வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (07/11/2017)

கடைசி தொடர்பு:16:35 (07/11/2017)

ஆசியக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் மேரிகோம்

ஆசியக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மேரிகோம் அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார்.

மேரிகோம்

வியட்நாம் நாட்டின் ஹோ-சி-மின் நகரில் ஆசியக் குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் காலிறுதி ஆட்டத்தின் தனி நபர் பிரிவுகளில் இந்திய வீராங்கனைகள் மிகச்சிறப்பாக விளையாடி அரையுறுதிக்குத் தேர்வு பெற்றனர். இதில் தற்போது நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார் மேரி கோம். இந்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவின் கீழ் விளையாடிய மேரிகோம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜப்பான் நாட்டின் டிசுபாஷா கோமுரா என்னும் வீராங்கனையை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

அரையிறுதிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் போட்டியை வென்ற மேரிகோம், இறுதிப்போட்டியை வெல்வதன் மூலம் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று தருவார் என்று நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.

தற்போது ராஜ்ய சபா எம்.பி-யாகப் பணியாற்றும் மேரிகோம் இந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை வெல்வதன் மூலம் ஆசியக் கோப்பைத் தொடர் ஒன்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த பெருமையை ஏற்பார்.