வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (31/10/2017)

கடைசி தொடர்பு:17:11 (01/11/2017)

இந்திய அணி வெற்றிபெற விரும்பும் பாகிஸ்தான்! – ஏன் தெரியுமா?

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் பங்கேற்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த ஒருநாள் போட்டி தொடரின் கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டெல்லி பெரோஸ்லா கோட்லா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, இந்த தொடரில் தோல்வியைத் தழுவினால், முதலிடத்தை பாகிஸ்தானிடம் இழக்க நேரிடும். தற்போது 125 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்திய அணிக்கெதிரான டி20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலோ அல்லது 3-0 என்ற கணக்கிலோ வென்றால், முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். மாறாக, இந்திய அணியிடம் தொடரை எந்த கணக்கில் இழந்தாலும் சர்வதேச டி20 தரவரிசையில் நியூசிலாந்தை முந்தி பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுவிடும். 116 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால் 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,’நியூசிலாந்தை அணியை வீழ்த்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு, இந்திய அணி மிகப்பெரிய உதவி செய்யும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.