வெளியிடப்பட்ட நேரம்: 00:33 (05/11/2017)

கடைசி தொடர்பு:00:33 (05/11/2017)

இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணி

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியிலும் முதல் போட்டியைப் போலவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸை இழந்தார். டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்  முன்ரோ, 54 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 109 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து, 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 196 ரன்கள் குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் 5 மற்றும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதற்கு பின்னரும் சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டே வந்தது. ஒருபுறம் கேப்டன் விராட் கோலி மட்டும் அதிரடி காட்டினார். அவரும் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. ட்ரென்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியால், டி20 தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி, திருவனந்துபுரத்தில் வரும் 7-ம் தேதி நடக்கவுள்ளது.