ

கான்பூர், க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி 2-1 என தொடரை வென்றது இந்தியா (INDvNZ).  டாஸ் வென்ற நியூசிலாந்து இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏதுவாக இருந்த காரணத்தினால், தொடக்கம் முதலே பதற்றமின்றி ரோஹித் - தவான் இருவரும் தங்கள் 'சிக்னேச்சர்' ஷாட்டுகளை ஆடத்துவங்கினர். தவான் சீக்கிரம் வெளியேற, கோலியுடன் கூட்டணி அமைத்தார் ரோஹித். அவ்வப்போது இருவரும் அடுத்தவரை ரன் அவுட் ஆக்குவதைப்போல குறுக்கும் நெருக்கும் ஓடினாலும், நல்ல அடித்தளம் போட்டனர். குறிப்பாக ரோஹித், போல்டிடம் தனது விக்கெட்டை பறிகொடுக்காமல், பொறுமையாக ஆடியது நல்ல முன்னேற்றம். முகமது ஆமிர் முதல், இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் ரோஹித் தடுமாறியது நினைவிருக்கலாம். டிம் சௌத்தீ, போல்ட் இருவரும் அவர்களின் முதல் ஸ்பெல்லை முடித்தவுடன், ஆடம் மில்னே, கிராந்தோம் போன்றவர்கள் விக்கெட்டைக் குறிவைக்காமல், ரன்னைக் கட்டுப்படுத்த நினைக்க அது கோலி & ரோஹித்துக்கு சாதகமாக முடிந்தது. 

INDvNZ

ரோஹித் இஸ் பேக்

எப்போதெல்லாம் ரோஹித் அவருடைய 'புல்/ஹூக்' ஷாட்டுகளை ஆட்டத்தின் தொடக்கத்தில் பிசிறில்லாமல் அடிக்கிறாரோ அப்போதே அவர் 'தெறி' ஃபார்மில் இருக்கிறார் என உணர்ந்துவிடலாம். சென்ற ஆண்டு இதே நாள் (அக் 29) இதே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 70 ரன்கள் அடித்து வெளியேறியபோது, காயம் காரணமாக 6 மாதங்கள் இந்திய அணிக்கு விளையாட முடியாமல் போனது. மீண்டும் அதே அணிக்கு எதிராக, வென்றே தீரவேண்டுமென்கிற கட்டாயத்தில், ரோஹித் மீண்டும் தன்னை நிரூபித்து வெற்றிக்கு உதவியிருக்கிறார். முதல் இரண்டு போட்டிகளிலும், பௌன்சர் மற்றும் இன் ஸ்விங்கில் விழுந்த ரோஹித், இந்த முறை சுதாரித்துக்கொண்டது கண்கூடாக தெரிந்தது. பந்தின் 'லெந்த்தை' முன்னமே கணித்து ஆடினார். மேலும், ஸ்விங் எதுவும் ஆகாமல் இருப்பதைத் தடுக்க, ஏறி வந்து, பந்தின் லெந்த்தை தன்னுடைய வசதிக்கு ஏற்ப மாற்றி அடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், பந்தின் ஷைன் குறையவும், ரோஹித்தின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. 80 ரன்கள் எடுத்திருந்தபோது, சான்ட்னர் வீசிய பந்தில் அடித்த சிக்ஸர் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் அடித்த 150-வது சிக்ஸர். ஆட்டத்தின் 33-வது ஓவரில் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 15-வது சதத்தை எட்ட, கண்டிப்பாக இன்னொரு 200 இருக்கு என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 42-வது ஓவரில் 147 ரன்களில் வெளியேறினார். இதில், போல்டின் ஒரே ஓவரில் நான்கு பௌண்டரிகளை நாலாப்பக்கமும் அடித்தது தனிச்சிறப்பு.

கோலி

தொடரும் விராட் தாண்டவம்

இந்தத் தொடரின் முதல் போட்டியில் 31-வது சதத்தை அடித்த சாதனை நாயகன், 'சேஸிங்கில்' மட்டுமல்ல, முதலில் ஆடினாலும் நான் ஹீரோதான் என்பதை நிரூபிப்பதைப்போல, வந்த நொடியிலிருந்து பட்டையைக் கிளப்பினார்.  டிம் சௌத்தியின் பந்தை, ஆஃப் ஸ்டம்புக்கு அருகில் நடந்து சென்று, மிட் விக்கெட் திசையில் அடித்த ஃபிளிக் ஷாட்டே தெரிவித்துவிட்டது, கோலி இன்னொரு பெரிய இலக்கை நோக்கி பயணிக்கிறார் என்று. சிறுகச் சிறுக ஒரு பக்கம் ரோஹித்துக்கு பக்கபலமாக இருந்துகொண்டே 59 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். அதன் பின்பு, அடுத்த 36 பந்துகளில் இன்னொரு ஐம்பதை எட்டி, தனக்கும் தன் குரு சச்சினுக்குமான இடைவெளியை 17- ஆகக் குறைத்தார். அத்துடன், ஒருநாள் ஆட்டங்களில் அதி விரைவாக (194 இன்னிங்ஸில்) 9000 ரன்களைக் கடந்த சாதனையையும் தனதாக்கிக் கொண்டார். 32-வது சதத்தை எட்டிய கையோடு, தோனி, ஜாதவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார். இதுவரை அடித்த 32 சதங்களில்,13 சதங்களை நூறுக்கும் மேலான ஸ்டிரைக் ரேட் கொண்டு அடைந்திருக்கிறார். ரோஹித், கோலி இருவரில் யாரேனும் இறுதிவரை நின்றிருந்தால் 337 என்பது நிச்சயம் 360ஐ கடந்திருக்கும். ஆடுகளமும். மைதானத்தின் பௌண்டரிகளும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்க, நியூசிலாந்து நம்பிக்கையோடே பெவிலியனுக்கு நடை போட்டது. 

நொறுக்கிய நியூசிலாந்து

ஒரு பெரிய இலக்கை அடையவேண்டுமென்றால், அதற்கு எதிரணியின் முக்கியமான பௌலரை எவ்வித பயமுமின்றி அடித்து ஆட வேண்டும். இந்தத் தொடரில், இந்தியாவுக்கு பௌலிங்கில் தலைமை தாங்கி வழிநடத்திய புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரிலேயே 18 ரன்களை, காலின் முன்ரோ அடிக்க, ஆட்டம் சூடுபிடித்தது. மறுபக்கம் குப்திலை தினேஷ் கார்த்திக் அட்டகாசமாக கேட்ச் பிடித்து வெளியேற்ற, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான, கேன் வில்லியம்சன் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு ஆட்டங்களில் சோபிக்காத வில்லியம்சன், தன்னுடைய ஐபிஎல் அனுபவங்களைக் கொண்டு, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை சமாளித்து முன்ரோவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். சாஹலின் 'ட்ரிஃப்ட்டில்' அவுட் ஆவதற்கு முன்பு, 3 சிக்ஸர், 7 பௌண்டரிகள் உட்பட 75 ரன்களைக் குவித்து தரமான அடித்தளம் அமைத்துவிட்டார், முன்ரோ. முதல் போட்டியில், கலக்கிய ராஸ் டெய்லர், கேப்டனுடன் செட்டில் ஆவதற்குள்ளளாகவே, சாஹல் 'கூக்ளி' மூலம் வில்லியம்சனின் விக்கெட்டையும் வீழ்த்த, மீண்டு வர இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. 

லாதம்

அசரடித்த டாம் லேதம்

நியூசிலாந்தின் விக்கெட் கீப்பர்களுக்கென ஒரு தனிச்சிறப்பு இருக்கும் போல. ஆடம் பரோர் காலம் தொட்டு, ப்ரெண்டன் மெக்கல்லம் வரை அடுத்தடுத்த பரிமாணங்களை அடைந்தே வருகிறது. அவ்வழியில், டாம் லேதம், வேறொரு பரிமாணத்தை கொடுத்துவிட்டார் என்பதை தாராளமாக சொல்லலாம். முதல் போட்டியில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். நேற்றும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிய, எவ்வித சிரமமுன்றி ரன் குவித்தார். தொடக்கம் முதலே, ஃபீல்டர்கள் எங்கு இருக்கிறார்கள் என நன்கு உணர்ந்து, அதற்கேற்றவாறு ஷாட்டுகளை ஆடினார். சூழல் பந்துவீச்சை அநாயசமாக ஸ்வீப் செய்தும், கண்ணிமைக்கும் நேரத்தில் தன் பங்கிற்கு 50 ரன்களைக் கடந்தார். கடைசி 5 ஓவர்களில் 50 ரன்களுக்கும் குறைவான ரன்கள் மட்டுமே தேவை என, கால்குலேட் செய்து பக்காவாக சேஸ் செய்துகொண்டிருந்தார்.

மிரட்டல் பும்ரா

46-வது ஓவரில் பும்ராவின் பௌலிங்கையும் ஒரு கை பார்த்தார். எப்படியும் ஸ்டம்ப்பை நோக்கித்தான் வரும் என ரிஸ்க் எடுத்து, அந்த ஓவரின் கடைசிப் பந்தை விக்கெட் கீப்பரின் தலைக்குப் பின்னால் அடித்தபோது, நியூசிலாந்து வெற்றிக்கு மிக அருகில் சென்றுவிட்டது. அடுத்த ஓவரை புவனேஷ் வீச, அதற்கு முன்னமே, 8 ஓவர்களில் 80 ரன்கள் கொடுத்தவர் என்ன செய்யப்போகிறார் என்று நகத்தை கடித்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். ஆனால், ஸ்பெஷலாக ஒரு யார்க்கர் போட்டு புவி ஸ்டம்பை பறக்க விட, மீண்டும் ஆட்டம் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் ஊசலாடத் தொடங்கியது.  பும்ரா ஒருகட்டத்தில் டாட் பால்களால் பிரஷரைக் கூட்ட, க்ராந்தோமுடனான குழப்பத்தில் பும்ராவின் டைரக்ட் ஹிட்டால் ரன் அவுட் ஆனார் லேதம். 

இந்த வருடத்தின் ஆரம்பத்தில், இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா இதேபோன்ற ஒரு நிலையிலிருந்து வெற்றியைப் பெற்றது. அப்போதும், பும்ராவின் யார்க்கரை, தோனி லாவகமாகப் பிடித்து, மீண்டும் பும்ராவிடம் கொடுக்க, பும்ரா பௌலிங்கில் ஸ்டம்ப்பை உடைப்பதுப்போல, தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் ஸ்டம்ப்புகளை பறக்கவிட்டதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

INDvNZ

தீர்க்கவேண்டிய பிரச்னைகள்

என்னதான் தொடர்ந்து ஏழு ஒரு நாள் தொடர்களை கோலியின் தலைமையில் வென்றிருந்தாலும், இந்தியாவின் பிரதான பிரச்னைகளான மிடில் ஆர்டர் மற்றும் ஐந்தாவது பௌலர் பிரச்னை தீர்ந்ததாகத் தெரியவில்லை. குல்தீப் யாதவிடம் பன்முகத்தன்மை இல்லையென அக்ஸர் படேலுக்கு நிர்வாகம் டிக் அடிக்க, அக்ஸர் தன்னுடைய கோட்டாவை முடிக்க முடியாமல் தவித்தது ஏமாற்றமே. கேதார் ஜாதவைக் கொண்டு என்ன செய்ய முனைகிறார்கள் என்று அவரிடம் சொல்லிவிடுவது நல்லது. அணியின் ஆல் ரவுண்டர் என ஹார்திக் இருக்கும்போது, கேதார் தொடர்ந்து பந்துவீச்சில் ஈடுபடுவது, ஹார்திக்கின் நம்பிக்கையை குலைக்கச் செய்யலாம். 300 ஆட்டங்களுக்கு மேல் ஆடிவிட்டு தோனிக்கு இன்னமும் ஒரு நிலையான பேட்டிங் ஆர்டரை ஏற்படுத்தாமல் இருப்பது, அணியின் ஒட்டுமொத்த ஃபீல்டிங்கை எடை போட்டால், நிச்சயம் நான்கு வீரர்களைத் தாண்டி, உலகத்தரமான ஃபீல்டர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாமல் போவது போன்ற பிரச்னைகளை எவ்வளவு சீக்கிரம் களைகிறதோ அவ்வளவு நல்லது.

உள்ளூரில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இதுபோன்ற வெற்றிகளைத் தொடர வேண்டுமானால், எந்நேரமும், எந்த சூழ்நிலையிலும் 16-17 வீரர்கள் எதற்கும் தயாராக இருத்தல் வேண்டும். கோலி எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவாலே இதுதான். வெற்றிகள் தொடர வாழ்த்துகள், கோலி!


டிரெண்டிங் @ விகடன்