வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (09/11/2017)

கடைசி தொடர்பு:14:40 (09/11/2017)

ஐந்தாவது தங்கப்பதக்கம் வென்ற சாதனை மங்கை மேரி கோம்! - வெற்றிகுறித்து நெகிழ்வு

ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அவர், செய்தியாளர்களைச் சந்தித்து வெற்றிகுறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். 

மேரி கோம்

ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி, வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நடைபெற்றது. 48 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீராங்கனை மேரி கோம், இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார். நேற்று நடந்த இறுதிப் போட்டியில், மேரி கோமும் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மியும் மோதினார்கள். எதிராளிக்கு வாய்ப்பே வழங்காத மேரி கோம், 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் பதக்கம் வெல்வது, சுமார் ஓர் ஆண்டுக்குப் பிறகு இது முதல் முறையாகும். இத்துடன், ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது

இந்த வெற்றி குறித்து மேரி கோம், `கடந்த பல ஆண்டுகளாக நான் யார் என்பதை தொடர்ச்சியாக நிரூபித்துவந்துள்ளேன். தற்போது,  மீண்டும் நிரூபித்திருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் 51 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டுவந்தேன். எனவே, மற்ற பிரிவில் இருக்கும் வீராங்கனைகள் மற்றும் பிற நாட்டு வீராங்கனைகள் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்போது நான் பங்கேற்ற 48 கிலோ பிரிவில், போட்டியாளர்கள் என்னைவிட உயரமாக இருந்தனர். எனவே, அவர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. இருப்பினும், என் அனுபவத்தால் சவால்களிலிருந்து எதிர்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றேன்' என்றார் நெகிழ்ச்சியோடு.