வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/10/2017)

கடைசி தொடர்பு:20:00 (30/10/2017)

பி.சி.சி.ஐ முன்னாள் பொதுமேலாளர் எம்.வி.ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்!

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுமேலாளர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகிய எம்.வி.ஸ்ரீதர், மாரடைப்பால் காலமானார். 

Photo Credit: AP

ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய ஹைதராபாத் அணிக்காக 1988-89 சீஸன் முதல் 1999-2000 வரை விளையாடிய ஸ்ரீதர், பி.சி.சி.ஐ-யில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த அவர், முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் உள்பட 21 சதங்களை அடித்துள்ளார். மருத்துவம் படித்துள்ள அவர், கிரிக்கெட் விளையாட்டுடன் மருத்துவத் தொழிலையும் பார்த்து வந்தார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்த ஸ்ரீதர், பி.சி.சி.ஐ-யின் தலைவராக சீனிவாசன் இருந்தபோது கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான பொதுமேலாளராக நியமிக்கப்பட்டார். 

கடந்த 2016-ல் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இயக்குநராகவும் இருந்த அவர்மீது, பி.சி.சி.ஐ நிர்வாகியாக இருந்துகொண்டே ஹைதராபாத்தில் உள்ள கிரிக்கெட் கிளப்களிலும் பதவியில் இருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவரிடம் பி.சி.சி.ஐ தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இந்தநிலையில், பொதுமேலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கடிதம் அளித்தார். அவரது ராஜினாமாவை பிசிசிஐ, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி ஏற்றுக்கொண்டது. இந்தநிலையில், அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 51.