வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (01/11/2017)

கடைசி தொடர்பு:09:09 (01/11/2017)

ஓய்வுபெறும் நெஹ்ரா; முதல் வெற்றி முனைப்பில் இந்தியா; டெல்லியில் முதலாவது டி20 போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது. இன்று, மூன்று போட்டிகள்கொண்ட டி20 தொடர், டெல்லியில் தொடங்குகிறது. 

koli


இந்திய அணி, தற்போது உச்சகட்ட ஃபார்மில் விளையாடிவருகிறது. அணியில் பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. ஒருநாள் தொடரில், நியூஸிலாந்து அணியும் இந்தியாவுக்கு சரியான சவாலை அளித்தது. கடைசி ஓவர் வரை போராடித்தான் இந்திய அணி தொடரை வென்றது.

டி20 போட்டிகளின் தர வரிசையில், நியூஸிலாந்து உலகின் நம்பர் ஒன் அணி. தவிர இந்தியா இதுவரை நியூஸிலாந்து  அணியை டி20 போட்டிகளில் வென்றது கிடையாது. இதுவரை இரு அணிகளும் 5 முறை சந்தித்துள்ளன. அனைத்திலும் இந்திய அணி தோல்வியைத் தான் தழுவியுள்ளது. இதனால், இந்திய அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் தனது முதலாவது வெற்றியைப் பெற கடுமையாக முயற்சிக்கும். நியூஸிலாந்து அணியும்  பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் கடுமையான சவால் அளிக்கும் அணியாக உள்ளது. 

கப்தில், முன்ரோ, லாதம் என அதிரடி ஆட்டகாரர்கள் அணியில் இருப்பதும், அவர்கள் அனைவரும் ஒருநாள் தொடரில் இந்தியாவில் விளையாடியதால், கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். இந்தியா, சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதம் பலம். சம பலத்தில் இருக்கும் இரு அணிகள் குறுகிய வடிவிலான போட்டியில் மோதுவதால், இந்த ஆட்டதில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. 

 இந்தப் போட்டியுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா ஓய்வுபெறுகிறார். நெஹ்ரா, கடந்த 18 ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிவருகிறார். பலமுறை காயம், அறுவை சிகிச்சை எனப் பல இக்கட்டான காலகட்டதிலிருந்து மீண்டும் மீண்டும் வரும் திறன்கொண்டவராக இருக்கிறார் நெஹ்ரா.  சொந்த மண்ணில் தனது கடைசிப் போட்டியில் நிச்சியம் களம் இறங்குவார்.  அதனால் இன்றைய போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்படும் எனத் தெரிகிறது. 

இந்தியா, தற்போது டி20 போட்டிகளில் 5-வது இடத்தில் உள்ளது.  நியூஸிலாந்து முதல் இடத்தில் உள்ளது. இந்தத் தொடரை 3-0 என வென்றால், இந்திய அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறும். இன்றைய போட்டி, இரவு 7 மணிக்கு துவங்குகிறது.