வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (09/11/2017)

கடைசி தொடர்பு:15:10 (09/11/2017)

ஒரு ரன்கூட கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீரர்!

டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில், ராஜஸ்தானைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர், ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அந்த வீரரின் பெயர், ஆகாஷ் சௌத்ரி. உள்ளூர் போட்டி ஒன்றில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பகவர் சிங் நினைவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், லீக் போட்டி ஒன்றில் திஷா அகாடமி, பேர்ல் அகடாமி ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திஷா அகாடமி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 156 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய பேர்ல் அகாடமி, 36 ரன்களுக்கு சுருண்டது. இதற்குக் காரணம், திஷா அகாடமி இடக்கை வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் சௌத்ரியின் அசத்தல் பௌலிங் ஆகும். அவர், 4 ஓவர்கள் பந்து வீசி, ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இது ஒரு அபூர்வ சாதனை நிகழ்வாகும்.

ஆகாஷ் சௌத்ரி, முதல் மூன்று ஓவர்களில் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கடைசி ஓவரில் நான்கு விக்கெட்டுகளையும் சாய்த்தார். ரன்னே விட்டுக்கொடுக்காமல் இவ்வளவு விக்கெட்டுகளை ஒரு வீரர் வீழ்த்துவது முதல் முறையாகும். சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலிய வீரர் ரிச்சி பெனாட், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3.4 ஓவர்கள் பந்து வீசி ரன்னே விட்டுக் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இந்த வகையில் சாதனையாக உள்ளது.