வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (07/11/2017)

கடைசி தொடர்பு:17:35 (07/11/2017)

ஒரே போட்டியில் இரண்டு ஹாட்ரிக்! - மிட்செல் ஸ்டார்க் அசத்தல்

ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரின் ஒரே போட்டியில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சாதனை படைத்துள்ளார். 

Photo: Cricket.com.au

ஷெஃப்பீல்டு ஷீல்டு கோப்பை தொடரில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான நியூ சவுத்வேல்ஸ் அணிக்காக மிட்செல் ஸ்டார்க் விளையாடி வருகிறார். வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜேசன் பெஹ்ரண்டாஃப், டேவிட் மூடி மற்றும் சைமன் மேக்கின் ஆகிய மூன்று வீரர்களை அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்கச் செய்து, ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரில் மிட்செல் ஸ்டார்க் எடுக்கும் முதல் ஹாட்ரிக் இதுவே. 

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஸ்டார்க்கின் மேஜிக் ஸ்பெல் தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸைப் போலவ ஜேசன் பெஹ்ரண்டாஃப், டேவிட் மூடி ஆகியோரை அந்தப் போட்டியில்தான் வீசிய 15 வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் வெளியேற்றிய ஸ்டார்க், தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜோனோ வெல்ஸை வீழ்த்தி இரட்டை ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரின் ஒரே போட்டியில் இரட்டை ஹாட்ரிக் வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. அந்தப் போட்டியில் ஸ்டார்க் வீழ்த்திய 7 விக்கெட்டுகளின் உதவியுடன் நியூசவுத் வேல்ஸ் அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கெதிரான ஆசஸ் தொடர் வரும் 23-ல் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் இரட்டை ஹாட்ரிக் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.