நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணிக்கு முதல் வெற்றி!

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Photo Credit:ICC

 

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன், பீல்டிங் தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி, ரோகித் ஷர்மா – ஷிகர் தவான் சாதனை பாட்னர்ஷிப் உதவியால் 20 ஓவர்களில் 202 ரன்கள் குவித்தது. தவான், ரோகித் ஷர்மா இருவருமே தலா 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய கோலி 26 ரன்கள் எடுத்தார்.

203 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்கவீரர்களான கப்தில் 4 ரன்களிலும், முன்ரோ 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்ஸன் 28 ரன்களில் வெளியேறினார். போட்டியின் 13-வது ஓவரை வீசிய அக்ஸர் படேல் புரூஸ் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்ய, நியூசிலாந்து அணியின் நம்பிக்கை தகர்ந்தது. எஞ்சியிருந்த நிகோலஸை துல்லிய த்ரோ மூலம் கோலி வெளியேற்றினார். அடுத்துவந்த சவுத்தியும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். இந்தப் போட்டியுடன் ஓய்வுபெற உள்ள ஆசிஷ் நெஹ்ரா போட்டியின் முதல் ஓவரையும், கடைசி ஓவரையும் வீசினார். 4 ஓவர்கள் பந்துவீசிய நெஹ்ரா 29 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

Photo Credit:ICC

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னதாக நடந்த 5 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்திருந்தது. இந்திய அணி தரப்பில் சஹால், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!