வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (04/11/2017)

கடைசி தொடர்பு:21:06 (04/11/2017)

முன்ரோ அசத்தல் சதம்! - நியூசிலாந்து அணி 196 ரன்கள் குவிப்பு

தொடக்கவீரர் முன்ரோவின் அசத்தல் சதத்தின்  உதவியால் ராஜ்கோட் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 196 ரன்கள் எடுத்தது. 

Photo Credit: ICC

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறும் இந்த போட்டியிலும் முதல் போட்டியைப் போலவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸை இழந்தார். டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கிய முகமது சிராஜ் அறிமுக வீரராகக் களமிறங்கினார். 

நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸைத் தொடங்கிய மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ, அந்த அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு நூறு ரன்களுக்கு மேல் சேர்ந்த இந்த ஜோடியை சுழற்பந்துவீச்சாளர் சஹால் பிரித்தார். நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 105-ஆக இருந்தபோது 45 ரன்கள் எடுத்திருந்த மார்டின் கப்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்ஸன், அறிமுக வீரர் முகமது சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் முகமது சிராஜ் வீழ்த்தும் முதல் விக்கெட் இதுவாகும். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய முன்ரோ, 54 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 109 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் சஹால் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒருவிக்கெட் வீழ்த்தினர். அறிமுக போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சிராஜ் ஒரு விக்கெட் எடுத்ததுடன், 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.