வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (02/11/2017)

கடைசி தொடர்பு:19:10 (02/11/2017)

மைதானத்தில் வாக்கி-டாக்கி பயன்படுத்திய விராட் கோலி! சர்ச்சையைக் கிளப்பிய நெட்டிசன்கள்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாக்கி-டாக்கியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தவான் மற்றும் ரோகித் ஷர்மா அசத்தல் அரைசதங்கள் உதவியுடன் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி
8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமெ எடுத்து 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா, இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முதல் வெற்றி இதுவே.  

போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மைதானத்தின் எல்லைக்கோட்டருகே அமர்ந்திருந்த கேப்டன் விராட் கோலி வாக்கி-டாக்கியில் பேசிக்கொண்டிருந்தார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான இந்தத் தருணத்தைப் புகைப்படம் எடுத்து நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது வீரர்கள் வாக்கி டாக்கி பயன்படுத்தலாமா என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கேள்விக்கு விளக்கமளித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), போட்டியின்போது விராட் கோலி வாக்கி-டாக்கி பயன்படுத்தியதில் எந்த விதிமீறலும் இல்லை என்று கூறியுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ வட்டாரங்களில் விசாரித்தபோது, ’கிரிக்கெட் போட்டிகளின்போது வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் மொபைல் போன் பயன்படுத்த ஐ.சி.சி விதிமுறையின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தகவல் தொடர்புக்காக வாக்கி - டாக்கிகளைப் பயன்படுத்துவதில் எந்த விதிமீறலும் இல்லை. இந்திய அணி நிர்வாகத்திடம்
6 அதிகாரபூர்வ வாக்கி டாக்கிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று எப்போதுமே வீரர்களிடம் இருக்கும். அதைப் பயன்படுத்தி டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பவர்களிடம் கேப்டன் விராட் கோலி குடிநீர் கேட்டுள்ளார். வாக்கி - டாக்கி பயன்பாட்டுக்கு முன்பாக, அந்த மைதானத்தில் இருந்த ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரியிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது. எனவே, போட்டியின்போது விராட் கோலி வாக்கி-டாக்கி பயன்படுத்தியதில் எந்த விதிமீறலும் இல்லை’ என்று தெரிவித்தன.