வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (31/10/2017)

கடைசி தொடர்பு:16:31 (31/10/2017)

டிராவிட்டை பயமுறுத்தும் கோலியின் ஆட்டிட்யூட்!

விராட் கோலியின் ஆக்ரோஷ குணம் இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுமோ என ராகுல் டிராவிட் ஆதங்கப்படுகிறார். கோலியைப் பின்பற்றுவதன் மூலம் இளம் வீரர்கள் தங்களது இயல்பான குணத்தை இழந்துவிடக் கூடும் என்பது டிராவிட் கருத்து.

டிராவிட்

பெங்களூரில் நடந்த இலக்கியத் திருவிழாவில் இளம் வீரர்களைப் பற்றி இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில், “எந்தச் சூழலிலும் பெர்ஃபாமன்ஸ்தான் முக்கியம். கோலியைப் பொறுத்தவரை அவரது ஆக்ரோஷ குணம், பெர்ஃபாமன்ஸ் லெவலைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. எதிரிணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது அது அவருடைய பெஸ்ட் ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறது. ஆக்ரோஷமாக இருப்பது அவரது குணம். அதைப் பார்த்து சிலர், ‘நீங்கள் ஏன் அப்படி இருக்கவில்லை’ என என்னிடம் கேட்கிறார்கள். என்னால் டாட்டூ போட்டுக்கொண்டு, விராட் கோலியைப் போல இருக்க முடியாது. அப்படி இருந்தால் என் உண்மைத்தன்மை போலியாக இருக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன் விராட் கோலி பேசியதைப் பத்திரிகைகளில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அந்த ஆக்ரோஷம்தான் அவரது இயல்பு. களத்தில் எதிரணி வீரர்கள் வார்த்தைப் போரில் ஈடுபடும்போது, பேட்ஸ்மேனாக விராட் கோலியால் ஜொலிக்க முடிகிறது. அவரது ஆக்ரோஷம்தான் இன்று அவரை உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக்கியுள்ளது. இதை யாரும் ஏற்றுக்கொள்வர். இதற்காக அவரைக் குறை சொல்லக் கூடாது. ஆனால், அது எல்லோருக்கும் பொருந்தாது. ஒவ்வொரு வீரருக்கும் தனித்தன்மை உண்டு. உதாரணமாக, அஜிங்கியா ரகானே வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். ஒவ்வொருவரும் தன் இயல்பு நிலை தவறாது ஆடுவது முக்கியம். 

டிராவிட்

ஆனால், நான் வருந்துவது என்னவெனில், சீனியர் வீரர்களைப் பார்த்துத்தான் ஜூனியர்கள் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்கின்றனர். இதுதான் என்னை பயமுறுத்துகிறது. கோலியின் செயல்பாடு அல்ல. கோலியைப் போல ஆக விரும்பும் 12, 13 வயது சிறுவர்கள் தங்கள் உண்மைத்தன்மை எதுவெனப் புரிந்துகொள்ளாமல் அவரைப் போல ஆக்ரோஷமாக இருக்க முயல்கின்றனர்’’ என்றார் டிராவிட்.  

இளம் இந்திய அணி, இந்திய கிரிக்கெட் பற்றி டிராவிட் பேசுகையில், ‘‘இந்திய கிரிக்கெட்டின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது நன்றாகவே தெரிகிறது. என் முதல் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது, எப்படியாவது டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என விமானத்தில் செல்லும்போது யோசிப்பேன். அங்கு சென்றபின், எப்படியாவது ஒரு டெஸ்ட் போட்டியையாவது வெல்ல வேண்டும் என நினைப்பேன். ஆனால், இப்போது இந்தியா அடுத்தடுத்து வெற்றிபெற்று வருகிறது. மக்கள் அணியின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஃபிட்னெஸ் லெவல், வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதே தொடர்ச்சியான வெற்றிக்குக் காரணம். எங்கள் காலத்தில் இதைப் பற்றிய புரிதல் அதிகம் இல்லை’’ என்றார்.

பொருளாதாரப் பின்னணி: 

‘‘நான் பயிற்சியளித்து வரும் இந்தியா - ஏ மற்றும் அண்டர் 19 அணியில் ஏராளமான வீரர்கள் தன்னம்பிக்கையுடனும், பயமின்றியும் விளையாடுகின்றனர். நான் கல்லூரியில் பி.காம் முடித்தபின், என் தேவைகளைப் பூர்த்தி செய்ய, படிப்புப் போதுமானதாக இருக்காது, கிரிக்கெட்தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். அதனால், முன்னேற வேண்டுமென்ற நெருக்கடி இருந்தது. ஆனால், இன்றைய இளைஞர்கள் இந்திய அணிக்காக விளையாடாவிட்டாலும், கிரிக்கெட் மூலம் வாழ்க்கையில் செட்டிலாகிவிட முடியும் என்பதை உணர்கிறேன். ஒரு வகையில் இதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியே’’ என்றார் இந்தியாவின் ‘சுவர்’.

டிராவிட்

டிராவிட் சொல்வது அத்தனையும் உண்மை. இந்திய அணிக்காக இதுவரையிலும் ஒரு சர்வதேசப் போட்டியில் கூட பங்கேற்காத நண்டு சிண்டுகள் கூட, ரஞ்சி டிராபியில் விளையாட, சேப்பாக்கம்  மைதானத்துக்கு ஆடி காரில் வந்திறங்குகின்றனர்.

இளம் வீரர்களின் அலப்பறையை அருகிலிருந்து பார்த்த டிராவிட், இன்னொரு அறிவுரையும் வழங்கினார். ‘‘இளம் வீரர்களுக்கு என் அட்வைஸ் இதுதான்... ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும்வரை ஏஜென்ட்கள், மேனேஜர்கள் வைத்துக்கொள்ள வேண்டாம். விராட் கோலி, தோனி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் கதை வேறு. ஒரு மேனேஜர் வைத்திருந்தால் மட்டுமே அவர்களால் பணம், நேரம், பயணம் உள்ளிட்ட பிற விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும். 17, 18 வயது வீரர்கள் இவற்றை எளிதாகச் சமாளிக்கலாம். அவர்களுக்கு ஏஜென்ட் தேவைப்படாது. ஒரு நிலையை அடைந்தால் மட்டுமே ஏஜென்ட்கள் தேவை.’’ என்றார்.

உன்முக்த் சந்த்கள் நோட் பண்ண வேண்டிய விஷயம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்