வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (02/11/2017)

கடைசி தொடர்பு:13:44 (02/11/2017)

ஆஷிஸ் நெஹ்ரா... சளைக்காமல் ஓடிய இந்திய கிரிக்கெட்டின் வார் - ஹார்ஸ்! #ThankYouAshishNehra

பல வருடங்களாக ஒரே விதமான பௌலிங் உத்திகளைக் கொண்டு பயணித்த இந்திய அணிக்கு, ஆஷிஸ் நெஹ்ரா (Ashish Nehra) முதன்முறையாக இலங்கை அணிக்கு எதிராக 1999-ல் பங்கெடுத்தபோது, அம்பையர் ‘லெஃப்ட் ஆர்ம் ஓவர் தி விக்கெட்’ என்று சொல்ல... ‘அட... இந்தியன் டீம்ல லெஃப்ட் ஆர்ம் ஃபாஸ்ட் பெளலரா!’ என நிமிர்ந்தான் இந்திய ரசிகன். வாசிம் அக்ரம், சமிந்தா வாஸ், ஆலன் முல்லாலி போன்றவர்களை ரகசியமாகக் காதலித்து வந்தவனுக்கு அவனுடைய கண் முன்னே, அவனுக்கே, அவனுக்கென்று கிடைத்த பொக்கிஷம் நெஹ்ரா. அவரது வருகை, இந்திய அணியின் நிர்வாகத்துக்கு வேறொரு கண்ணோட்டத்தைக் கொடுத்தது. ஜாகீர் கான், இர்ஃபான் பதான், ஆர் பி சிங் என்று வரிசையாக ஒரு காலத்தில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு, வெற்றிகளைக் குவிக்க  வித்திட்டது.

Ashish Nehra

முகமது அசாருதீன் தலைமையில் டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய நெஹ்ரா, அதற்கடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், கங்குலியின் தலைமையில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஜாகிர் கானுடன் தன்னுடைய கூட்டணிக்கு முதல் விதையை வித்திட்டார். இடதுகை பந்துவீச்சாளர்களிடம் இருக்கும் தனித்தன்மையை உணர்ந்த கங்குலி, இந்த இருவரையும் வைத்து அட்டாக்கை ஆரம்பித்தார். அத்துடன், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 2003 உலகக் கோப்பைக்கு முன்னதாக, "எனக்கு கண்டிப்பாக ஜவகல் ஸ்ரீநாத்'’ வேண்டும் என போராடி அவரைப் பெற்றார். 

இளம் அணியைக்கொண்டு, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் இருமுறை ஜெயிக்க முடியாமல் போன அணியாக இந்தியா திரும்பினாலும், ஒட்டுமொத்த உலகக்கோப்பையின் என்றும் மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது, இங்கிலாந்துக்கு எதிராக நெஹ்ரா வீழ்த்திய ஆறு விக்கெட்டுகள். சச்சினுக்கு ஷார்ஜா எனில் நெஹ்ராவுக்கு டர்பன். கண்டிப்பாக வெற்றிபெற்றே ஆகவேண்டிய சூழ்நிலையில் 'டர்பன்' மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்த அந்தப் போட்டி ஒன்றே போதும் நெஹ்ராவின் திறமைக்கு.

Ashish Nehra

அடுத்தடுத்த பந்துகளில், நாசர் ஹுசைன், அலெக் ஸ்டூவிரட்டின் விக்கெட்டுகளைச் சாய்த்தார் நெஹ்ரா. ஹுசைனுக்கு, 'குட் லென்த்' மூலம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகரும் பந்து, அடுத்த பந்தே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு உள்ளே வரும் 'இன் ஸ்விங்' என இரு வேறு பரிமாணங்களை அளித்து வெற்றியை உறுதிசெய்தார்.

அந்தத் தொடரில் நெஹ்ரா முழுமையாக விளையாடிய முதல் போட்டி அது. முதல் இரண்டு ஆட்டங்களில் நிர்வாகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. மூன்றாவது ஆட்டத்தில் நமீபியாவுக்கு எதிராக, ஒரே ஒரு பந்தை மட்டும் வீசிவிட்டு, காயம் காரணமாக விலகினார். ஆனால், நெஹ்ராமீது கங்குலி வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. தென்னாப்பிரிக்காவில் பகலிரவுப் போட்டிகள் என்றால், இந்திய நேரப்படி, மாலை 6.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும். ஆட்டம் முடிய நள்ளிரவாகிவிடும். இன்டர்நெட் என்றால், பிரௌசிங் சென்டரில் கேம் விளையாட மட்டுமே என்றிருந்த நிலையில், அதிகாலை பத்திரிகைகளும் பன்னிரண்டு மணி வரை நடந்த விஷயங்களையே நம்மிடம் சேர்த்துக்கொண்டிருந்த வேளையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் சந்தோஷமாக தூங்க வைத்த வீரன். 

Ashish Nehra

போட்டிக்கு முன், இங்கிலாந்தின் காடிக், ‘நமீபியாவுக்கு எதிராக அடிப்பதெல்லாம் பொருட்டில்லை. சச்சினின் வீக்கெட்டை நான்தான் வீழ்த்துவேன்’’ என்று அறிக்கைவிட, ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. 250 ரன்களை தட்டுத்தடுமாறி எட்டியது இந்தியா. 52/2 என்று இங்கிலாந்தின் முதல் பதினைந்து ஓவர்களை ஜாகிரும் - ஸ்ரீநாத்தும் கட்டுக்குள் வைத்திருந்தபோது வெடிக்க ஆரம்பித்தார் நெஹ்ரா. இடதுகை வேகப்பந்துவீச்சார்களால், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை உள்ளே கொண்டுவருவது கடினம். கொஞ்சம் பிசகினாலும் லெக் சைடில் பந்து சரிந்து விடும். இதற்காகவே அவர்களின் 'நேச்சுரல் ஆங்கிள்' என்று குறிப்பிடப்படும், பந்தை வெளியே கொண்டு செல்வதிலேயே (அவுட் ஸ்விங்) குறியாக இருப்பார்கள். ஆனால், அப்படி செய்கையில் விக்கெட் விழாது. ரன்களை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்தலாம். நெஹ்ராவின் பௌலிங் ஆக்ஷன் மற்றும்  பௌலிங் கிரீஸில் எவ்வாறு தன்னுடைய கால்களின் மூலம் பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன் ஒரு 'புஷ்' ஏற்படுத்துகிறார் என்பது மற்ற பெளலர்கள் கற்கவேண்டிய பாடம்.

2003 உலகக்கோப்பைக்குப் பின், பல ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில், கங்குலி டிக் செய்த முதல் பந்துவீச்சாளர் நெஹ்ரா. முதல் போட்டியில், 350 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் கிட்டத்தட்ட திருப்பி அடித்துவிட, இறுதி ஓவரில் 8 ரன்களுக்கு பந்துவீச வேண்டுமென்கிற கட்டாயத்தில், கொஞ்சம் கூட அலட்டாமல் யார்க்கர்கள் போட்டு அணியை வெற்றிப்பெற வைத்தார். அந்தத் தொடருக்குப் பின்னர், பல்வேறு காயங்கள், அறுவை சிகிச்சைகள் என நெஹ்ராவின் டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வர, இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவது என முடிவுசெய்தார். 

Ashish Nehra

அசார் தொடங்கி கங்குலி, டிராவிட், தோனி, சேவாக், கம்பீர், கோலி என 7 இந்திய கேப்டன்களுடன் பயணித்தவர். இப்படி பல்வேறு காலகட்டங்களில் கிரிக்கெட்டை நேசித்து, மீண்டும் மீண்டும் காயங்கள் என்றாலும், அதிலிருந்து ஒவ்வொரு முறை மீண்டு, அதே உத்வேகத்துடன் பந்து வீசியதே பெரிய விஷயம். எக்காரணம் கொண்டும் என் வேகத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்ததும், நெஹ்ராவின் காயங்களுக்கு காரணம். (அப்படி என்ன வேகமாக பந்து வீசினார் என்ற கேள்வி எழுகிறதா? அவர் கடைசியாக வீசிய ஓவரின் ஒவ்வொரு பந்தின் வேகமும் 130-கி.மீ-க்கும் மேல்) ஒவ்வொருவரின் உடம்பிலும் ப்ளஸ்-மைனஸ் இருக்கும். நெஹ்ரா தன்னுடைய பாதங்களில் அதிக அழுத்தம் கொடுத்து, முழங்கையின் மூலம் பந்துவீசுவதின் மூலம் பல காயங்களைச் சந்தித்தார்.

2009-ம் ஆண்டு மீண்டும் அணிக்குத் திரும்பிய நெஹ்ராவை, 2011 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டிய முக்கிய பெளலராக மாற்றத் தொடங்கினார் தோனி. 2003-ம் ஆண்டைப்போல அல்லாமல், இம்முறை பௌலிங் டீம், ஜாகிர் கான் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜாகிர் கான், முனாஃப் படேல் முதல் ஸ்பெல் என்றால், நெஹ்ரா அவர் பழக்கப்பட்ட 'ஒன் சேஞ்ச்' எனப்படும் மூன்றாவது வீரராக பந்து வீச வந்தார். முதல் பவர் பிளே, பேட்டிங் பவர் பிளே மற்றும் இறுதி ஓவர்கள் என, தோனி இவரிடம் பந்தைக்கொடுக்க, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் இடம் பிடித்தார்.

இறுதிப் போட்டிக்கு முன் துரதிருஷ்டவசமாக கையை உடைத்துக்கொண்ட நெஹ்ரா, அதற்கு முன்னர் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய போட்டியான இந்திய - பாகிஸ்தான் அரையிறுதியில் வெறும் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்குத் துணைபுரிந்தார்.

Ashish Nehra

நெஹ்ராவை எப்போதும் கேலிகளும் கிண்டல்களும் துரத்திக்கொண்டே இருந்தன. குறிப்பாக, புனே அணிக்காக அவர் ஐ.பி.எல் போட்டிகளில் செயல்பட்ட விதத்தையும், தன் பந்தில் பௌண்டரி அடித்தால், ‘தப்பு செய்துவிட்டோமே’ என்ற அவர் உதிர்க்கும் சோக சிரிப்பையும்,  சோசியல் மீடியாவில் கிண்டல் செய்யாதவர்களே இல்லை. ஆனால், இத்தனை வலிகளும், வேதனைகளையும் கண்டாலும், திரும்பத் திரும்ப உள்ளூர் ஆட்டங்களில் ஜொலித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருந்தார்.

ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி, துலீப் டிராஃபி தொடர்களில் இளைஞர்களுக்கே சவால் விடும் வகையில் பந்து வீச, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஸ்டீஃபன் ஃபிளெமிங், நெஹ்ராவை அதிக விலை கொடுத்த வாங்கியதையும் ரசிகர்கள் கிண்டலடித்தனர். ஆனால், சென்னைக்காக விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் அசரடித்தார். 34-35 வயதில் எந்த மாதிரியான நுட்பங்களைக்கொண்டு பயிற்சிபெற்றால், இருபது ஓவர் ஆட்டங்களில் நிலைத்து விளையாட முடியுமோ, அதைச் செய்தார்.

"உங்களைக் கிண்டல் செய்து போடப்படும் மீம்ஸ்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு, "எனக்கு அதெல்லாம் என்னவென்றே தெரியாது. என்னிடம் இருக்கும் நோக்கியா ஃபோனில் அதெல்லாம் வராது." என்று சிரித்துக்கொண்டே சொன்னதில் அவ்வளவு உண்மை பொதிந்திருந்தது.      

Ashish Nehra

"நெஹ்ராவைப் போல என்னால் பௌன்ஸர் வீச முடியவில்லை. இடது முழங்கையைக் கொண்டு பௌன்ஸர், யார்க்கர், 'ஸ்கிட்டர்' போன்றவற்றைத் துல்லியமாக வீசக்கூடியவர்." என நெஹ்ராவைப் புகழ்ந்தார் ஜாகிர். 

தான் விளையாட ஆரம்பித்த அதே மைதானத்தில் ஓய்வுபெற விரும்புவது வீரர்களின் விருப்பம். சச்சின் அந்த ஆசையைத் தெரிவிக்கவே, இந்திய அணியின் சுற்றுப்பயணத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, மேற்கிந்தியத்தீவுகளை அழைத்து சச்சினுக்கு மும்பையில் அவருடைய 200-வது டெஸ்ட் மற்றும் கடைசிப் போட்டியை பரிசளித்தது பிசிசிஐ. எல்லோரும் சச்சின் இல்லையே! பல ஜாம்பவான்களுக்கு சொந்த மண்ணில் ஓய்வுபெறும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், நெஹ்ராவுக்குக் கிடைத்தது. நியூஸிலாந்துக்கு எதிரான டி-20 தொடரின் ஒரு ஆட்டத்துக்காக மட்டும் நெஹ்ரா தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20ஆட்டங்களுக்கும் நெஹ்ரா அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே, நான் விடைப்பெற்றுக்கொள்கிறேன் என்று அறிவித்தவருக்கு, டெல்லி போட்டி அவரது கடைசிப் போட்டியாக அமைந்தது தற்செயலே! 

18  வருடங்களில் 17 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் என்று கணக்கின் அடிப்படையில் பார்த்தால், நெஹ்ரா அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால், உங்களுக்குப் பிடித்த, தெரிந்த ஒரு விஷயத்தை எக்காரணம் கொண்டும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் நீங்கள் செய்துகொண்டே இருந்தால், நீங்கள் நினைத்தால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும். நெஹ்ரா அதற்கு நல் உதாரணம்.

விடைபெறும் முன் சஞ்சய் மஞ்ரேக்கர், ‘‘உங்களது ஓய்வு வாழ்க்கை சந்தோஷமாக அமையட்டும்’’ என வாழ்த்தினார். மஞ்ச்ரேக்கர் கேள்வியை முடிக்கும் முன், ‘‘நான் ரிட்டையர்மென்ட் ஆனாலும், ஆகாவிட்டாலும் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருப்பேன்’’ என பட்டென பதில் சொன்னார் நெஹ்ரா.

அந்தச் சிரிப்பைத்தான் மிஸ் பண்றோம் பாஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க