வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (30/10/2017)

கடைசி தொடர்பு:18:17 (30/10/2017)

’ரன் எந்திரன்’... விராட் கோலி எப்படி இப்படிச் சாதிக்கிறார்?!

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா ஆறு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்குத் தெரியும், விராட் கோலியின் இன்னிங்ஸ், ரோஹித் சதம் அடிக்க எவ்வளவு உதவியது என்று. இது மட்டுமன்றி சதம் அடித்த கோலி, ஒரே போட்டியில் பாண்டிங், கங்குலி, சச்சின் சாதனைகளைக் காலி செய்தார். கோலி விளையாடினால், குறைந்தது ஒரு சாதனையாவது முறியடிக்கப்படும் எனும் அளவுக்கு நீள்கிறது அவரது சாதனைப் பட்டியல்.

கோலி

கடைசிப் போட்டியில் கோலி உடைத்த சாதனைகளின் பட்டியல் இதோ...

ஓர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த கேப்டன்.

2017-ம் ஆண்டு மட்டும் 1,460 ரன் குவித்துள்ளார். இதற்கு முன் ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங், 2007-ம் ஆண்டு 1,424 ரன்கள் குவித்ததே அதிகமாக இருந்தது.

அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்த வீரர். உலக அளவில் டி வில்லியர்ஸையும் இந்திய அளவில் கங்குலியையும் வீழ்த்தி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். 

2017-ம் ஆண்டு எல்லா சர்வதேசப் போட்டிகளையும் சேர்த்து 40 போட்டிகளில் ஆடி, முதல் வீரராக 2,000 ரன்னைக் குவித்துள்ளார். 

ஒரு வருடத்தில் அதிக சதம் (6) அடித்த கேப்டன்கள் வரிசையில்  கங்குலி (2000), பாண்டிங் (2003, 2007), கிரீம் ஸ்மித் (2005), டி வில்லியர்ஸ் (2015)​ ​ ஆகியோரை முந்தியுள்ளார் கோலி. 

 இரு நாடுகளுக்கிடையேயான ஒருநாள் தொடரை (Bilateral Series) தொடர்ந்து ஏழு முறை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

இவ்வளவு சாதனைகளையும் ஒரே போட்டியில் அடித்து நொறுக்கும் விராட்டின் சாதனைகளுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்கள் ஏராளம்.

மிஸ்டர் ஃபிட்னெஸ்:

கோலியை, `உலக கிரிக்கெட்டின் மிஸ்டர் ஃபிட்னெஸ்' என்று அழைக்கலாம். தனது ஃபிட்னெஸை அவர் சிறப்பாக வைத்திருப்பதுதான் அவரது பலம். அதனால்தான் அவர் அடிக்கும் அரை சதங்களை எளிதாக சதங்களாக மாற்ற முடிகிறது. மூன்றாவது வீரராகக் களமிறங்கி கிட்டத்தட்ட 45 ஓவர் வரை அவரால் பேட்டிங் செய்ய முடிகிறது. ஓய்வே இல்லாமல் இந்திய அணியில் ஆடிவரும் ஒரே வீரர் கோலிதான். 2015-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை அதிரடி ஆட்டம் ஆடிவருகிறார். இந்தக் காலத்தில் அணியோடு 1.1 லட்சம் கி.மீ பயணித்துள்ளார். காயம் காரணமாக அவர் எடுத்துக்கொண்ட ஓய்வு, ஒரே ஒரு டெஸ்ட் போட்டிதான். அவரது ஃபிட்னெஸ்தான் அவரது சாதனைகளுக்கான முதல் காரணம்.

கோலி

சிறந்த அணி:

கோலி தற்போது வழிநடத்தும் அணி ஒரு சிறந்த அணி. இதில் இளம் வீரர்கள் ஏராளம். அதனால் வீரர்களைக் கையாள்வதில் கேப்டனுக்குப்  பெரிய சிரமம் இருந்ததில்லை. தவான், ரோஹித் தொடக்கம், டெப்த் ஓவர்களில் பும்ரா, புவி, டெஸ்ட் போட்டிகளில் உமேஷ், ஷமி, ஸ்பின்னர்கள் எனக் கூறினால் சரியாக இருக்காது `ஸ்பின் படை' என விராட்டுக்கு எல்லாமே பக்காவாக செட்டாகி இருக்கிறது. உலகின் டாப்-2 பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா மட்டுமல்லாது குல்தீப், சாஹல், அக்‌ஷர், ஜாதவ், ஜெயந்த யாதவ் என ஸ்பின் ஆப்ஷன்கள் ஏராளம். ராகுல், ரஹானே, தோனி, மணிஷ்  பாண்டே, தினேஷ் கார்த்திக், பாண்ட்யா,  ஜாதவ், ஜடேஜா என மிடில் ஆர்டரில் ஒரு பட்டாளமே இருக்கிறது. இதில் யாரைத் தேர்வு செய்வது, யாரை நிரந்தரமாக ஒரே இடத்தில் களமிறக்குவது என்பதில் குழப்பம் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இவ்வளவு ஆப்ஷன்கள் இருப்பது ஒருவகையில் கோலிக்குப் பிளஸ். இப்படியான ஆப்ஷன்தான் கேப்டனின் சுமையைக் குறைக்கிறது. கங்குலி சிறந்த அணியை உருவாக்கும் செயலில் ஈடுபட்டார். தோனி இளம் மற்றும் அனுபவ வீரர்களை பேலன்ஸ் செய்தார். ஆனால், கோலிக்குக் கிடைத்திருக்கும் அணி ஒரு கஸ்டமைஸ்டு அணி. இந்த அணிதான் கோலியை அவரது ஃபார்ம் குறையாமல் ஆடவைக்கிறது.

விராட்

செயல் தலைவர் விராட் கோலி:

ஒரு கேப்டனாக கோலி சிறப்பாகச் செயல்படுகிறார் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்  நெருக்கடியான நேரங்களில் ஸ்மார்ட்டாக முடிவெடுக்கவேண்டியது அவசியம். அதில் சற்று தடுமாறும் கோலிக்கு பக்க பலம் தோனிதான். இதை கோலியே பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமையாகக் கூறியுள்ளார். பந்துவீசும்போது ரிவ்யூ கேட்பது, ஃபீல்டிங் செட் செய்வது, பந்துவீச்சாளர்களுக்கு பேட்ஸ்மேனின் நகர்வைச் சரியாகத் தெரிவிப்பது என தோனி கேப்டனாகவே தொடர்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தோனியை `நிரந்தர கேப்டன்' என வர்ணிக்கும் கோலி, செயல் தலைவராகவே அணியில் இருக்கிறார். கோலி உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமெனில், அதற்கு துருப்புச்சீட்டு தோனிதான் என்பதை அவர் கட்டாயம் அறிவார்.

`கடைசிப் போட்டியில் இந்தியா வெல்ல கோலி, ரோஹித், பும்ரா காரணம்' எனக் கூறுபவர்கள் கட்டாயம் இந்த லிஸ்ட்டில் தோனியின் பெயரையும் சேர்க்க வேண்டும். காரணம், நேற்று நியூஸிலாந்து இன்னிங்ஸில் 40-வது ஓவருக்குப் பிறகு `கோலி கேப்டனா... தோனி கேப்டனா?' எனும் அளவுக்குத் தோனியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

விராட்

உள்ளூர் மேஜிக்:

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. கோலி தலைமையிலான இந்தியாவின் பெரும்பாலான வெற்றிகள்  இந்தியத் துணைக்கண்டத்தில் வந்தவை. கோலியின் ஃபார்மும் கேப்டன்ஸியும் இந்தியாவில் மெர்சல் ரகம்தான். இதுவும் கோலியின் சாதனைகளுக்கு முக்கியக் காரணம். வெளிநாட்டில் ஜெயிக்கட்டும் என்பவர்களுக்கும், கோலி & கோ விரைவில் பதில் தரும் என எதிர்பார்க்கலாம். 

கோலி, தனிநபராக தினசரி சாதனைகளைக் குவித்துவருவது அவரது பலம். அதற்கு இந்த விஷயங்கள் உறுதுணையாக இருக்கின்றன. `இந்தியாவின் அடுத்த சச்சின்' என ரசிகர்களால் புகழப்படும் கோலி, சச்சினை வேகமாக நெருங்குகிறார். இதே ஃபார்ம் தொடர்ந்தால் தற்போது ஆடும் வீரர்களில் ஒருநாள் போட்டிகளில் 50 சதம் என்ற சாதனையைச் செய்ய தகுதியான ஒரே நபர் கோலி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அடுத்த போட்டியில் எத்தனை சாதனைகளைத் தகர்ப்பார் என ஒவ்வொரு போட்டியிலும் வர்ணனையாளர்களை ஹோம்வொர்க் செய்யவைக்கிறார்.

`சச்சின்... சச்சின்' என முழங்கிய மைதானங்கள், இப்போது `கோலி... கோலி' என முழங்குகின்றன. வெல்டன் கோலி!