வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (06/11/2017)

கடைசி தொடர்பு:12:10 (06/11/2017)

’தோனிக்கும் எனக்கும் இடையே பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுகிறார்கள்’ - மனம் திறந்த கோலி

தோனிக்கும் தனக்கும் இடையில் பிரச்னையை உருவாக்க சிலர் எண்ணுவதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 


விராட் கோலி மற்றும் தோனி இடையிலான உறவுகுறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான நிலையில், அது தொடர்பாக கேப்டன் கோலி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ’பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற வெப் சீரிஸில் இதுகுறித்துப் பேசியுள்ள கோலி, ‘எனக்கும் தோனிக்கும் இடையில் பிரச்னை இருப்பதாகப் பலரும் கதைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அதுபோன்ற கதைகளை நானோ, தோனியோ படிப்பதில்லை என்பதுதான். எங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கும் பலரும், அவர்களிடையே எந்தப் பிரச்னையும் இல்லையா என்றே ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். அதுபோன்ற விஷயங்களைக் கேள்விப்படும்போது, சிரித்துக்கொண்டே கடந்துவிடுவோம். ஏனென்றால், அப்படி ஒன்று எங்களுக்குள் இல்லை. 

கிரிக்கெட் போட்டியின்போது ஒவ்வொரு சூழலிலும் சரியான திட்டமிடல் என்னிடம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம், இக்கட்டான சூழலில் தோனி கூறும் ஆலோசனைகள் 10-க்கு 8 அல்லது 9 இடங்களில் சரியாகவே இருக்கும். எங்களது நட்பு பல வருடங்களாக வளர்ந்தே வந்திருக்கிறது. கேப்டனாக நான் செயல்படத் தொடங்கிய ஆரம்ப நாள்களில், தோனி எனக்கு பக்கபலமாகவே இருந்தார். அவர் எனக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டது மகிழ்ச்சி.   

தோனியின் திறமைமீது எனக்கு கண்மூடித்தனமான நம்பிக்கை இருக்கிறது. களத்தில் ரன் எடுக்க ஓடும்போது, இரண்டு ரன்கள் ஓடலாம் என்று அவர் சொன்னால், நான் கண்ணை மூடிக்கொண்டு இரண்டு ரன்களை ஓடி எடுக்கவே முயற்சிசெய்வேன். ஏனென்றால், தோனியின் கணிப்பு என்றுமே தப்பாது என்று எனக்குத் தெரியும். தோனிக்கும் எனக்கும் இடையிலான நட்பு எந்த வெளி சக்தியாலும் பாதிக்கப்படாது ’ என்று உற்சாகமாகப் பேசினார், விராட் கோலி .