வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (08/11/2017)

கடைசி தொடர்பு:10:48 (09/11/2017)

ஆண்ட்ரூ பிர்லோ ... கால்களில் ஓவியம் வரைந்த மைக்கலேஞ்சலோ! #ThankYouPirlo  #AndreaPirlo 

He was a Michelangelo who painted with his feet. இது ஆண்ட்ரூ பிர்லோவைப் பற்றி James Horncastle என்ற கால்பந்து நிருபர் எழுதிய வரிகள். மைக்கலேஞ்சலோ, பிர்லோ இருவரும் இத்தாலியர்கள். தங்கள் துறையில் ஜாம்பவான்கள் என்பதைத் தாண்டி, இன்னோர் ஒற்றுமையும் இருக்கிறது. இருவரும் ஆர்க்கிடெக்ட். முன்னவர் கட்டடக்கலையில்...பின்னவர் கால்பந்தில்... ஆம், இத்தாலி கால்பந்து வீரர் ஆண்ட்ரூ    பிர்லோவின் நிக் நேம் The Architect!

பிர்லோ

ஸ்ட்ரைக்கர்களைக் கொண்டாடும் இந்த உலகில் ஒரு மீட்ஃபீல்டர் ஓய்வுபெறும்போது ‘மிஸ் யு லெஜெண்ட்’ ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆவதிலேயே புரிந்துகொள்ளலாம், பிர்லோ எப்பேர்பட்ட ஆர்க்கிடெக்ட் என்று...

கால்பந்தில் மிட்ஃபீல்டர் என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஸ்ட்ரைக்கர்களுக்குச் சரியான நேரத்தில் பாஸ் கொடுக்க வேண்டும். டிஃபண்டர்கள் தள்ளாடும்போது தோள் கொடுக்க வேண்டும். வசமாக ஒரு வாய்ப்புக் கிடைத்தால், Half Volley-யில் பாக்ஸுக்கு வெளியே இருந்து அசத்தலாக ஒரு கோல் அடிக்க வேண்டும். கூட்டம் அதிகமாகி விட்டால், கல்லாவிலிருந்து இறங்கிவந்து சப்ளையராகி விடும் முதலாளியைப் போல... எல்லா இடத்திலும் நிற்க வேண்டும்!

கிரிக்கெட்டில் ஸ்கோர் போர்டில் உள்ள எண்களை வைத்து எப்படி ஒரு வீரனின் திறமையைக் கணக்கிட முடியாதோ, அதுபோலவே, கால்பந்தில் கோல்களை வைத்து ஒரு மிட்ஃபீல்டரின் திறமையை அளவிட முடியாது. கோல்கள் என்பது வெறும் எண்ணிக்கை. திறமை அல்ல. சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் கோல் அடித்த செர்ஜியோ ரமோஸ், ஒரு டிஃபண்டர். ஆக, கோல் யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால், சரியான நேரத்தில் சக வீரனுக்கு ஒரு பாஸ் போடுவது சிரமம். எல்லோருக்கும் அந்த வித்தை கைகூடாது.  

அதென்ன, பாஸ் போடுவதில் வித்தை? ‛‛பிர்லோ, கண்ணிமைக்கும் நொடியில் அற்புதமாக ஒரு பாஸ் கொடுத்துவிடுவார். அந்த பாஸைப் பார்ப்பதற்கு மற்ற வீரர்கள் வாழ்நாள் முழுவதும் காத்துக்கிடக்க வேண்டும்’’ என்றார் பயிற்சியாளர் கர்லோ ஆன்சலெட்டி. அதாவது, யாருக்கு, எப்போது, எப்படி பாஸ் கொடுத்தார் என்பதை எதிரணி வீரர்கள் கண்டுணரவே சில நொடிகள் ஆகும் என்கிறார் அந்தப் பயிற்சியாளர். அதுதான் மாயவித்தை!

பிர்லோ

சரியான நபருக்குச் சரியான நேரத்தில், சரியான கோணத்தில், சரியான வேகத்தில், சரியான இடத்தில் பாஸ் போடுவது மட்டுமல்ல, சரியான தருணம் வரை பந்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ஒரு கலைதான். அந்தக் கலையும் எல்லோருக்கும் வாய்க்காது. இனியெஸ்டா போல, பிர்லோ போல ஜீனியஸ்களுக்கே வாய்க்கும். 

2006 உலகக் கோப்பை அரையிறுதி. எதிரணி ஜெர்மனி. ரைட் கார்னரிலிருந்து இத்தாலி வீரர் கொடுத்த பந்தை ஜெர்மனி டிஃபண்டர் ஒருவர் தலையால் முட்டி கிளியர் செய்கிறார். பந்து பாக்ஸுக்குச் சற்று வெளியே இருக்கும் பிர்லோவிடம் வருகிறது. எதிர்பாராத நேரத்தில் வந்த பந்தை சடக்கென வாங்கி, ஒரு மேஜிக் செய்வார் பிர்லோ. இங்குதான் அவரது முதிர்ச்சி வெளிப்படுகிறது. பந்து தன் காலுக்குக் கிடைத்த அடுத்த நொடியே அதை அவர் Shot on  target செய்திருக்க முடியும். பிர்லோ அதைச் செய்யவில்லை.

 

 

ஒருவேளை ஷாட் அடித்திருந்தாலும் நிச்சயம் அது 100 சதவிகிதம் கோலாகி இருக்குமா என்பதும் சந்தேகமே. இதையெல்லாம், பந்தைக் காலில் வைத்திருந்த அந்த ஓரிரு நொடிகளில் சிந்தித்தார். அதோடு, வலதுபுறம் ஃபேபியோ கிராஸோ, மார்க் செய்யப்படாத இடத்தில் இருப்பதையும் பார்த்துவிட்டார். அவரும் பாக்ஸுக்குள், கோல் அடிக்க ஏதுவான இடத்தில் இருக்கிறார். ஆனால், ஒரு பிரச்னை. பிர்லோவுக்கு முன் மூன்று ஜெர்மனி வீரர்கள் வட்ட வளையம் போட்டு நிற்கின்றனர். பிர்லோ பந்தை வாங்கியவுடனே கிராஸோவுக்கு பாஸ் கொடுத்திருந்தால், இந்த மூன்று வீரர்களும் கிராஸோவைச் சூழ்ந்திருப்பர். அவரும் எசக்குப்பிசகாக எங்கோ அடித்துத் தொலைத்திருப்பார். ஷாட் மிஸ்ஸாகியிருக்கும். கோல் மிஸ்ஸாகியிருக்கும். அதனால், இந்த இடத்தில் ஒரு மேஜிக் செய்தார் பிர்லோ. இதை உன்னிப்பாகக் கவனித்திருந்தால்தான் புரியும் அது மேஜிக் என்று.

 

 

அதென்ன மேஜிக்... இடது காலில் வாங்கிய பந்தை இரண்டு மூன்று முறை வலது காலில் தட்டி விட்டு, வலப்பக்கம் நோக்கி நகர்வார் பிர்லோ. அவரிடமிருந்து பந்தைப் பிடுங்குவதற்காக, அந்த மூன்று ஜெர்மனி வீரர்களும் பிர்லோவை நெருங்குவர். அவர்கள் மூவரும் தன்னை நெருங்கியதை உறுதிப்படுத்திய அடுத்த நொடியில், கிராஸோவுக்கு பாஸ் போடுவார். பாஸ் வாங்கிய அதேவேகத்தோடு கிராஸோ லெஃப்ட் ஃபுட்டில் ஒரு உதை விடுவார். பந்து கம்பத்துக்குள் விழும். கோல். இத்தாலி வெற்றி. இந்த இடத்தில் கோல் அடித்த கிராஸோவைக் கொண்டாடுவதை விட, பாஸ் கொடுத்த பிர்லோவைக் கொண்டாடுவதுதான் தேர்ந்த கால்பந்து ரசிகனுக்கு அழகு. அதனால்தான் இந்த வித்தைக்காரனை எப்படியாவது தன் க்ளப்பில் சேர்த்துவிட வேண்டும் எனத் துடித்தார் பெப் கார்டியாலோ. அதனால்தான், பிர்லோவுடன் விளையாட முடியாதா என ஆதங்கப்பட்டார் ஜாவி. அதனால்தான், பிர்லோ எங்கள் நாட்டில் பிறக்கவில்லையே எனப் பொறாமைப்பட்டனர் பிரேசிலியர்கள். 

பிர்லோ

விளையாட்டு உலகில் இப்போது ஒரு புது ட்ரெண்ட் உருவெடுத்திருக்கிறது. ஜாம்பவான் என்பதன் அர்த்தம் தெரியாமல், ஓய்வுபெறும் எல்லா வீரர்களையும் லெஜெண்டாக்கி விடுகின்றனர் ரசிகர்கள்! ஜாம்பவான் என்றால் யார்? சாதாரண வீரன் செய்யத் தயங்குவதை அநாயசமாக அரங்கேற்றுவதே ஜாம்பவானுக்கு அழகு. பிர்லோ ஜாம்பவான். காரணம் இதோ...

 
2012 யூரோ கோப்பை காலிறுதி. எதிரணி இங்கிலாந்து. இரு அணி வீரர்களும் 120 நிமிடங்கள் களத்தில் பம்பரமாய் சுழன்றும் பலனில்லை.அரையிறுதிக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் பெனால்டி ஷூட் அவுட். கிட்டத்தட்ட இது மைண்ட் கேம். இத்தாலி சார்பில் மூன்றாவது ஷாட்டை அடிக்க வருகிறார் பிர்லோ. ஷூட் அவுட்டில் சொதப்பிவிடக் கூடாது. கோல் போஸ்ட்டுக்கு மேலே அடித்துவிடக் கூடாது; கம்பத்திலும் அடித்துவிடக் கூடாது; பந்தை கோல் கீப்பர் கையில் கொடுத்துவிடக் கூடாது; தப்பித் தவறிக் கூடசொதப்பிவிடக் கூடாது. சொதப்பினால், யூரோ கோப்பை நாக் அவுட்டில் பெனால்டியை மிஸ் செய்தவன் என்ற பழியை காலத்துக்கும் சுமக்க நேரிடும். அதுமட்டுமல்ல அடுத்து வரும் சக வீரனுக்கு நெருக்கடி. சக வீரனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணிக்கும், அணிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கும் டென்ஷன். இத்தாலி, இங்கிலாந்து மட்டுமல்ல கால்பந்து உலகமே பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. திக் திக் நிமிடங்கள் ஆரம்பம்... அந்தக் களேபரத்தில் பிர்லோ ஒரு விஷயம் செய்தார் படு கூலாக...

பிர்லோ

Panenka kick... பெனால்டியில் பனேன்கா கிக் அடிக்க தனி தைரியம் வேண்டும். அதுவும் யூரோ கோப்பை காலிறுதியில்... பிர்லோ அடித்த பனேன்கா கிக் என்னவானது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன், பனேன்கா கிக் பற்றி தெரிவது அவசியம். ஷூட் அவுட்டை எதிர்கொள்ளும் கோல் கீப்பர், உத்தேசமாக வலது அல்லது இடதுபுறம் டைவ் அடிப்பார். அந்த நேரத்தில் கோல் கம்பத்தின் மையத்தில், அதாவது கோல் கீப்பர் நிற்கும் இடத்தில் பந்தைப் பூப்போல, லேசாகக் கம்பத்துக்குள் தட்டிவிட வேண்டும், அதவாது, பெண்கள் குடத்தில் எலுமிச்சம் பழம் போடுவதைப் போல... அப்படி ஒரு ஷாட்டை அலட்டாமல் அடித்து இத்தாலியை முன்னிலை பெறவைத்தார் அந்த கூல் மேன் பிர்லோ. உலகத்துக்குத்தான் டென்ஷன். பிர்லோவுக்கு இல்லை. ஏனெனில், அவர் 2006-ல் உலகக் கோப்பை ஃபைனல் தொடங்குவதற்கு முன், மதியம் ஜாலியாக பிளே ஸ்டேஷனில் விளையாடி விட்டு படுத்துத் தூங்கிவிட்டாராம். பின், மாலை படு கூலாக மைதானத்துக்கு வந்தாராம்!  

 

 

பிர்லோவிடம் மற்ற வீரர்கள் வியப்பது அவரது அமைதி. எவரிடமும் எந்த வம்புதும்புக்கும் போனதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர். எதிரணியினரும் அவரை நேசிப்பர். எந்த இடத்துக்கும் பொருத்தமானவர். ஸ்ட்ரைக்கராக ஜொலிக்க முடியவில்லை. அவரை டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டராக ஆடச் சொன்னார் முன்னாள் பெரிஸிகா க்ளப் பயிற்சியாளர் கர்லோ மஸோன். ‛ஓகே’ என்றார். அந்த இடமாற்றம் அவரது கரியரையே மாற்றியது. அவரது வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இத்தாலி கால்பந்து வரலாற்றையும்...

பிர்லோ

இத்தாலியை ஜெயிக்க வேண்டுமா? யுவென்டஸை வீழ்த்த வேண்டுமா? ஏ.சி.மிலனைத் தோற்கடிக்க வேண்டுமா? சிம்ப்பிள்... பிர்லோவை நிறுத்தி விடுங்கள். அவருக்கு பாஸ் செல்வதை நிறுத்திவிடுங்கள். அவர் மற்றவருக்கு பாஸ் போடுவதை நிறுத்திவிடுங்கள். இத்தாலியை ஜெயித்து விடலாம். யுவென்டஸை வீழ்த்தி விடலாம், ஏ.சி. மிலனை தோற்கடித்துவிடலாம் என்பதே அவரை எதிர்த்து விளையாடிய அணிகளின் கேம் ப்ளான்!

பிர்லோ, நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாடி விட்டார். அதில், இரண்டுமுறை சாம்பியன். ஏ.சி மிலன் சார்பாக... தேசிய அணி இத்தாலிக்காக உலகக் கோப்பையும்  வாங்கியாகி விட்டது. தொடரின் முதல் கோல், அரையிறுதி, ஃபைனலில் அட்டகாசமாக இரு அசிஸ்ட் என,  2006 உலகக் கோப்பையில் தனி முத்திரை பதித்துவிட்டார் ஃப்ரீகிக்கில் கில்லியான பிர்லோ. உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். க்ளப் அளவிலும் எல்லாமே பக்கா. பிர்லோ, யுவென்டஸ் அணியில் இருந்த ஆறு ஆண்டுகளில் அந்த க்ளப், சீரி- ஏ சாம்பியன்!

ஒவ்வொரு கால்பந்து வீரனுக்கும் இரு கனவு. தேசிய அணிக்காக உலகக் கோப்பையை ஏந்த வேண்டும். க்ளப் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் வெல்ல வேண்டும். பிர்லோவின் இரு கனவும் நனவாகி விட்டது. 38 வயதில் ஓய்வு. 21 ஆண்டுகளாக சளைக்காமல் ஓடி விட்டது அவரது கால்கள். இனியாவது இளைப்பாறட்டும்!

மிஸ் யு லெஜண்ட்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்