வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (08/11/2017)

கடைசி தொடர்பு:15:51 (08/11/2017)

பும்ராவின் அந்த ஓவர்... சஹாலின் 6 டாட் பால்... இது பெளலர்களின் வெற்றி! IndVsNz

 டி-20, பேட்ஸ்மேன்களுக்கான கேம். அதை பெளலர்களைக் கொண்டு ஜெயிப்பது சாகசம். அந்த சாகசத்தை நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் (IndVsNz) நிகழ்த்தியிருக்கிறது இந்தியா. இந்தியாவின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்த பெளலர்கள் பும்ரா, சாஹல் இருவருக்கும் அன்லிமிடெட் லைக்ஸ்! 

IndVsNz


முப்பது ஆண்டுகளுக்குப் பின் திருவனந்தபுரத்தில் நேற்று கிரிக்கெட் மேட்ச் நடந்தது. மழை குறுக்கிட்டதால் அதுவும் தடைபடுவதுபோல இருந்தது. நல்லவேளை போட்டி கைவிடப்படவில்லை. மாறாக, டி-20 மேட்ச் 8-8 ‘பெட்’ மேட்ச்சானது. 
டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பெளலிங் வீசியது. முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி முதல் இரண்டு ஓவர்களில் எடுத்தது 14 ரன்கள்.

மூன்றாவது ஓவரில் ஓபனர்கள் ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா இருவரையும் பெவிலியன் அனுப்பி வைத்தார் டிம் செளதி. இருவரையும் கேட்ச் பிடித்தது சான்ட்னர். ஷிகர் தவன் கேட்ச்சை ஓடி வந்து சான்ட்னர் பிடித்ததும் ‘‘இந்தமுறை சான்ட்னர் கேட்ச் பிடித்து விட்டார்’’ என அழுத்திச் சொன்னார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. காரணம், இந்தத் தொடரில் அவர் கோட்டை விட்ட கேட்ச்கள் பல. ஆனால், நேற்று வேற மாதிரி இருந்தார். இரண்டு கேட்ச் மட்டுமல்லாது, மணீஷ் பாண்டே அடித்த பந்தை பவுண்டரி லைனில் பிடித்து தடுமாறி கீழே விழுந்தபோதும் அதை, சக வீரர் கிராண்டமிடம் பாஸ் செய்தார்.

மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரி, லாங் ஆனில் ஒரு சிக்ஸர் விளாசிய விராட் கோலியை மீண்டும் ஒரு புல் ஷாட் ஆட விட்டு, காலி செய்தார் டிம் செளதி. கோலி பெவிலியன் திரும்ப, கிரீன்ஃபீல்டு மைதானம் நிசப்தமானது. மீண்டும் ஒருமுறை ஷாட் செலக்ஷனில் தவறு செய்தார் ஷ்ரேயாஸ். பாண்டியா தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் அடிக்க, மணீஷ் பாண்டே 17 ரன்களில் வெளியேறினார். தோனிக்கு பேட் பிடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை. இந்தியா எட்டு ஓவரில் 5 விக்கெட்டுக்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IndVsNz

8/8 போட்டியில் இது சாதாரண ஸ்கோர். இதை நியூஸிலாந்து எளிதில் சேஸ் செய்யும் என்றே தெரிந்தது. அதற்கு தகுந்தாற்போல, புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில், சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்கவிட்டு மிரட்டினார் மன்றோ. புவனேஸ்வர் மனம் தளரவில்லை. அதே ஓவரில் கம்பேக் கொடுத்தார். கப்டிலை ஒரு ஸ்லோ பாலில் காலி செய்தார். கப்டில், மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடிக்க முயல, பந்து ஆஃப் ஸ்டெம்பைப் பதம் பார்த்தது. ஆபத்தான கப்டில் பெவிலியன் திரும்பினார். நியூஸிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு எட்டு ரன்கள்.

மன்றோ ஆபத்தான வீரர். அவரது விக்கெட் இந்தியாவுக்கு முக்கியம். இது பும்ராவின் முறை. சொடுக்குப் போட்டு சவால் விடுவது போல மூன்றே பந்தில் மன்றோவைத் தூக்கினார் பும்ரா. மூன்று பந்துமே குட் லெந்த்தில் வீசப்பட்டவை. மன்றோ பவர் ஹிட்டர். அவரால் இரண்டு டாட் பால்களைத் தாங்கிக்கொள்ளமுடியாது. அதுவும் 8 ஓவர் மேட்ச்சில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளைத் திண்பது ஒரு பேட்ஸ்மேனுக்கு அழகல்ல. அதனால்தான், மூன்றாவது பந்தை சிக்ஸருக்குத் தூக்கினார். அதை லாங் ஆனில் இருந்து வந்த ரோஹித் அட்டகாசமாக கேட்ச் பிடித்தார். இதை அட்டகாசம் என ஒற்றை வார்த்தையில் கடந்துவிட முடியாது. ஏனெனில் கேட்ச் அப்படி!  

ஓடி வந்த ரோஹித் டைவ் அடிக்கிறார். கிட்டத்தட்ட பந்து கீழிறங்கி விட்டது. ரோஹித் டைவ் அடித்தபடியே இரு கைகளையும் நீட்டுகிறார். பந்து வலது கையில் வசமாக சிக்கி விட்டது. அதை நழுவ விடக் கூடாது. இதில் அவர் கவனமாக இருந்தார். பந்து கையில் இருந்த வலது மணிக்கட்டை தரையில் வைத்து (பந்து தரையில் விழாதபடி) இடது கையை தரையில் ஊன்றி மேலே எழுகிறார். அரங்கம் ஆர்ப்பரிக்கிறது. விராட் கோலி ஓடி வந்து ரோஹித் கழுத்தை இறுக்கி பாராட்டுகிறார். வாட்டே கேட்ச்! 

IndVsNz

குல்தீப் ஓவரில் கிராண்டம் லாங் ஆனில் அடித்த சிக்ஸர்தான் நேற்றைய மேட்ச்சின் பக்கா சிக்ஸர். இப்படியொரு சிக்ஸரைக் கொடுக்கவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் சாஹல். நேற்று சாஹல் விக்கெட்  எடுக்கவில்லைதான்.  ஆனால், அவர் பந்தில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களால் ஒரு பவுண்டரி கூட அடிக்கமுடியவில்லை. இக்கட்டான தருணத்தில் நேர்த்தியாக பந்துவீசினார். குறிப்பாக, அவர் வீசிய ஆறாவது ஓவர் பக்கா. நியூஸிலாந்தின் வெற்றிக்கு 18 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற நிலை. கிராண்டம் ஸ்ட்ரைக்கர். ஆம், குல்தீப் பந்தில் மிரட்டல் சிக்ஸர் அடித்த அதே கிராண்டம். ஆனால், அடுத்தடுத்த இரண்டு பந்துகள் அவரை ரன் எடுக்க விடாமல் செய்தார் செய்தார் சாஹல். லெஃப்ட், ரைட் என இரண்டு வகை பேட்ஸ்மேன்களுக்கும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார். அவர் வீசிய 12-ல் ஆறு பந்துகள் டாட் பால். ஒவ்வொரு இரண்டாவது பந்திலும் ரன் கொடுக்கவில்லை. சபாஷ் சாஹல்.

 

 

7-வது ஓவரை பிரமாதமாக வீசினார் டெத் பெளலிங் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா. இத்தனைக்கும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கொடுத்தார். அது மேட்டரில்லை. நிக்கல்ஸ், புருஸ் இருவர் விக்கெட்டை எடுத்ததே திருப்புமுனை. சரி, டெத் பெளலிங் ஸ்பெஷலிஸ்ட்டை ஏழாவது ஓவரை வீசச் சொல்லி விட்டால், கடைசி ஓவரை யார் வீசுவது? குல்தீப் ஸ்பின்னர். சுழற்பந்தில் சிக்ஸர்கள் அடிப்பது அவ்வளவு கஷ்டமல்ல. வேறு வழியில்லை. ஹர்டிக் பாண்டியாதான் மானம் காக்க வேண்டும். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை. டிஃபண்ட் செய்யக் கூடிய ரன்கள்தான். முதல் பந்தில் ஒரு ரன். கிராண்டம் அடித்த இரண்டாவது பந்து பாண்டியாவின் இடதுகையைப் பதம் பார்த்தது. பிசியோ களத்துக்கு வருமளவுக்கு வலி தீவிரமடைந்திருந்தது. ஆனாலும், வலியோடு பந்துவீசத் தொடங்கினார்.

IndVsNz

மூன்றாவது பந்தில் கிராண்டம் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்து வைடு. 3 பந்தில் 10 ரன்கள் தேவை. டி-20 போட்டிக்கே உரிய, ஸாரி, 8/8 மேட்ச்சுக்கே உரிய திக் திக் நிமிடங்கள். நல்லவேளையாக, கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரி ஏதும் கொடுக்கவில்லை பாண்டியா. இந்தியா 6 ரன்களில் வெற்றி. 2-1 என தொடரையும் வென்றது. கோலி அண்ட் கோ படையின் வெற்றிநடையும் தொடர்கிறது. 

நேற்றைய போட்டியில் 67 ரன்கள் என்பது நியூஸிலாந்துக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இந்திய பெளலர்கள் மீண்டும் ஒருமுறை தேவையான நேரத்தில் ஜொலித்தனர். குறிப்பாக, பும்ரா, சாஹல். இவர்கள் இருவரும் இணைந்து 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தியிருந்தனர். மற்றவர்களின் நான்கு ஓவர்களில் 44 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. ஆனால், இது அவர்களின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்