வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (02/11/2017)

கடைசி தொடர்பு:15:19 (02/11/2017)

அரங்கம் ஆர்ப்பரித்த நெஹ்ராவின் ஃபேர்வெல் நிமிடங்கள்! #ThankYouAshishNehra

"ஆஷிஸ் நெஹ்ராவுக்கு யாராவது லாஸ்ட் ஓவர் கொடுப்பாங்களாடா?" என்று அடிதாங்கியைப் போட்டு மொத்து மொத்துனு மொத்துவார் 'மாரி' தனுஷ். தமிழ் சினிமாவில் கலாய்க்கப்பட்ட ஒரே கிரிக்கெட்டர் அவராகத்தான் இருப்பார். நெட்டிசன்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நெஹ்ராவும், அசோக் டிண்டாவும்தான் அவர்களின் பசிக்குத் தீனி. நெஹ்ராவின் படத்தைப் போட்டு '6 பாலுக்கு 37 ரன் வேணுமா? நம்புங்க..நான் இருக்கேன்' என்பதுபோன்ற உச்சகட்ட சர்காஸ்டிக் மீம்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. 'லார்ட் நெஹ்ரா' என்று வஞ்சனை இல்லாமல் வசைபாடப்பட்ட மனிதன் நேற்று ஒரே நாளில் 'நெஹ்ராஜி' ஆகிவிட்டார். சுமார் 42,000 ரசிகர்கள் ஸ்டேண்டிங் ஓவேஷன் (Standing ovation) கொடுக்க, இந்தியக் கேப்டன் விராட் கோலி தோளில் சுமக்க, தன் 'ட்ரேட் மார்க்' புன்னகை சிறிதும் மாறாமல் விடைபெற்றுள்ளார் ( #ThankYouAshishNehra). புன்னகை மாறாமல் 16 ஓவர்கள் ஃபீல்டிங் செய்து, 4 ஓவர்கள் பந்துவீசிச்சென்ற அந்த மனிதனின் கடைசி எமோஷனல் தருணங்கள்...

Ashish Nehra

தவான், ரோஹித்தின் அதிரடியைப் பார்க்கவோ, தோனி பறக்கவிடும் ஹெலிகாப்டர் ஷாட்டை ரசிக்கவோ ஃபெரோஸ் ஷா கோட்லா அரங்கம் நிரம்பவில்லை. மண்ணின் மைந்தன் கோலியைப் பார்க்கக்கூட இல்லை. விராட் கோலி எனும் பெயர் பள்ளி வருகைப் பதிவேட்டில் இருந்த காலத்திலேயே, இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய அந்த பௌலருக்கு விடைகொடுக்கத்தான் கூடியிருந்தார்கள் டெல்லிவாசிகள். டாஸ் வென்று கேன் வில்லியம்ஸன் ஃபீல்டிங் என்றதுமே, உச்சகட்ட ஆனந்தம். நெஹ்ரா கடைசியாகப் பந்துவீசி விடைபெற வாய்ப்பு. தவான் - ரோஹித் இணை வழக்கம்போல் சரவெடி வெடிக்கிறது. ரோஹித் நேற்று டி வில்லியர்ஸ் போல் அடித்த சிக்ஸர்கள்கூட யாரையும் அதிசயிக்கவில்லை. அது ஸ்க்ரீனில் ஓடியபோது, 'நெஹ்ராவைக் காட்டுங்கய்யா' என்ற ஏக்கம்தான். தவான் நியூசிலாந்து பந்துவீச்சை வழக்கம்போல ஆஃப் சைடில் விட்டு விளாசியபோதும் அதே ஏக்கம். அவ்வப்போது அதைத் தணிக்க, கேமராக்கள் டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்பியபோதெல்லாம் தீபாவளி கொண்டாடியது, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த டெல்லி.

தவான், ரோஹித் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தபோதும், 'எப்போ 20 ஓவர் முடியும்' என்ற ஆசைதான். ஒருவழியாக தோனியின் முதல் பால் சிக்ஸர், கோலியின் கிளாசிக்கல் சிக்ஸர்கள் எல்லாம் பார்த்துவிட்டு, தங்கள் நகரில் இன்னதொரு சரித்திர நிகழ்வை அரங்கேற்றக் காத்திருந்தனர் டெல்லி ரசிகர்கள். கேரி சோபர்ஸின் அதிக ரன் சாதனையை ஜெஃப் பாய்காட் விஞ்சியது இங்குதான். பிராட்மேனின் 29 செஞ்சுரி சாதனையை கவாஸ்கர் சமன் செய்ததும், அவரது 34 சத சாதனையை சச்சின் முறியடித்ததும் இந்த மைதானத்தில்தான். ஒரே இன்னிங்ஸில் பாகிஸ்தானின் பத்து விக்கெட்டுகளையும் பண்டலாகக் கும்பிளே கட்டிச் சென்ற சாதனையும், அந்த ஜாம்பவான் ஓய்வு பெற்ற நிகழ்வும் கூட இந்த மக்களுக்கு முன்புதான். அந்த வரிசையில் அடுத்ததாக....ஆஷிஸ் நெஹ்ராவின் ஓய்வு!

Nehra

202 என்னும் இலக்கை டிஃபண்ட் செய்யவேண்டும். ஆனால் டி-20க்கு இதுவொன்றும் அசாத்திய ஸ்கோர் இல்லை. பந்தைக் கையில் எடுத்துவிட்டு, ரன்-அப் பார்த்துவிட்டு, ஃபீல்டர்களை செட் செய்கிறார் ஆஷிஸ். கண்களில் சற்று கலக்கம். மற்ற பௌலர்களைப் போல் அல்லாமல், கால்களை சற்று அகட்டி வைத்துக்கொண்டு அவர் ஓடிவரும் அந்த 'யுனிக் ரன்-அப்' கிரிக்கெட் அரங்கில் காணப்படுவது அதுதான் கடைசி. ஊரில் கிரிக்கெட் ஆடும்போது, ஜாகிர் கான் போல் குதித்துக்கூட சரியாக வீசிய அந்த இடதுகை பௌலர்களால், இவரைப்போல் அந்த வித்யாசமான ரன்-அப் எடுத்து பெர்ஃபெக்டாக எளிதில் வீசிட முடிந்ததில்லை. அப்படியான அந்த ஸ்பெஷல் ரன்-அப் தனது ஃபேர்வெல்லை எதிர்நோக்கியிருந்தது. மைதானம் முழுதும் 'வி மிஸ் யு நெஹ்ராஜி' என்ற பதாகைகள். எமோஷன்கள் பொங்கத் தொடங்கியது.

கொஞ்சம் சுமாராகத்தான் தொடங்கினார். ஆனால், ஒவ்வொரு பந்துக்கும் கோட்லாவில் ரசிகர்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. 1 வைடு, 1 பவுண்டரி வீதம் முதல் ஓவரில் 5 ரன்கள். அவரது இரண்டாவது ஓவரின் முதல் பந்து. லெக் சைட் வீசிய ஷார்ட் பாலை முன்ரோ ஃபைன் லெக் பக்கம் அடிக்க முயல, க்ளவுசில் உரசிச் செல்கிறது. டைவ் அடித்த தோனியின் க்ளவுசிலும் பட்டு கேட்ச் மிஸ்ஸாகிறது. மிகவும் கடினமான வாய்ப்பு. தன் கடைசிப் போட்டியின் ஃபேர்வெல் விக்கெட் மிஸ். வருந்தவில்லை. தன் கன்னம் சுருங்கி, பற்கள் தெரிய உதிர்க்கும் அதே சிரிப்பு. ஐந்தாவது பந்து... கவர் திசையில் முன்ரோ தூக்கி அடிக்க, முந்தைய ஓவரில் தன் சூப்பர்மேன் கேட்சால் குப்திலை வெளியேற்றிய ஹர்டிக் பாண்டியா, அதைப் பிடிக்க பின்நோக்கி ஓடுகிறார். கேட்ச் ட்ராப். ஒரே ஓவரில் இரண்டு வாய்ப்புகள். கோவமோ, ஆதங்கமோ சிறிதுமில்லை. புன்னகை மாறவில்லை. அதுதான் நெஹ்ரா!

Nehra

8-வது ஓவரை வீச மீண்டும் வந்தார். ஆஃப் ஸ்டிக்குக்கு வெளியே வரிசையாக 3 ஷார்ட் பால்கள். நான்காவது பால், திடீரென்று லெக் ஸ்டிக் லைனில் போட்டு வில்லியம்ஸனுக்கு ஷாக் தந்தார். அவர் மிட் ஆஃப் நோக்கி பந்தை அடிக்க, Air-ல் இருந்த பந்தைப் பாய்ந்து பிடிக்கக் கோலி முயல, கஷ்டமான சான்ஸ்தான்... ஆனால், மீண்டும் கையில் பட்டு மிஸ். கோலியின் அந்த முயற்சியைப் பாராட்டி நெஹ்ரா குரல் எழுப்ப, 'இந்த மனுஷனுக்காக ஒரு கேட்சாவது பிடிங்கடா' என்று கோட்லாவே ஏங்கியது. புன்னகை மாறாமல் ஃபீல்டிங் செய்யப் போனார். 16-வது ஓவர், சௌதியின் காலில் பட்டு ஃபைன்-லெக் பக்கம் பந்து விரைய, காலால் அதை 'சிப்' செய்து பிடித்து நெஹ்ரா த்ரோ செய்ய, கோலி முதல் ரசிகர்கள் வரை அனைவரும் மெர்சல் ஆனார்கள்.

ஆட்டத்தின் கடைசி ஓவர். 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி 6 பந்துகள். தன் கடைசிப் போட்டியில் முத்திரை பதிக்கவேண்டும் என்றுதான் எந்த வீரனும் விரும்புவான். வேறு எந்தப் பந்துவீச்சாளராக இருந்திருந்தாலும் யார்க்கர்கள் பறந்திருக்கும். விக்கெட் தேவையில்லை. காரணம், இவர் விக்கெட்டுகளுக்காக விளையாடியதில்லை. தேசத்தின் வெற்றிக்காக விளையாடியவர். 6 பந்துகளில் 61 ரன்கள் எனும்போது அணி வென்றுவிட்டது. இனி விக்கெட் எதற்கு. ஸ்டம்புக்கு அருகிலிருந்து ஷார்ட் ரன்-அப் எடுத்து ஓடிவந்து வீசினார். தன் ஒவ்வொரு பந்தையும் அனுபவித்தார். அந்த ஓவர் முழுதும் நின்றிருந்த ரசிகர்கள், தங்கள் மொபைல்போன் டார்ச்சை அடித்து அவருக்கு Send off கொடுக்கத் தயாரானார்கள். ஒன்று, இரண்டு, மூன்று...ஐந்தாவது பந்து வீசியதும், அந்தக் கண்கள் கொஞ்சம் கலங்கியது. கோலியின் கைகள் ரசிகர்களை நோக்கி எழும்ப, மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. 

Ashish Nehra

கடைசிப் பந்து... 'Will that be a fairytale farewell?' - ஹர்ஷா போக்லேவின் அந்த வார்த்தை மெய்யாக, டிவி, ஹாட்ஸ்டார் முன் இருந்தவர்களெல்லாம் பிராத்தனை செய்ய, கோட்லாவில் இருந்த ரசிகர்களின் மனங்கள் உற்சாகச் சத்தங்களிடையே ஊமைகளாகியிருந்தன. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அந்த ஃபுல் டாஸ் வீசப்பட, அதிலும் விக்கெட் இல்லை. ஆனால், அந்தப் புன்னகை மட்டும் மாறவே இல்லை. மைதானத்தைச் சுற்றி ரசிகர்களுக்கு நன்றி செலுத்தியபோதும், கோலி, தவான் தோள்களில் வலம் வந்தபோதும் தன்னுள் எழுந்த உணர்வுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு அவர் சிரிக்க, இத்தனை நாள்கள் அவரைப் பார்த்துச் சிரித்த கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களும் அழத்தான் செய்தனர். 

"உங்களால் மறக்க முடியாத பெர்ஃபாமென்ஸ் எது? இங்கிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பையில் வீழ்த்திய ஆறு விக்கெட்டுகளா?" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்க, "அதுமட்டுமல்ல. நிறைய இருக்கிறது. எனக்கு என்றுமே விக்கெட்டுகள் திருப்தியளித்ததில்லை. 10 ஓவர்கள் நன்றாக வீசியிருப்பேன். விக்கெட் கிடைத்திருக்காது. ஆனால், அந்தச் செயல்பாடு திருப்தியளிக்கும். மோசமான ஃபுல்டாஸ் பந்துக்கோ, ஒரு ஃபீல்டரின் அற்புதமான கேட்ச் மூலமோ கூட விக்கெட் கிடைக்கும். ஆனால், அது என்னைத் திருப்திபடுத்தாது" என்று அவர் கூறியபோது ஒரு கிரிக்கெட் வீரனாக உயர்ந்து நின்றார் நெஹ்ராஜி!

#ThankYouAshishNehra

அவரைத்தான் இத்தனை ஆண்டுகள் நாம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கியுள்ளோம். மீம்ஸ்களால் புண்படுத்தியுள்ளோம். ஆனால், அந்தப் புன்னகை கடைசிவரை மாறியதில்லை. காரணம், அவர் கடைசிவரை இந்தியாவின் வெற்றிக்காக மட்டுமே ஆடினார். 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியபோது சச்சினை மட்டும்தானே கொண்டாடினோம். 10 ஓவர்கள் பந்துவீசி, 3 பவுண்டரிகள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 39 டாட் பால்கள் வீசி, 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் வெற்றிக்காக, அந்தக் கடைசி விக்கெட்டுக்காக டைவ் அடித்து, விரல் உடைந்து வெளியேறியபோதும் புன்னகைத்த அந்த மனிதனைத்தான் நாம் இத்தனை நாள்களாக அவமரியாதை செய்துள்ளோம்.

ஓய்வு பெறும் கடைசி நாளன்று, 'வி மிஸ் யூ நெஹ்ராஜி' என்று பதாகைகள் பிடித்தால் அது அவருக்கு நாம் செலுத்தும் நன்றியா? ஒன்று மட்டும் உண்மை, இந்தியா நேற்று பெற்ற வெற்றியோ, ட்விட்டரில் வலம் வந்த #ThankYouAshishNehra என்ற ஹேஷ்டேகோ, கோலியும், தவானும் தோளில் சுமந்ததோ, கோட்லா மைதானத்தில் பதாகைகள் பிடித்ததோ, டிவியில் பார்த்து கைதட்டியதோ... அல்ல. அவரது திறமையை உணர்ந்த அந்த நொடி நம் மனதில் எழும் குற்ற உணர்வே, நாம் அவருக்குச் செய்யும் மரியாதை! 


டிரெண்டிங் @ விகடன்