வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (05/11/2017)

கடைசி தொடர்பு:08:52 (05/11/2017)

ரன் மிஷின், சேஸிங் கிங்... இந்திய கிரிக்கெட்டின் இருமுகன் கோலி! #HBDKingKohli

ஒன்பது வருடங்கள், 316 சர்வதேசப் போட்டிகள், 49 சதம் மூன்று ஃபார்மட்களிலும் 50+ சராசரி. இதெல்லாம் விராட் கோலியின் சாதனை. அவரது ரசிகர்களிடம் பாதி தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட, எங்கு, எப்போது யாருக்கு எதிராக கோலி சதம் அடித்தார் என்பதை அப்டேட்டாக சொல்வார்கள். கோலி, எப்படி கிங் கோலியானார்? ஏன், இன்றைய இந்திய அணிக்கு விராட் கோலி மிக முக்கியம்?

கோலி

சுனில் காவஸ்கரின் நேர்த்தியான பேட்டிங், ஸ்போர்ட்ஸ் பிரியர்களை ஹாக்கியிலிருந்து கிரிக்கெட் நோக்கித் திரும்ப வைத்தது. கபில் தேவின் இளம் அணி, வீழ்த்தவே முடியாதளவில் கிரிக்கெட்டில் கோலோச்சிய மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகண்டு, சச்சின் போன்றோரை கிரிக்கெட் பேட் பிடிக்க வைத்தது. அசாருதீன் காலத்தில் கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமல்லாமல், அதிலிருக்கும் நுணுக்கங்கள் மற்றும் வீரர்களின் ஸ்டைலை பின்பற்ற வைத்தது. சச்சினின் அசாத்திய பேட்டிங், தூர்தர்ஷனுக்குக் காசு கொடுத்து போட்டிகளை ஒளிபரப்ப கெஞ்சிய பி.சி.சி.ஐ-யை, ஈ.எஸ்.பி.என், ஸ்டார் போன்றவர்கள் இன்று ஒளிபரப்பு உரிமத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் கொட்டும் நிறுவனமாக்கியது. தோனியின் வருகை, ஒரு நிரந்தர விக்கட் கீப்பர் பேட்ஸ்மேன் என்கிற தேடலையும் தாண்டி, ஒரு தலைவனையும், தலைவர்களை உருவாக்கும் வீரரையும் பெற்றுத்தந்தது. அதோடு, இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கனவை நிறைவேற்றியது.  இனி, இந்திய கிரிக்கெட் அணிக்கும், அதன்மேல் வெறிகொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் இருக்கும் ஒரு நம்பிக்கை - விராட் கோலி!

'வெற்றியைத் தவிர எனக்கு ஒன்றுமே வேண்டாம். வீழ்ந்தாலும் கடைசி நொடி வரை போராடிவிட்டுத்தான் வீழ்வேன். என்னையும் என் அணியையும் நீங்கள் வெல்வது அவ்வளவு எளிதல்ல' என்பதை உரக்கச் சொல்லி வருகிறார் கோலி. அவரது இந்தப் போராட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. டெல்லி அணியை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற, தந்தையின் மரணத்தைத் தாண்டி, பேட்டிங் செய்துவிட்டு திரும்பிய நாள் முதல் இன்று வரை நீள்கிறது. வெற்றிகள் கோலியின் தலையில் ஏறாமலில்லை. 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையை வென்றவுடன், "பிசிசிஐ' எவ்வளவு பரிசுத்தொகை அறிவிப்பார்கள்’’ என்று கேட்டதிலிருந்து, ஐ.பி.எல் சர்ச்சைகள் வரை, கோலி அவரின் நெகட்டிவ்களை நாளுக்குநாள் குறைத்துக்கொண்டே வருகிறார்; முன்னேறுகிறார். 
 

விராட் கோலி

இதுவரை சவாலான சுற்றுப்பயணங்களில், இந்திய அணியின் கேப்டன்களைக் குறிவைத்து அந்நாட்டின் பத்திரிகைகளும், வர்ணனையாளர்களும் ஏதாவது கொளுத்திப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். பிரஸ் மீட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய வரலாறு நிறைய உண்டு. இதை உடைத்தவர் கோலி. தோனி ஆட முடியாமல் போன காரணத்தினால், 2014 இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவே, இரண்டு இன்னிங்ஸிலும் பெரிய சதங்கள் அடித்து வெற்றியைத் துரத்தினார். மிச்செல் ஜான்சனின் நிலைகுலைய வைக்கும் பௌன்ஸரைத் தாங்கிக்கொண்டு, அணியின் ஸ்கோரோடு நம்பிக்கையையும் சேர்த்தே உயர்த்தினார். அந்தப் போட்டியில் வெற்றியைத் துரத்தாமல் கொஞ்சம் நிதானமாக ஆடியிருந்தால், டிரா செய்திருக்க முடியும். ஆனால், வெற்றியைத் துரத்தி வீழ்ந்தாலும் வீழ்வேனே தவிர, வெற்றியை நோக்கிப் பயணப்படமால் இருக்க மாட்டேன் என்று நிரூபித்தார்.
 
அடுத்த வருடமே, உலகக்கோப்பை அரை இறுதியில் ‘ஹூக்' செய்ய முற்பட்டு, ஒரே ரன்னில் வெளியேறினார். உடனே  'கோலி சொதப்பியதற்கு அனுஷ்கா ஷர்மாதான் காரணம்' என ட்விட்டரில் வசைபாடினர். எதைப் பற்றியும் கவலைப்படாத கோலி, ‘நான் இப்படித்தான்’ என்பதுபோல, இந்தியா திரும்பியதும் அனுஷ்காவின் கையை இறுகப் பற்றி நடந்தார்.

விராட்


2015-ம் ஆண்டின் கசப்பான அனுபவத்துக்கு, அடுத்த வருடமே எண்ட் கார்டு போட்டார். 2016 இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ரிட்டர்ன் டிக்கட் போட்டு கொடுத்து அனுப்பும் வகையில் ஆடிய அந்த ஆட்டம், வெறித்தனத்தின் உச்சம். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஜேம்ஸ் ஃபாக்னர் வீசிய பந்தை, ஏறி வந்து மிட் ஆஃப் திசையில் லாஃ ப்ட் செய்ய, கேட்ச் ஆகிவிடுமோ என்று ரசிகர்கள் பதற, பந்து பௌண்டரியைத் தாண்டிச் சென்றபோது, கோலி கத்தியது அரங்கத்தில் இருந்த அத்தனை பேருக்கும் கேட்டிருக்கும். அதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில், ஃபாக்னர் ஏதோ சொல்ல முற்பட, "உன்னுடைய பந்துவீச்சை போதுமான அளவு வெளுத்துவிட்டேன். இனிமேல், உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. போய், பந்துவீசு..." என்று சொன்னதெல்லாம் வேற லெவல்.  அதற்கு முன் 2011-ல், பௌண்டரிக்கு அருகில் ஃபீல்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய ரசிகர்களின் வசைகளுக்கு பதிலளிக்கும் வகையில் விரலை உயர்த்தியது என... எதற்கும் பணியாமலும், பயப்படாமலும் வளைய வரும் கோலியை பிரதிபலிப்பது அவ்வளவு எளிதல்ல. 


டிராவிட் சமீபத்தில் குறிப்பட்டதைப் போல, கோலியைப் பின்பற்றி ஜூனியர்கள் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறதுதான், மறுப்பதற்கில்லை. அதேசமயம், ஆக்ரோஷமாக பயணிக்கும் தலைவனை இந்தியா கங்குலியின் ரூபத்தில் கண்டிருந்தாலும், கங்குலி டெஸ்ட் போட்டிகளில் அவரின் திறமைக்கேற்ப விளையாடாமல் போனது அவருக்கே கொஞ்சம் அதிருப்தியாக இருந்திருக்கும். மேலும், கங்குலியின் அணியில் தனித்தன்மை வாய்ந்த வீரர்கள் அவர்களின் ஆளுமைக்கேற்ப செயல்பட்டபோதும், ஒட்டுமொத்த அணியாக ஆக்ரோஷமாக செயல்பட முடியாமல் போனது. கோலியின் அணியோ நேர்மாறாக இருக்கிறது. இந்த ஆண்டு புனேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித்தின் விக்கெட்டை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், இஷாந்த் ஷர்மா வேண்டுமென்ற ஸ்மித்தை வெறுப்பேற்ற, அதைத் தடுக்காமல் இருந்தார் கோலி. 

கோலி


 

முந்தைய நாளை விட முன்னேறிக்கொண்டே இருத்தல் வேண்டும் என்பது கோலியின் தாரக மந்திரம். சென்றமுறை இங்கிலாந்தின் சுற்றுப்பயணத்தில், ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் தொடர்ந்து வெளியேற விமர்சனத்துக்குள்ளானார். ஆனால், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் மட்டுமே கோலி சோபிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மிச்செல் ஜான்சன் 37 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு 'ஆஷஸ்' மீட்டுக்கொடுத்த அடுத்த ஆண்டிலேயே, அவரின் கோட்டையிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 672 ரன்கள் குவித்து, தான் யார் என்பதை நிரூபித்தார் இந்த லிவ்விங் ரன் மெஷின்.


யாரிடம் விக்கெட்டை இழந்தோமோ, அடுத்தமுறை அவரது பந்தில் வெளுத்து, சதங்களைக் குவிப்பது கோலியின் ஸ்டைல். சென்ற வருடம் 4-0 என்று தோற்ற விரக்தியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ‘‘கோலி இந்தியாவில் மட்டும்தான் இப்படி அடிக்க முடியும், பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அடித்தால் நல்லது’’ எனப் புலம்பும் வகையில் இருந்தது கோலியின் ஆட்டம். இன்னமும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்படும் பந்துகளைத் தேவையில்லாமல் துரத்துகிறார் என்கிற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மிடில் & லெக் ஸ்டம்பில் இருந்து ஆடுவதை விடுத்து, ஆஃப் & மிடில் ஸ்டம்ப்பிலிருந்து ஆடத் தொடங்கியிருக்கிறார். அதற்கு உடனே பலனும் கிடைத்திருக்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 92 மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் இரண்டு சதங்கள் என, தொடருக்கு தொடர் தன்னுடைய பலவீனங்களைக் குறைப்பதில் முனைப்பு காட்டுகிறார்.
 

கோலி 

கோலி குறுகிய காலத்தில் இவ்வளவு சாதித்தாலும், சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற, வென்றே தீர வேண்டிய போட்டியில் தோள்பட்டை காயத்தால் கோலி விலக, பயிற்சியாளர் கும்ப்ளே, கோலியின் இடத்தில் பேட்ஸ்மேனுக்குப் பதிலாக, இடது கை சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை களமிறக்கினார். இதுவே, கோலி - கும்ப்ளே உரசலுக்குக் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. அணியின் பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனே, சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பயணித்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது பாஸ்ட் ஃபார்வேர்டில் கடக்க வேண்டியவை. சௌரவ் கங்குலி முதற்கொண்டு கோலியின் பிடிவாதத்தை அவ்வப்போது விமர்சித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கோலிக்கு அவர் கேட்டபடியே பயிற்சியாளர், வீரர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைக்கொண்டு என்ன செய்யப்போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. குறிப்பாக, அடுத்த உலகக்கோப்பை வரை.
 
திறமைக்கேற்ப விளையாடும் வீரர்களின் மத்தியில், இல்லாத ஒன்றை வளர்த்துக்கொள்வதே கோலியின் சிறப்பு. கோலிக்கு இயல்பாக 'ஸ்வீப்' ஷாட் மூலம் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளத் தெரியாது. ஆனால், ரோஹித், தவான், புஜாரா, ரஹானே ஆடுவதைப்பார்த்து, அவர்களிடம் கற்றுக்கொண்டார். சேஸிங் செய்வதில் மட்டும் கில்லி என்றிருந்ததை மாற்றி, இன்று முதல் இன்னிங்சிலும் டாப் கியரில் பயணிக்கிறார். அஸ்வின், ஜடேஜாவைத் தாண்டி தரமான ஸ்பின்னர்களை உருவாக்கும் விதத்தில், அணியைக் கட்டமைத்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு டீம், ஒன்டே மேட்ச்சுக்கு ஒரு டீம் உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார். 9-0 என்ற விகிதத்தில், இலங்கையை வென்ற பின்பு, "இம்மாதிரியான இக்காட்டான சூழ்நிலையை ஒவ்வோர் அணியும் கடந்தே தீர வேண்டும். இலங்கைக்கு எங்களால் ஏதேனும் உதவ முடியுமென்றால் கண்டிப்பாக அவர்களின் அடிப்படையைக் கட்டமைக்க உதவுவோம்" என்று கூறியது இதுவரை யாரும் சொல்லாதது.
 

கோலி


 கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், கோலியைப் போன்று, நம்முடைய கேப்டன்கள் ஃபிட்டாக இருந்து, மைதானத்தின் எந்த மூலையிலும் எந்நேரத்திலும் நின்றிருக்கிறார்களா என்றால்... இல்லை. ஃபிட்னெஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பாண்டிங் போல அட்டகாசமான ஃபீல்டராகவும் நம்முடைய கேப்டனை பார்க்கும்போது ஒருவித சந்தோஷம் தொத்திக்கொள்கிறது! 
 
ஜாம்பவான்களின் கூற்றுக்கேற்ப, ஒரு பேட்ஸ்மேனின் சிறந்த பெர்ஃபாமென்ஸ் 28 - 32 வயதில்தான் வெளிப்படும். ஏனென்றால், கிரிக்கெட் விளையாடும் அனைத்து இடங்களுக்கும் ஒருமுறை பயணம் செய்த அனுபவமும், பொறுமையும் அந்த சமயத்தில்தான் கிடைக்கும்.  கோலி அவரின் சிறந்த காலகட்டத்தில் அணியின் தலைவனாகவும் இருப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெரிய வரம். வாய்ப்புக் கிடைத்தால், ஐபிஎல் போட்டிகளிலிருந்து கொஞ்சம் விடுபட்டு,  இங்கிலாந்தின் கவுண்ட்டி போட்டிகளில் பங்கேற்க தயார் என்று அறிவித்ததிலயே கோலியின் கணக்கு புரிபடும்.
 
கோலி, ஒரு யுகத்துக்கான வீரன்!


டிரெண்டிங் @ விகடன்