தவான், ரோகித் அசத்தல் அரைசதம் - இந்திய அணி 202 ரன்கள் குவிப்பு!

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

photo Credit: ICC

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கிய ரோகித் ஷர்மா - ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைச் சோதித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை ரோகித் ஷர்மா – தவான் ஜோடி படைத்தது. இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக தரம்சாலாவில் நடந்த டி20 போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு ரோகித் ஷர்மா – விராட் கோலி ஜோடி 138 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. தவான் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பாண்ட்யா ரன் கணக்கைத் தொடங்காமலேயே பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து ரோகித் ஷர்மாவுடன், கேப்டன் கோலி கைகோத்தார். அதிரடிகாட்டிய ரோகித் ஷர்மா 55 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய கோலி 26 ரன்களும், தோனி 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். நியூசிலாந்து அணி தரப்பில் சோதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!